சம்மாந்துறையில் உருமய அளிப்பிற்கு அடையாளம் காணப்பட்டோரில் 40% மாத்திரமே காணி உரிமம் வழங்கல்
சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குள் உருமய அளிப்பிற்கு அடையாளம் காணப்பட்டோரில் 40 சதவீதமானோருக்கு மாத்திரமே காணி உரிமம் வழங்கப்பட்டுள்ள விடயம் தகவல் கோரிக்கையின் ஊடாகத் தெரிய வந்துள்ளது.
உருமய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் அதிகூடிய காணி உரிமம், சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குள்ளேயே வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, 1,868 பேர் உருமய அளிப்பிற்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 1,145 பேர் பேர்மிற் உத்தரவுப் பத்திரத்தையும் 723 பேர் அளிப்பு உத்தரவுப் பத்திரத்தினையும் கொண்டுள்ளனர்.
இவர்களில் 762 பேருக்கு மாத்திரமே உருமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 29 கிராம அலுவலகர் பிரிவிலும் குறித்த திட்டத்தின் கீழ் காணி உரிமம் வழங்கப்பட்டுள்ளன.
இதில் அதிகூடிய 137 பேர் சென்னல் கிராமம் - 01 கிராம அலுவலகர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த கிராம சேவகர் பிரிவிலேயே அதிகூடிய 265 பேர் உருமய அளிப்பிற்கு அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
உருமய காணி உரிமம் வழங்குவதற்காக கடந்த 2024.01.29ஆம் திகதி காணி ஆணையாளர் நாயகத்தினால் விசேட அறிவித்தலொன்று அனைத்து பிரதேச செயலாளர்கள், அனைத்து மாகாண காணி ஆணையாளர்கள் மற்றும் அனைத்து உதவி காணி ஆணையளர்கள் ஆகியோருக்கு விசேட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உருமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி பெறுவதற்காக கோரிக்கைக் கடிதம், பேர்மிற் உத்தரவுப் பத்திரம் அல்லது அளிப்பு உத்தரவுப் பத்திரம் ஆகியவற்றின் பிரதி, கிராம உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் பிரதி போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
இதேவேளை, இந்த திட்டத்தின் ஊடாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவதற்காக தெரிவு செய்யப்படும் பயனாளிகளிடம் இருக்க வேண்டிய தகைமைகள் தொடர்பில் காணி ஆணையாளர் நாயகத்தினால் கடந்த 2023.12.21ஆம் திகதி அனைத்து பிரதேச செயலாளர்கள், அனைத்து மாகாண காணி ஆணையாளர்கள் மற்றும் அனைத்து உதவி காணி ஆணையளர்கள் ஆகியோருக்கு விசேட கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
1969ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க சட்டம், 1981ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க சட்டம், 2022ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க திருத்தச் சட்டம், 1935ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழே பேர்மிற் உத்தரவுப் பத்திரமும் அளிப்பு உத்தரவுப் பத்திரத்திமும் வழங்கப்பட்டுள்ளன.இக்காணிகளுக்கு பூரண
உரிமையினை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவிற்கு பாராளுமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, கடந்த 2023.12.06ஆம் திகதி சுற்றுல்லா மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடந்த 2023.12.11ஆம் திகதி அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறக்காமம் - 02, வாங்காமத்தினைச் சேர்ந்த எம்.எம். சஜீத் அஹமதினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் தகவல் அதிகாரியான உதவிப் பிரதேச செயலளார் யூ.எம். அஸ்லமினால் வழங்கிய பதிலின் ஊடாகவே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
Comments (0)
Facebook Comments (0)