29 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்டு கவனிப்பாரற்றுள்ள கல்முனை சிறுவர் பூங்காக்கள்
றிப்தி அலி
கல்முனை மாநகரத்தில் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படும் கடற்கரை சிறுவர் பூங்காக்கள் 29,267,830.00 ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விடயம் தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.
கல்முனை மாநகரத்தில் வாழும் மக்கள் தங்களின் ஓய்வுநேரத்தினை கழிப்பதற்கு ஒழுங்கான இடமொன்றில்லாம் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனினும் இப்பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பூங்காக்கள் முழுமையாக நிறைவு செய்யப்படாமையினால் இதுவரை எதுவித பயன்பாடுகளுமன்றி காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. அது மாத்திரமல்லாமல் கட்டாக்காலி மாடுகளின் தரிப்பிடமாகவும் இந்த பூங்காக்கள் மாறியுள்ளன.
இவ்வாறன நிலையில் கல்முனை மாநகர சபைக்கு மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக கல்முனைக்குடி கடற்கரை சிறுவர் பூங்கா, சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் பூங்கா ஆகியன பல மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விடயம் தெரிய வந்தது.
கல்முனை மாநகர சபையின் பொறியியலாளரினால் வழங்கப்பட்ட தகவிலன் அடிப்படையில் மாநகர சபையின் தகவல் அதிகாரி எம்.எஸ்.வாஜிதாவினால் வழங்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கான பதிலிலேயே இந்த விடயம் தெரியவந்தது.
கல்முனை மாநகர சபையின் பாராமரிப்பின் கீழ் கல்முனைக்குடி கடற்கரை சிறுவர் பூங்கா, சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் பூங்கா மற்றும் மருதமுனை - 03 கடற்கரை சிறுவர் பூங்கா ஆகிய மூன்று பூங்காக்களும் காணப்படுகின்றன.
இதில் கல்முனைக்குடி கடற்கரை சிறுவர் பூங்கா மற்றும் சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் பூங்கா ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளதாக கல்முனை மாநகர சபை தெரிவித்தது.
இந்த நிர்மாணிப் பணிப்பாக நகர திட்டமிடல் அமைச்சினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய 21 மில்லியன் ரூபா நிதியில் கல்முனைக்குடி கடற்கரை சிறுவர் பூங்காவும், 8,267,830 ரூபா நிதியில் சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் பூங்காவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எனினும், எந்தவித பிரயோசமுமற்ற நிலையில் குறித்த இரண்டு சிறுவர் பூங்காக்களும் காணப்படுகின்றன. அது மாத்திரமல்லாமல், 'பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்காக்களில் சிறுவர்கள் விளையாடுவதற்கு தேவையான எந்தவொரு விளையாட்டு உபகரணங்களையும் காண முடியவில்லை' என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பூங்காங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக கல்முனை மாநகர சபைக்கு கிடைக்கப் பெற்ற நிதியானது வேறு எந்த செயற்திட்டத்திற்கும் ஒதுக்கப்படமால் இதற்காகவே முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமல்லாமல், ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக சிறுவர் பூங்காக்களின் நிர்மாணத்திற்காகவே செலளிக்கப்பட்டதாகவும் கல்முனை மாநகர சபை தெரிவித்தது.
"இந்த சிறுவர் பூங்காக்களில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்திட்டங்களை விபரிக்குமாறு" தகவல் அறியும் விண்ணப்பத்தில் கோரியதற்கு, "குறித்த பூங்காக்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டு இன்னும் ஒப்படைக்கப்படவில்லை" என கல்முனை மாநகர சபை பதலளித்தது.
எவ்வாறாயினும் கல்முனைக்குடி கடற்கரை சிறுவர் பூங்கா மற்றும் சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் பூங்கா ஆகியவற்றினை பாதுகாத்து பாராமரிப்பு செய்வதற்காக மாதாந்தம் உத்தேச செலவாக 15,000 ரூபா கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்படுகின்றது.
காவலாளி, பூங்கத் துப்புரவு, பாராமரிப்பு ஊழியர்களுக்கான செலவு போன்றவற்றிற்காகவே இந்த நிதி செலவளிக்கப்படுதாக மாநரக சபை குறிப்பிட்டது. எனினும், மருதமுனை சிறுவர் பூங்காவிற்கு பாராமரிப்பாளர்கள் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை என கல்முனை மாநகர சபை மேலும் தெரிவித்தது.
எவ்வாறாயினும், "குறித்த பூங்காக்களின் கதவுகள் மற்றும் கண்ணாடிகள் மற்றும் கூரை பகுதி போன்ற உடைந்த நிலையில் காணப்படுவதுடன், குறித்த பூங்காக்களின் கட்டிட உள் பகுதிகள் மிகவும் பாழடைந்த நிலையில் குப்பை கூளங்கள் உள்ளதுடன் அங்கு துர்நாற்றம் வீசுகின்றது" என அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
படங்கள்: எம்.என்.எம்.அப்ராஸ்
கல்முனைக்குடி கடற்கரை சிறுவர் பூங்கா
சாய்ந்தமருது கடற்கரை சிறுவர் பூங்கா
Comments (0)
Facebook Comments (0)