ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல் வன்மையான கண்டனத்துக்குரியது:மீடியா போரம்
ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (10)கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்தனவுக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் அச்சுறுத்தல் விடுத்து அவரை இழுத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் அடைத்து புகைப்படக் கருவியில் இருந்த மெமரி சிப்பை பறித்தெடுத்தமையை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்திருக்கும் அந்த கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"நீதிமன்ற வளாகத்தில் வைத்து புகைப்படம் எடுப்பதற்கு ஊடகவியலாளருக்கு தடை விதித்து அவரை அச்சுறுத்தியமை ஊடக சுதந்திரத்திற்கெதிரான மிக மோசமான செயல். இச் செயலை ஊடக சுதந்திரத்தை மதிக்கும் அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்.
உழைக்கும் பத்திரிகையாளனின் ஜனநாயக உரிமை, ஊடக சுதந்திரம் என்பவற்றை பறிக்கும் இந்த படு மோசமான செயலை ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் எருவராலும் அனுமதிக்க முடியாது.
ஊடகவியலாளர்களின் கடமைகளை செய்யவிடாது தடுக்கும் இது போன்ற முறைகேடான செயற்பாடுகளை யார் முன்னெடுத்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
ஊடக சுதந்திரத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட குறித்த அந்த பொலிஸ் அதிகாரி மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டு அவர் தொடர்பாக சட்டத்தை மேற்கொள்ளுமாறும் அவமதிக்கப்பட்ட அந்த ஊடகவியலாளருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)