ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன் - II இன் சம்பியனாக Super Warriors 2007 தெரிவு

ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன் - II இன் சம்பியனாக Super Warriors 2007 தெரிவு

எம்.என்.எம்.அப்ராஸ்

ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன் - II இன் சம்பியனாக Super Warriors 2007 தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ஸஹிரியன் பழைய நண்பர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலான மெற்ரோபொலிடன் "ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன் - II" கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் பாடசாலை மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (21) முதல் திங்கட்கிழமை (24) வரை நடைபெற்றது.

ஏழு ஓவர்களைக் கொண்ட இக்கிரிக்கெட் தொடரில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர்களைக் கொண்ட 29 அணிகள் பங்குபற்றின. நொகவுட் முறையில் இடம்பெற்ற இந்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு Super Warriors 2007 மற்றும் Boom Boom ஆகிய அணிகள் தெரிவுசெய்யப்பட்டன.

நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற Boom Boom அணி களத்தடுப்பினை முதலில் தேர்ந்தேடுத்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய Super Warriors 2007 அணி, 7 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது.

64 ஓட்டங்கள் வெற்றி இலக்கு என்ற அடிப்படையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Boom Boom அணி 7 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனையடுத்து 16 ஓட்டங்களினால் Super Warriors 2007 அணி வெற்றி பெற்று ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன் - II இன்  சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஏ.எம். பவாஸும், இந்தப் போட்டித் தொடரின் ஆட்ட நாயகமான ஏ.எம்.பிர்தௌஸும் தெரிவுசெய்யப்பட்டனர்.

பாடசாலை அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் முன்னாள் கல்முனை மேயரும், மெற்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருமான  சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.

மெற்ரோபொலிடன் ஸஹிரியன் பிரிமியர் லீக் சீசன் - II  இல் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட அணிக்கு 25,000 ரூபா பணப்பரிசும் சாம்பியன் கிண்ணமும், இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கு 15,000 ரூபா பணப் பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.