எசிதிசி காப்புறுதி திட்டத்தின் ஊடாக சொப்ட்லொஜிக் லைபிற்கு 6 கோடி ரூபா இலாபம்
றிப்தி அலி
ஊடகவியலாளர்களுக்கான எசிதிசி காப்புறுதி திட்டத்தின் ஊடாக சொப்ட்லொஜிக் லைப் இன்சுவரன்ஸ் சுமார் 6 கோடி ரூபா இலாபமீட்டியுள்ள விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.
சுமார் 4,044 ஊடகவியலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக 2021ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான காலப் பகுதியில் மூன்று கட்டங்களாக சொப்ட்லொஜிக் லைப் இன்சுவரன்ஸிற்கு 9 கோடி 96 இலட்சத்து 40 ஆயிரம் 324 ரூபா ஊடக அமைச்சினால் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த காப்புறுதி திட்டத்தின் உறுப்பினர்களான ஊடகவியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட 2,509 காப்புறுதி கோரிக்கைகளுக்கு மாத்திரம் 3 கோடி 71 இலட்சத்து 85 ஆயிரத்து 664 நான்கு ரூபா சொப்ட்லொஜிக் லைப் இன்சுவரன்ஸினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, குறித்த காப்புறுதி திட்டத்தின் ஊடாக சொப்ட்லொஜிக் லைப் இன்சுவரன்ஸ் 6 கோடி 24 லட்சம் 54 ஆயிரத்து 660 ரூபா இலாபமீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடணத்தின் அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கான 12 மாத காப்புறுதி திட்டம் 2021ஆம் மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த காப்புறுதித் திட்டத்தினை செயற்படுத்தும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வியத்கம அமைப்பின் முக்கிய உறுப்பினரான அசோக் பத்திராஜவின் சொப்ட்லொஜிக் லைப் இன்சுவரன்ஸிற்கு வழங்கப்பட்டது.
இதற்காக ஊடக அமைச்சினால் 2021.06.03ஆம் திகதி கோரப்பட்ட விலைமனுக் கோரலுக்கு ஆகக் குறைந்த தொகையாக வரியின்றி 6 கோடி 69 இலட்சத்து 86 ஆயிரத்து 773 ரூபா மற்றும் 20 சதத்தினை கோப்ரெட்டி இன்சுவரன்ஸ் குறிப்பிட்டிருந்தது.
எனினும், குறித்த நிறுவனம் தெரிவுசெய்யப்படாமல் இரண்டாவது அதி குறைந்த தொகையினை குறிப்பிட்டிருந்த சொப்ட்லொஜிக் லைப் இன்சுவரன்ஸ் ஊடக அமைச்சின் கொள்வனவுக் குழுவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊடகவியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட 46 இலட்சத்து 90 ஆயிரத்து 496 ரூபா பெறுமதியான 401 காப்புறுதி கோரிக்கைகள் இந்த இன்சுவரன்ஸினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊடகவியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட 5 கோடி 7 இலட்சத்து 48 ஆயிரத்து 78 ரூபா பெறுமதியான 2,509 காப்புறுதி கோரிக்கைகளுக்காக 3 கோடி 71 இலட்சத்து 85 ஆயிரத்து 664 நான்கு ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
இந்த காப்புறுதி திட்டத்தில் உள்வாங்கப்பட்ட ஐந்து ஊடகவியலாளர்கள் மரணமடைந்துள்ளனர். இவர்களுக்காக தலா 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சொப்ட்லொஜிக் லைப் இன்சுவரன்ஸினால் வழங்கப்பட்டுள்ளது.
எசிதிசி காப்புறுதி திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட காப்புறுதி கோரிக்கைகளின் எண்ணிக்கை, அதில் நிதி செலுத்தப்பட்ட காப்புறுதி கோரிக்கைகளின் எண்ணிக்கை, நிராகரிக்கப்பட்ட காப்புறுதி கோரிக்கைளின் எண்ணிக்கை, நிதி செலுத்தப்பட்ட காப்புறுதி கோரிக்கை தொகை ஆகியன தொடர்பில் ஊடக அமைச்சு மற்றும் சொப்ட்லொஜிக் லைப் இன்சுரன்ஸ் ஆகியவற்றுக்கு தகவல் கோரிக்கைகள் சமர்பிக்கப்பட்டன.
சொப்ட்லொஜிக் லைப் இன்சுரன்ஸினால் இந்த தகவல் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், ஊடக அமைச்சில் குறித்த தகவல்கள்இல்லாமையினால் உரிய நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தருவதாக ஊடக அமைச்சு தெரிவித்தது.
இவ்வாறான நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சொப்ட்லொஜிக் லைப் இன்சுரன்ஸ் மற்றும் ஊடக அமைச்சு ஆகியவற்றுக்கு எதிராக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேன் முறையீடு செய்யப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் ஊடக அமைச்சினால் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் குறித்த தகவல்களை வழங்க முடியும் என மேன் முறையீடு தொடர்பான விசாரணைகளின் போது சொப்ட்லொஜிக் லைப் இன்சுரன்ஸ் தெரிவித்தது.
இந்த விடயம் அனைத்து தரப்பினராலும் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கிணங்க ஊடக அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சொப்ட்லொஜிக் லைப் இன்சுரன்ஸினால் வழங்கப்பட்ட பதிலின் ஊடாகவே இந்த விடயங்கள் தெரியவந்தன.
Comments (0)
Facebook Comments (0)