கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஒரு பொது அதிகார சபையே!
றிப்தி அலி
கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஒரு பொது அதிகாரசபையாகும் என தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனால், கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரிக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற தகவல் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் “43 (ஓ)” பிரிவின் கீழே கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஒரு பொது அதிகார சபையாகும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
“ஏதேனும் எழுத்திலான சட்டத்தின் கீழ் தாபிக்கப்படுகின்ற அல்லது உரிமைமளிக்கப்படுகின்ற அல்லது அரசினால் அத்துடன் அல்லது ஒரு பகிரங்க கூட்டுத்தாபனத்தினால் அல்லது ஒரு மாகாண சபையின் நியதிச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட ஏதேனும் நியதிச் சட்டமுறையான குழுவினால் முழுமையாக அல்லது பகுதியளவில் நிதியளிக்கப்பட்ட வாழ்க்கைத் தொழில் அல்லது தொழில்நுட்பக் கல்வியை வழங்குகின்ற நிறுவனங்கள் உள்ளடங்கலாக தனியார் கல்வி நிறுவனங்கள் பொது அதிகார சபையாகும்” என மேற்படி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்மாந்துறையினைச் சேர்ந்த எம்.ஏ ஹசன் என்பவரினால் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பின் போதே குறித்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தகவல் கோரிக்கையாளரினால் கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரிக்கு கடந்த 2022.10.01ஆம் திகதி தகவல் கோரிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மகளிர் அரபுக் கல்லூரியின் நீண்ட மற்றும் குறுகிய கால நோக்கங்கள், குறிக்கோள்கள், அர்சத் மற்றும் டில்சாத் ஆகியோருக்கு இந்த அரபுக் கல்லூரியுடன் உள்ள தொடர்புகள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஒன்பது கேள்விகள் இந்த தகவல் கோரிக்கையில் காணப்பட்டுள்ளன.
“தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி உள்வாங்கப்படவில்லை என எமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதால் உங்களுடைய தகவல் கோரிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய எந்தத் தேவையுமில்லை” என இக்கல்லூரியின் அப்போதைய உப தலைவர் பயாஸ் சலீமினால் 2022.10.13ஆம் திகதி பதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதிலில் திருப்தி அடையாத தகவல் கோரிக்கையாளர், 2022.10.15ஆம் திகதி உப தலைவருக்கு மேன் முறையீட்டினை மேற்கொண்டுள்ளார். எனினும், தகவலறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் குறித்த மேன்முறையீட்டுக்கு பதில் வழங்கப்படவில்லை. இதனால், குறித்த விடயம் தொடர்பில் 2022.11.21ஆம் திகதி ஆணைக்குழுவிடம் தகவல் கோரிக்கையாளரினால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் 2023 ஆம் ஆண்டில் நான்கு தடவைகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது விண்ணப்பதாரருடன் சட்டத்தரணி ஷெரீப் ஏ. நவாஸும் பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான தாரக்க நாணயக்கார, அஸ்லம் அலாவுதீன் மற்றும் தற்போதைய உப தலைவர் சபீர் ஷவாட் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இந்த விசாரணைகளுக்கு மத்தியில் தகவல் கோரிக்கையாளரினாலும் முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியினாலும் தலா இரண்டு தடவைகள் எழுத்து மூல சமர்ப்பணங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரு தரப்பினருடைய எழுத்து மற்றும் வாய்மொழி மூலமான சமர்ப்பணங்களை மிகவும் கவனமாக அவதானித்த பின்னர் கடந்த நவம்பர் 6ஆம் திகதி குறித்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பினை தகவலறியும் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இதன்போதே, 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் “43 (ஓ)” பிரிவின் கீழ் கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி, பொது அதிகார சபையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தகவலறியும் கோரிக்கையில் கேட்கப்பட்ட ஒன்பது கேள்விகளில் ஆறு கேள்விகள் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 43ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘தகவல்’ எனும் பகுதிக்குள் உள்ளடங்கவில்லை எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேயரத்ன, உறுப்பினர்ளான சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்த்தன, சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி மற்றும் ஏ.எம். நஹியா ஆகியோரினாலேயே இந்த தீர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த அரபுக் கல்லூரியினால் சிறுவர் பாதுகாப்பு கொள்கை வெளியிடப்பட்டுள்ளதா? ஆமெனில், சிறுவர் பாதுகாப்பு கொள்கையில் கையொழுத்திடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா?, இந்த கல்லூரியின் வதிவிட முகாமையாளர் யார்? இந்த அரபுக் கல்லூரியில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் யாரும் சட்டத்தரணியினை தொடர்புகொண்டு சத்தியக்கடதாசி பெற்றுக்கொண்ட விடயம் சபைக்குத் தெரியுமா? போன்ற கேள்விகளுக்கு பதலளிக்குமாறு ஆணைக்குழுவினால் முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் இந்த கோரிக்கைகளுக்கான தகவல்களை வெளியிடுமாறும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அவ்வாறில்லாத பட்சத்தில் இந்த தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 39ஆவது பிரிவின் கீழ் தகவல் அதிகாரி மற்றும் பிரதிவாதி ஆகியோருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் எனவும் இந்த மேன் முறையீடு தொடர்பான தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)