எங்களை விசாரிக்க முன்னர் கட்சித் தலைவரை விசாரணை செய்ய வேண்டும்: அலிசப்ரி ரஹீம்
எங்களை விசாரிப்பதற்கு முன்னர், எமது கட்சியின் தலைவரை விசாரணை செய்ய வேண்டும் என உயர்பீடத்தினரிடம் கோரிக்கை விடுப்பதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பில் தெளிவுபடுத்தும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினரின் புத்தளம் இல்லத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறிகையில்,
"சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் புத்தளம் மக்கள் என்னை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். என்னை நம்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. எனவே, எதிர்க் கட்சியோடு அமர்ந்துகொண்டு என்னால் எனது தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது.
எனது தனிப்பட்ட சுக போகங்களுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. சம்பாதிக்க வேண்டிய தேவையும் இல்லை. நான் மக்களுக்கு சேவையாற்ற வந்திருக்கிறேன். புத்தளம் மக்கள் சார்பில் என்னால் முன் வைக்கப்படுகின்ற கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் நான் ஆதரவு வழங்குவேன்.
அந்த வகையில் தற்போதுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி, 20ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கினேன். இன்றுவரை ஆளும் அரசு சார் ஆதரவு உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறேன்.
நான் மட்டுதல்ல அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான ரிஷாத் பதியுதீனும் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கவே விரும்பினார். நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அரசுக்கு ஆதரவு கொடுப்போம் என்றும் அதற்காக பேசுமாறும் கூறினார்.
ஆனாலும், இறுதி நேரத்தில் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் அரச தரப்பில் உள்ள முக்கியஸ்தர் ஒருவரின் உத்தரவில் தலைவரை தவிர, ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதற்கு அ.இ.ம.கா கட்சி உடன்பட்டுள்ளதாகவும் பேருவளையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மரஜான் பளீல் என்னிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து, 20 ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கும் நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன் தலைவர் ரிஷாத் பதியுதீனை நானும், பாராளுமன்ற உறுப்பினர்களான முஷாரபும், இஷாக் ரஹ்மானும் பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினோம்.
அப்போது , உங்களின் விருப்பப்படி 20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு வாக்களிக்குமாறும், இவ்வாறு நான் சொன்னதாக வெளியிலோ அல்லது ஊடகங்களிலோ சொல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
தலைவர் அன்று சொன்ன ஒரே வார்த்தைக்காக இது பற்றி நாம் யாரும் வாய் திறக்கவில்லை. ஆனாலும், தனது அரசியல் தேவைக்காக எங்களை கயவர்கள் என்று சொல்லி மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக பாராளுமன்றத்தில் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றியிருந்தார்.
எனவே, 20க்கு வாக்களிக்க தான் சொல்லவில்லை என்றால், புத்தளம் பெரிய பள்ளிக்கு வந்து நான் அப்படிக் கூறவில்லை என்று சத்தியமிட்டு சொல்லுமாறு அன்பாக கேட்கிறேன்.
அத்தோடு, அடுத்த மாதம் 4, 5 மற்றும் 9 ஆகிய மூன்று தினங்களில் நாம் விரும்பும் ஒரு நாளில் விசாரணைக்கு வருமாறும் கட்சியின் உயர்பீடம் அழைப்பு விடுத்துள்ளதாக சமூக ஊடகம் மூலம் அறிந்துகொண்டேன்.
உண்மையில், கட்சியால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்காகவும் செல்லுவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால், கட்சியால் முன்னெடுக்கப்படும் அந்த விசாரணை வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
அவ்வாறு விசாரணை நடத்த தயார் என்றால் அந்த விசாரணைக்கு முகம் கொடுக்க நாமும் தயார் . மூடிய அறைக்குள் விசாரணை நடத்த நாம் அனுமதிக்கமாட்டோம். நான் புத்தளம் மக்களின் நம்பிக்கைக்கு உரிய வகையில் செயற்படுவேன். அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே எனது கடமையாகும். அதன் அடிப்படையில் தான் எனது அரசியல் பயணமும் தொடர்கிறது.
அண்மையில் புதிய அமைச்சரவை நியமனத்தின் போது இராஜாங்க அமைச்சு ஒன்றை பொறுப்பெடுக்குமாறு அரச தரப்பினால் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனினும், புத்தளம் மக்கள் சார்பில் என்னால் 16 அம்ச கோரிக்கைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடத்தில் முன்வைக்கப்பட்டது.
அந்த 16 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக இருந்தால், பதவிகள் பெறுவது தொடர்பில் யோசிக்கலாம் என அரச தரப்பினருக்கு எடுத்துக் கூறினேன். இந்த நிலையில் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாகவும், அந்த கோரிக்கைகளில் உடனடியாக செய்யக் கூடியவற்றை செய்துகொடுப்பதாகவும் ஏனைய விடயங்களை கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்து தருவதாகவும் அரச தரப்பினால் எனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுவும் புத்தளம் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். எனவே, அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியொன்றை பெறுவது தொடர்பில் எனது கட்சி ஆதரவாளர்கள், புத்தளத்தில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் உலமாக்கள் ஆகியோரிடத்தில் ஆலோசனை பெற்று வருகிறேன்.
இதேவேளை, அரசுக்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டமானது எதிர் தரப்பினரால் அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு போராட்டமாகும்.
ஜனாதிபதி, மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் விலகி, எதிர் தரப்பினருக்கு ஆட்சி செய்ய சந்தர்ப்பம் கொடுத்தாலும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை பாதுகாப்பது கஷ்டமாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சி மாற்றம் தீர்வு கிடையாது. சகல கட்சித் தலைவர்களும் ஒரே மேசையில் அமர்ந்து பேசுவதுதான் இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)