அஷ்ரபின் புகைப்படம் ஒரு காட்சிப் பொருளல்ல: அமான் அஷ்ரப்

அஷ்ரபின் புகைப்படம் ஒரு காட்சிப் பொருளல்ல: அமான் அஷ்ரப்

றிப்தி அலி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரபின் புகைப்படம், தேர்தல் பிரசாரத்திற்கான ஒரு காட்சிப் பொருளல்ல என அவரது ஒரேயொரு வரிசான அமான் அஷ்ரப் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

"மாமனிதர் அஷ்ரபின் புகைப்படத்தினை தேர்தல் காலத்தில் மாத்திரம் பயன்படுத்துவது. அதன் பின்னர் தலைவரை மறந்துவிடுவது போன்ற நிலைப்பாட்டிலேயே இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஒகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரபின் புகைப்படம் தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது பரவலாக பயன்படுத்தப்படுகின்றது.

இது தொடர்பில் அவரது ஒரேயொரு வரிசான அமான் அஷ்ரப், தனது முகநூல் பக்கத்தில் கடந்த ஜுன் 10ஆம் திகதி பதிவொன்றினை பதிவேற்றிந்தார். அவரின் இந்த பதிவினை அடிப்படையாக வைத்து அமான் அஷ்ரபுடனான நேர்காணலொன்றை விடியல் இணையத்தளம் மேற்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


குறித்த நேர்காணலின் முழுமை:

கேள்வி: மறைந்த தலைவர் அஷ்ரப் மரணித்து 20 வருடங்கள் கழிந்துள்ளன. இந்த காலப் பகுதியில் இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் அவரது புகைப்படத்தினை பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் மறைந்த தலைவரின் புகைப்படத்தினை பயன்படுத்துவதற்கு எதிராக தீடிரென நீங்கள் முகநூலி பதிவிட்டமைக்கான காரணம் என்ன?

பதில்: மறைந்த தலைவரின் புகைப்படத்தினை தேர்தல் காலத்திலேயே காண முடிகின்றது. வாக்குகளை சூரையாடும் நோக்கிலேயே அவரின் புகைப்படத்தினை தேர்தல் காலங்களில் அதிகமதிகம் பயன்படுத்தப்படுகின்றனர்.

ஏனைய காலங்களில் அவரின் புகைப்படத்தினை எந்தவொரு அரசியல்வாதிகளும் பயன்படுத்துவதில்லை. முஸ்லிம் மக்களின் வாக்கினை கவரும் முயற்சியாகவே இது காணப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் இதுவொரு பொதுவான நடைமுறையாகிவிட்டது.

தலைவரின் புகைப்படத்தினை யாராவது பாவிக்கின்றார்கள் என்றால், அவர்கள் அவரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதே அர்த்தமாகும். இதனால் அவருடைய கனவுளையும் அரசியல் கொள்கைகளையும் நிறைவேற்றுவதற்காக அவர்கள் அரும்பாடுபட வேண்டும்.

எனினும் இன்றுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் அதனை காணவில்லை. அத்துடன் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் அஷ்ரபின் கொள்கைகளை மறந்து செயற்படுகின்றனர். இவற்றினையெல்லாம் கடந்த 20 வருடங்களாக பார்த்துக்கொண்டிருந்த நிலையே குறித்த பதிவினை பேஸ்புகில் அண்மையில் பதிவேற்றியிருந்தேன்.

கேள்வி: இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளீர்களா?

பதில்: மறைந்த தலைவரின் புகைப்படத்தினை பயன்படுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் இல்லை. ஆனால் குறித்த புகைப்படத்தினை ஏனைய நபர்களினால் பயன்படுத்த முடியுமா? அல்லது இல்லையா? என்பது தொடர்பான கலந்துரையாடல் ஒரு பாரிய பரப்பாகும்.

அதேவேளை, மறைந்த தலைவரின் படத்தினை பயன்படுத்த யாருக்கும் தகுதியில்லை என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஏனென்றால் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியினை உருவாக்கியவர் அவர். அதனால், அவரின் புகைப்படத்தினை அக்கட்சியினாரால் பயன்படுத்த முடியும்.

எனினும் தேர்தல் காலங்களில் பயன்படுத்திவிட்டு பின்னர் அவரை மறப்பதே கவலையளிக்கின்றது. மறைந்த தலைவரின் படத்தினை பயன்படுத்தினால் அவர் போன்று எப்போதும் செயற்பட வேண்டுமே தவிர, நயவஞ்சகர் போன்று அவரின் புகைப்படத்தினை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் ஒருபோதும் செயற்பட முடியாது.

கேள்வி: நீங்கள் அரசியலில் நுழைவதற்காகவே குறித்த பதிவினை தேர்தல் காலத்தினை அடிப்படையாக வைத்து தீடிரென பதிவிட்டதாக சமூக ஊடங்களில் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: சமூகத்திற்கு நன்மை செய்வதற்காக வேண்டி அரசியலுக்கு நுழையத் தேவையில்லை. ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தங்களுக்கு முடிந்த வகையில் பல்வேறு விடயங்களை தொடர்ச்சியாக சமூகத்திற்காக மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், அதற்கு சில தடைகள் உள்ளன. அப்போது அரசியலில் நுழைய முடியும். அரசியலில் நுழைவதற்கு நான் ஒருபோதும் எதிர்ப்பல்ல. அது ஒரு நபரின் இறுதிப் பயணமாகும்.

ஒரு அரசியல் குடும்பத்தில் தான் நான் பிறந்து, வளர்ந்தது. இதனால் நான் நேரடி அரசியல் எப்போதே களமிறங்கியிருக்க முடியும். எனினும் குடும்ப அரசியலுக்கு எனது தந்தை ஒருபோது ஆதரவளிக்கவில்லை.

தலைவர் மரணிப்பதற்கு முன்னர், எங்களின் குடும்பத்தினை சேர்ந்த மிக நெருக்கமான ஒருவர் தலைவரிடம் வந்து, அமானை அரசியலில் களமிறக்கலாம் தானே எனத் தெரிவித்தார்.

இது அமானின் தீர்மானம். அவருக்கு விருப்பமென்றால் அவர் எப்போதும் அரசியலில் நுழையாலம். இந்த அரசியல் தியாகத்தினை செய்ய அவர் தயார் என்றால் களமிறங்கவும் முடியும்.

அதற்கு நான் எப்போதும் ஆதரவளிப்பேன் என தலைவர் அவருக்கு பதிலளித்தார். இதன் மூலம் விளங்குவது என்னவென்றால் நான் அரசியலில் நுழைவதற்கு எனது தந்தையின் ஆசிர்வாதம் எப்போதே கிடைத்துவிட்டது என்பதாகும்.  

கேள்வி: தங்களில் குறித்த பதிவில் பெரும் எண்ணிக்கையிலான பின்னூட்டம் நீங்கள் அரசியல் நுழைய வேண்டும் என்ற கோரிக்கையாக காணப்பட்டது. இது தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: அரசியிலில் நுழைவதற்கான அழைப்பு பல அரசியல் கட்சிகளிலிருந்து எனக்கு பல தடவைகள் வந்துள்ளது. எனினும் குறித்த கட்சிகளின் பெயர்களை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

அவர்களின் அழைப்புகளிற்கு இதுவரை சாதகமான பதில்கள் எதனையும் நான் வழங்கவில்லை. அது மாத்திரமல்லாமல் இந்த பாராளுமன்ற தேர்தலில் நான் களமிறங்குவேன் என பலர் எதிர்பார்த்தனர். அது நடைபெறவில்லை.

ஆனால் அரசியல் நுழையும் நோக்கம் எதுவும் இல்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. குர்ஆன் வசனமொன்றினை அடிப்படையாக வைத்து மறைந்த தலைவர் பாராளுமன்றத்தில் உரையாயொன்றினை நிகழ்த்தியிருந்தார். அதாவது மக்களில் மாற்றம் ஏற்படாத வரை மக்கள் நினைக்கும் மாற்றத்தினை ஒருபோது சமூகத்தில் கொண்டுவர முடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது எனக்கு மாத்திரம் பொருத்தமான ஒன்றல்ல. புதிதாக அரசியலுக்கு நுழைக்கின்ற அனைவருக்கும் இது பொருந்தும். மக்கள் மாற்றத்திற்கு தயார் இல்லாத நிலையில் யாரும் அரசியலுக்கு வந்து எதுவும் செய்ய முடியாது.  

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய நிலை தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.

பதில்: ஒரு காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்காக எனது குடும்பம் உயிரைக் கொடுக்கவும் தாயார இருந்தது. எனினும் இந்த விடயம் தெரியாது இன்றுள்ள ஒரு சில இளைஞர்கள் எனது குடும்பத்தினை எப்போதும் சமூக ஊடங்களில் விமர்ச்சிக்கின்றனர்.

இவர்கள் யாரும் மறைந்த தலைவரினை ஒருபோதும் கண்டிருக்கமாட்டார்கள். தலைவர் இருந்திருந்தால் கட்சி தற்போதுள்ள நிலைக்கு ஒருபோதும் சென்றிருக்காது. ஒரு காலத்தில் ஏனைய இன மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை கௌரவப்படுத்தினர்.

ஆனால் அது இன்றில்லை. அந்தளவிற்கு எமது கட்சி சீரழிக்;கப்பட்டுள்ளது. இது மிகவும் கவலையாக உள்ளது. ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மதிப்பிற்குரிய கட்சி. ஆனால் இன்று அக்கட்சியினை நினைத்தாலே வெட்கமாக உள்ளது.

கேள்வி: இன்றைய கால கட்டத்தில் பல கட்சிகள் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநித்துவப்படுத்துகின்றன. இது தொடர்பில் தங்களின் கருத்து என்ன?  

பதில்: இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. அதுவே, இலங்கை வாழ் முஸ்லிம்கள் - பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதற்கான பிரதான காரணமாகும்.

தலைவர் மரணிக்காமல் இருந்திருந்தால் இன்றைய சூழ்நிலையில் நிச்சயமாக இரண்டு கட்சிகளுடன் பயணித்திருக்கமாட்டார். கடந்த 10 வருடங்களாக இலங்கை முஸ்லிம்ளுக்கு பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் முஸ்லிம்களின் உரிமைக்காக போராடுகின்றோம் என கூறிக்கொள்ளும் கட்சிகள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இதுவரை ஐக்கியமாக இணைந்து எந்தவொரு முடிவினையும் எடுக்கவில்லை.

சமூகத்திற்கு ஏதாவது பிரச்சினை வருகின்ற சமயத்தில் ஓரிரு அறிக்கைகளை வெளியிடுவதே எமது பணி என இந்த முஸ்லிம் கட்சிகள் நினைக்கின்றன. முஸ்லிம்களுக்கு மாத்தரிமன்றி தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை  பேசுவதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரபினால் உருவாக்கப்பட்டது.

அது மாத்திரமல்லாமல், பாரிய கட்சிகளில் தங்கியிருக்காது சுயாதீனமாக இருக்கும் போதே சிறுபான்மை அரசியல்வாதிகள் சமூகத்திற்கு பலமாக குரல்கொடுக்க முடியும் என தலைவர் கருதியதனாலேயே முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார்.

ஆனால் இன்றுள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளும் பாரிய கட்சிகளின் ஊதுகுழலாகவே செயற்படுகின்றது. தலைவர் மறைந்த நாளிலிருந்து இந்த கட்சிகள் முஸ்லிம்களின் நன்மைக்காக எதுவும் பேசுகிறதா என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.

நாங்கள் இலங்கையர்கள், ஆனால் எங்களுக்கும் வழங்க வேண்டிய உரிமைகள் ஒருபோதும் நிராகரிக்க முடியாது என்பதனை பாராளுமன்றத்தில் ஒற்றுமையான குரலாக எழுப்ப வேண்டும். இதற்காக இந்த பாராளுமன்ற தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு சின்னத்தின் கீழ் போட்டியிட்டிருக்க வேண்டும்.

இதற்கான நல்ல சந்தர்ப்பமாக இந்த தேர்தல் காணப்பட்டது. எனினும், இன்றுள்ள முஸ்லிம் கட்சிகள் தங்களின் தனிப்பட்ட நிகழச்சி நிரலிலேயே செயற்படுகின்றனர்.
அதனாலேயே முஸ்லிம் கட்சிகள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.

அவ்வாறு நடந்துகொள்கின்றமையினால் சமூகத்திற்கு எந்த நன்மையுமில்லை. எனினும், முஸ்லிம் கட்சிகளின் செயற்பாட்டினைப் பார்த்து எமது சமூகம் அமைதியாக இருப்பது மிகவும் கவலையாக உள்ளது.

கேள்வி: தலைவருக்கும் ஏனைய அரசியல்வாதிக்கும் இடையில் எவ்வாறான வித்தியசாத்தினை காண்கிறீர்கள்?

பதில்: தலைவர் மற்ற அரசியல்வாதிகள் போலல்ல. அவர்  நல்ல கொள்கைகளுடன் வாழ்ந்தார். அவர் வாக்குறுதி வழங்கினால் கட்டாயம் நிறைவேற்றுவார். குறித்த வாக்குறுதி வாய் மொழி மூலமே இருக்குமே தவிர தற்போது காணப்பகின்ற எழுத்து மூலமல்ல.

எனக்கு ஞர்பகம் உள்ளது. 1992ஆம் ஆண்டு நடைபெற்ற ஊள்ளூராட்சி மன்ற தேர்தாலில் தோல்வியடைந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமச் செய்வேன் என தலைவர் பகிரங்கமாக அறிவித்தார்.

குறித்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு உள்ளூராட்சி மன்றங்களில் தோல்வியடைந்தது. இதனால் அவர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய தனது பாராளுமன்ற உறுப்பினர் அவர் செய்து சம்மாந்துறையினைச் சேர்ந்த யூ.எல்.எம்.முஹைதீன் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பளித்தார்.

இதன்போது, இராஜினாமாச் செய்ய வேண்டாம் மக்கள் கொஞ்சினார்கள், அழுதார்கள். ஆனால் அவர் வாக்குறியினை காப்பாற்றினார். இதன் காரணமாக 1994ஆம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய வெற்றி கிடைத்தது.

தலைவர் வழங்கிய உறுதிமொழியினை காப்பாற்றியமையே இதற்கான பிரதான காரணமாகும். தலைவர் வாக்கினை காப்பற்றவில்லை என்று யாராலும் கூற முடியாது.

ஆனால் அந்த பண்பு இன்றுள்ள அரசியல்வாதிகள் யாரிடமுமில்லை. தலைவர் போன்று, வழங்கிய வாக்குறுதியினை காப்பற்ற முடியாதவர்கள் எவ்வாறு தலைவரின் படத்தினை பயன்படுத்த முடியும் அது தான் எனது கேள்வி.

கேள்வி: இன்றைய காலத்தின் தேவையான இன ஐக்கியம் தொடர்பில் தலைவர் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார்?

பதில்: இன, மத வேறுபாடின்றி அனைவரும் பேசும் இன ஐக்கியம் தொடர்பில் கடந்த 25 வருடங்களுக்கு முன்னரே தலைவர் பேச ஆரம்பித்துவிட்டார். அதன் காரணமாவே தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியினை தலைவர் உருவாக்கினார்.

அது மாத்திரமல்லாமல் அனைத்து இன மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் எனும் தொனிப்பொருளையும் நாட்டில் அவரே அறிமுகப்படுத்தினார். அது மாத்திரமல்லாமல் முஸ்லிம் சமூகத்திற்கான தலைவராக அவர் செயற்பட்ட காலப் பகுதியிலேயே  அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்க முயற்சித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்காக செயற்பட்ட  முதல் தலைவர் அஷ்ரப் தான். அதனை இன்றுள்ள முஸ்லிம் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. தேசிய ஐக்கியம் என்ற சொல்லைக் கேட்டாலே இன்றுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அச்சம்.

ஏனென்றால் தேசிய ஐக்கியத்தினை வைத்து ஒருபோது அவர்களினால் அரசியல் செய்ய முடியாது. அவர்கள் எப்போதும் முஸ்லிம் என்ற சொல்லை வைத்தே அரசியல் செய்ய முயச்சிக்கின்றனர்.

அதனால் தான் மறைந்த தலைவரினாஸ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியினை கைவிட்டனர். மறைந்த தலைவரின் உண்மையான கனவு இன்றைய காலத்தின் தேவையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேள்வி: இறுதியாக இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இந்த நேர்காணலின் ஊடாக கூற விரும்பும் செய்தி என்ன?

பதில்: பொறுப்புள்ள இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் பாராளுன்றத்திற்கு எவ்வாறான நபர்களை தெரிவுசெய்து அனுப்புகின்றோம் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளோம்.

கட்சியினால் களமிறக்கப்படுகின்றார் என்ற அடிப்படையில் மக்களுக்கு எந்தவித அபிவிருத்திகளையும் செய்யாத, சமூகத்திற்கு தேவையான நேரத்தில் குரல் கொடுக்காதவர்களை திரும்பத் திரும்ப பாராளுமன்றத்திற்கு அனுப்புவது பாரிய தவறாகும்.

சுய லாபமின்றி சமுதாயத்தினை முன்னிலைப்படுத்தி தலைவர் வழியில் செயற்படுபவர்களைத் தான் இந்த முறை நாம் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த விடயத்தில் கடுமையாக சிந்தித்து சிறந்த நபர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது.