வட மாகாண சுகாதார திணைக்களத்தினால் புறக்கணிக்கப்படும் சிலாவத்துறை வைத்தியசாலை
றிப்தி அலி
மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை, வட மாகாண சுகாதார திணைக்களத்தினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்ற விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரிய வந்துள்ளது.
வட மாகாண சுகாதார திணைக்களத்தினாலும், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினாலும் சிலாவத்துறை வைத்தியசாலையின் உடனடித் தேவைகள் நிறைவேற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில், வட மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இம்மாவட்டத்தில் காணப்படுகின்ற நான்கு பிரதேச வைத்தியசாலைகளில் சிலாவத்துறை வைத்தியசாலைக்கு மாத்திரம் மருத்துவ ஆய்வுகூட பரிசோதகர் இதுவரை நியமிக்கப்பட்டதாக விடயமும் தகவலறியும் விண்ணப்பத்தின் மூலம் வெளியாகியுள்ளது.
சுமார் 35,000 மக்கள் வாழும் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குள் காணப்படுகின்ற ஒரேயொரு வைத்தியசாலை இதுவாகும். அத்துடன் இப்பிரசேத்தில் காணப்படுகின்ற இரண்டு கடற்படை முகாம், இரண்டு இராணுவ முகாம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் கடமையாற்றுகின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சிலாவத்துறை வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த வைத்தியசாலைக்காக நாளாந்தம் சராசரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய 50 மருத்துவ ஆய்வுகூட பரிசோதனைகள் தொண்டனர் அடிப்படையில் பணியாற்றும் மருத்துவ ஆய்வுகூட பரிசோதகரின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தெரிவிக்கின்றது.
இப்பரிசோதனையினை வைத்தியசாலையிலேயே மேற்கொள்வதற்காக கடந்த 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகூட பரிசோதகருக்கான ஆளனி இன்று வரை வெற்றிடமாகவே காணப்படுகின்றது எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை குறிப்பிட்டது.
எனினும், இந்த வைத்தியசாலையை விட மிகக் குறைவான 15 - 20 மருத்துவ ஆய்வுகூட பரிசோதனைகளை நாளாந்தம் மேற்கொள்ளும் ஏனைய மூன்று வைத்தியசாலைகளுக்கும் நிரந்த மற்றும் பதில் அடிப்படையில் மருத்துவ ஆய்வுகூட பரிசோதர்கள் நியமிக்கப்பட்டுள்ள விடயம் தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
"எவ்வாறாயினும், இவ்வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட பரிசோதகர் வெற்றிடத்தினை நிரப்புவதற்கான கோரிக்கை தொடர்ச்சியாக உரிய தரப்பினருக்கு முன்வைக்கப்பட்டு வருகின்றது' என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தகவல் அதிகாரியான திருமதி டீ.எம்.பி. லோகு மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வைத்தியசாலைக்காக தொண்டர் அடிப்படையில் செயற்படும் மருத்துவ ஆய்வுகூட பரிசோதகரின் மாதமொன்றுக்கான 30 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே செலுத்தி வருவதாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினரும் முசலி பிரதேச சபை உறுப்பினருமான முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மாவட்டத்திலுள்ள ஏனைய மூன்று வைத்தியசாலைகளிலும் கடந்த 2019ஆம், 2020ஆம் ஆண்டுகளில் மருத்துவ ஆய்வுகூடம் திறக்கப்பட்ட போதிலும், இங்கு 2022 இலேயே திறக்கப்பட்டுள்ளது.
'இதற்கு வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் திட்டமிட்ட இழுத்தடிப்பே பிரதான காரணமாகும்" என அவர் குற்றஞ்சாட்டினார்.
"எனினும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முயற்சியின் காரணமாவே, மருத்துவ ஆய்வுகூடத்திற்கான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது" என முஜீபுர் ரஹ்மான் மேலும் கூறினார்.
இம்மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரான றிசாத் பதியுதீன், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பலம்பொறுந்திய அமைச்சராக காணப்பட்டார். அது போன்று கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுகின்ற காதர் மஸ்தான், தற்போது இராஜாங்க அமைச்சராக செயற்படுகின்றார்.
இவர்கள் இருவரும் இந்த வைத்தியசாலையின் முக்கிய தேவைகளில் ஒன்றான மருத்துவ ஆய்வுகூட பரிசோதகரை நியமிப்பதற்கான எந்த முயற்சியினையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமையே (30) தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது என இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
"இது தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் விரைவில் கலந்துரையாடி நிரந்த தீர்வொன்றினை பெற்றுக்கொடுப்பேன்" என அவர் உறுதியளித்தார்.
Comments (0)
Facebook Comments (0)