'ஹஜ் யாத்திரைக்கு சவூதி இளவரசர் அனுசரனை என சமூக ஊடகங்களில் போலிப் பிரச்சாரம்'

'ஹஜ் யாத்திரைக்கு சவூதி இளவரசர் அனுசரனை என சமூக ஊடகங்களில் போலிப் பிரச்சாரம்'

றிப்தி அலி

சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மத் பின் சல்மானினால் இந்த வருடம் புனித  ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான அனுசரனை வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் தெரிவித்தது.

சுமார் 7 இலட்சத்து 50ஆயிரம் முஸ்லிம்கள் இந்த வருடம் ஹஜ் கடமையினை மேற்கொள்ள இளவரசரினால் அனுசரனை வழங்கப்படவுள்ளதாக குறித்த சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பினை பெற விரும்புபவர்கள் இணையத்தளமொன்றினைக் குறிப்பிட்டு அதன் ஊடாக தங்களை  பதிவுசெய்யுமாறும் குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் உயர் அதிகாரியொருவரை தொடர்புகொண்டு வினவிய போது, "சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இத்தகவல் முற்றிலும் பொய்யானதாகும்" என அவர் கூறினார்.

அத்துடன், இளவரசர் முஹம்மத் பின் சல்மானினால் இந்த வருடம் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக எந்தவித விண்ணப்பங்களும் இதுவரை கோரப்படவில்லை என அவர் குறிப்பிட்டர்.

"குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தள முகவரி சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியும் அல்ல" என தூதரகத்தின் உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பொதுமக்களின் விபரங்களை சட்டவிரோதமாக சேகரிக்கும் நோக்கில் இது போன்று தொடர்ச்சியாக பரப்பப்படும் போலித் தகவல்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.