RTI ஆணைக்குழு யாழில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்
உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு, செப்டம்பர் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பத்திரிகைக் கழகங்கள் மற்றும் வட மாகாண கல்வியாளர்களுடன் இணைந்து தொடர் கலந்துரையாடலை நடத்தியது.
யாழ். மாவட்ட செயலகத்தில் RTI ஆணைக்குழு மற்றும் மாவட்ட செயலாளர் மகேசன் தலைமையில் வட மாகாண பிரதேச செயலகங்கள், அரச அதிகாரிகள் மற்றும் சமூகத்தினருடன் இணைந்து கடந்த ஐந்து வருடங்களாக RTI சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏற்பட்ட வெற்றிகள் மற்றும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஆணைகள், நில விவகாரங்கள், பொது நிதி முகாமைத்துவம் தொடர்பான நிர்வாகப் பிரச்சினைகள், ஊழல்களை வெளிப்படுத்துவதில் அரச நிறுவனங்களின் முறையான தொழிற்பாடு போன்ற பல்வேறு வழக்குகளில் தகவல்களை வெளியிடுவதற்கு வழிவகுத்தது.
கூட்டத்தில் பேசிய சமூகப் பிரதிநிதிகள், தகவல் கோரிக்கையை செயல்படுத்தும் வகையில் பகிரங்க அதிகார சபை இன்னும் திறமையாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தும் போது, சில பகிரங்க அதிகார சபைகளால் ஊக்கமளிக்கப்படாத நிகழ்வுகளையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
உரிய கால வரையறையினுள் பகிரங்க அதிகார சபை தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை ஆணைக்குழு வலியுறுத்துகிறது. மேலும் கால வரையறையினை புறக்கணித்தால் அல்லது ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு கீழ்ப்படியவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது.
29ஆம் திகதி, வட மாகாண பத்திரிக்கை ஆசிரியர்கள், இதழாசிரியர் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. சில அரச அலுவலகங்களில் முறையாகச் செயற்படும் தகவல் உத்தியோகத்தர்கள் இல்லை என இதன்போது ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
பகிரங்க அதிகார சபைகள் தகவல் கோரிக்கையை கவனிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை அவர்கள் அவதானிப்பதாகவும் அது தொடர்பில் உடனடியாக இந்த விவகாரங்கள் குறித்து ஆராய ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டிக்கொண்டனர்.
அதிக எண்ணிக்கையிலான வழக்குகளில் தகவல்களை வெளியிடும் ஆணைக்குழுவின் பணியைப் பாராட்டினாலும், பகிரங்க அதிகார சபையின் தகவல் கோரிக்கையை புறக்கணிக்கும் போக்கு தொடர்ந்தால், தகவல் அறியும் சட்டம் குடிமக்களுக்கு சிறியளவிலேயே பயன்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான அனைத்து குறிப்பிட்ட நிகழ்வுகளும் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று பதிலளித்த ஆணைக்குழு, மேலும் அத்தகைய விடயங்களை ஆணைக்குழு விசாரணை செய்யும் என்று கூறியது.
கொவிட் 19 தொற்று மற்றும் நிதி நெருக்கடியால் ஏற்பட்ட அனைத்து சிரமங்களையும் பொருட்படுத்தாமல், வட மாகாணத்தில் உள்ள குடிமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தீவிரமாகப் பயன்படுத்துவதைக் கண்டு ஆணைக்குழு மகிழ்ச்சியடைகிறது.
சட்டத்தின் இடைவெளி காரணமாக, ஆணைக்குழுவால் நாடளாவிய ரீதியில் மாகாண அலுவலகங்களை அமைக்க முடியாவிட்டாலும், நாடளாவிய ரீதியில் மாகாண அமர்வுகளை தொடர்ந்து நடத்துவதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
உண்மையில், இது கடந்த எட்டு மாதங்களில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மூன்றாவது அமர்வு ஆகும். வருங்காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகளை அதிகரிக்க ஆணைக்குழு எதிர்பார்க்கின்றது.
மேலும் RTI சட்டத்தைப் பயன்படுத்துவதில் குடிமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க மின்னஞ்சல் மூலம் முறையீடுகளை ஏற்றுக்கொண்டு, Zoom தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பில் அதன் வழக்கமான மேன்முறையீட்டு அமர்வுகளை நடத்தியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)