ACMCஇன் அம்பாறை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து ஜவாத் நீக்கப்பட்டாரா?

ACMCஇன் அம்பாறை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து ஜவாத் நீக்கப்பட்டாரா?

Claim: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் நீக்கப்பட்டார் என பேஸ்புகில் பகிரப்பட்டு வருகின்றன.

Fact: இது தவறான பதிவாகும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் நீக்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் தெரிவிப்பு

"அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நீக்கம்!" எனும் தலைப்பிட்ட பதிவொன்றினை Kalam1st என்ற பேஸ்புக் பக்கத்தில் நேற்று (23.10.2024) செவ்வாய்க்கிழமை பி.ப 2.38 மணியளவில் பதிவேற்றப்பட்டிருந்தது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் - தனித்து போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் பக்கச்சார்பாக செயற்படுவதாக ஏனைய வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமைய தலைவர் றிசாத் பதியுதீன் - இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார் எனவும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்த 'கல்முனை ஜவாத் நீக்கம்!' எனும் பதிவொன்றினை பூமுதீன் மலிக் தனது பேஸ்புகில் நேற்று (23.10.2024) செவ்வாய்க்கிழமை பதிவேற்றியுள்ளார்.

குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - அம்பாறை மாவட்ட மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து  - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் - தனித்து  போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் பக்கச்சார்பாக செயற்படுவதாக ஏனைய வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமைய தலைவர் றிசாத் பதியுதீன் - இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். என்றே கூறப்படுகிறது.

மகா தலைவரின் - இந்த முடிவு பாராட்டத்தக்கது.

வட்டாரத்தை வெல்ல முடியோதாரை - மக்கள் காங்கிரஸில் இணைத்தது அறியாமை...."

இவ்வாறான நிலையில் "ACMC - அம்பாறை மாவட்ட செயற்குழுவின் தற்காலிக தலைவராக காதர் நியமனம்!" என்ற பதிவொன்றினை இன்று (23.10.2024) புதன்கிழமை பூமுதீன் மலிகின் பேஸ்புகில் காணக் கிடைத்தது.

Fact Check/Verification

எனினும், இந்த பதவி நீக்கம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலோ அல்லது அக்கட்சியின் தலைவரான றிசாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலோ எந்தவொரு அறிவித்தலும் வெளியாகவில்லை.

அத்துடன் எந்தவொரு ஊடகங்களிலும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாதின் பதவி நீக்கம் தொடர்பில் எந்தவொரு செய்தியையும் விடியல் இணையத்தள குழுவினரின் தேடலின் போது காண முடியவில்லை.

இவ்வாறான நிலையில் குறித்த செய்தியின் உண்மைத் தன்மையினை தேடும் நோக்கில் ஜவாத் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முக்கிய சொற்களை தமிழ் மொழியில் கீவேர்ட் தேடலை விடியல் இணையத்தளம் முன்னெடுத்தது.

இதன்போது, "முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாதை தொடர்புகொண்டு இது தொடர்பாக கேட்டபோது வதந்திகளை நம்ப வேண்டாம். பொய்களைப் பரப்பி சிலர் மக்களை குழப்புகின்றார் எனத் தெரிவித்ததாக" பேஸ்புக் ஆர்வலரான சக்கி செயின் தனது பேஸ்புகில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பிரதி செயலாளருமான ஜுனைடீன் மான்குட்டியின் பேஸ்புக் பதிவொன்றை அவதானிக்க முடிந்தது.

குறித்த பதிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் நீக்கப்பட்டமை முற்றியும் பொய் எனவும் குறித்த பதவியில் தற்போதும் ஜவாதே செயற்படுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறான நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (23) புதன்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். இதன்போது அவர் பல தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

இந்தக் கூட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவி நீக்கம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் எந்தவொரு அறிவிப்பினையும் மேற்கொண்டதாக விடியல் இணையத்தள குழுவினரின் தேடலின் போது அவதானிக்க முடியவில்லை.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று அம்பாறை மாவட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கூட்டங்களிலும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் பங்கேற்றுள்ளதை பேஸ்புக் வாயிலாக விடியல் இணையத்தள குழுவினரினால் அவதானிக்க முடிந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த பதிவுகளின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்தும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீனை விடியல் இணையத்தளம் தொடர்புகொண்டு வினவியது.

இதன்போது, "குறித்த செய்தி முற்றிலும் பொய்யானது" எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன், "அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவியில் எந்தவொரு மாற்றத்தினையும் மேற்கொள்ளவில்லை" என அவர் தெரிவித்தார்.

அத்துடன் எமது கட்சியின் வெற்றியினை தாங்க முடியாதவர்களினால் பரப்பப்படுகின்ற இது போன்ற போலிச் செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Conclusion

இதற்கமைய விடியல் இணையத்தள குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் நீக்கப்படவில்லை. அவர் நீக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி பொய்யானதாகும்.

Results: False

இது போன்ற போலியான செய்திகளை நீங்கள் சமூக ஊடகங்களில் அவதானித்தால் +94771039595 எனும் விடியல் இணையத்தளத்தின் வட்ஸ்அப் இலக்கத்திற்கு அறிவிக்க முடியும். குறித்த செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆய்வு செய்ய எமது குழுவினர் தயாராக உள்ளனர்.