அம்பாறை மாவட்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலிருந்து றிசாத் பின்வாங்குகிறாரா?
அம்பாரை மாவட்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் பின்வாங்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையுமில்லை என அக்கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
'அம்பாரை மாவட்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கவுள்ள அமைச்சர் ரிசாத்' எனும் தலைப்பிலான செய்தியொன்று Kalmunai today news எனும் பேஸ்புக் பக்கத்தில் நேற்று (17) பதிவேற்றப்பட்டிருந்தது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடகப் பிரிவினைச் சேர்ந்த சப்னி எனும் நபரின் பெயரிலேயே இந்த செய்தி பதிவேற்றப்பட்டிருந்தது.
"திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம்கள் மாவட்டத்தை வென்று போனஸ் ஆசனத்தை கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தை தான் ஆரம்பத்திலிருந்தே உணர்ந்து கொண்டுள்ளதாகவும் அதனால் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் சமூக வெற்றிக்காக மாவட்ட தேர்தல் களத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரச்சார நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாதெனவும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்" எனவும் குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
"கடந்த ஒரு வார காலமாக அம்பாரை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்ட மேடைகளில் அவரை கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்" எனவும் குறித்த செய்தியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி பதிவேற்றப்பட்டதிலிருந்து இன்று (17) வெள்ளிக்கிழமை பி.ப 7.30 மணி வரை முயடஅரயெi வழனயல நெறள இன் பேஸ்புகில் பதிவேற்றப்பட்ட செய்தியினை 388 பேர் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
அது மாத்திரமல்லாமல் பலர் வட்ஸ்அப் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் இந்த பதிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.
எனினும், "குறித்த செய்தியில் எந்தவித உண்மையுமில்லை" என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார் தெரிவித்தார்.
குறிப்பாக இதுபோன்ற எந்தவித தீர்மானத்தினையும் கட்சி உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் கட்சித் தலைவர் றிசாத் பதியுதீன் ஏற்கனவே கலந்துகொண்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் விரைவில் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக சுபைர்தீன் ஹாஜியார் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனது பெயரில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த செய்திக்கும் தனக்கும் எந்தவித தொடர்புமில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடகப் பிரிவினைச் சேர்ந்த சப்னி பேஸ்புகில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)