தேசிய, முஸ்லிம் ஊடக பரப்பில் சிறப்புற பரிணமித்த ஆளுமை தாஹா முஸம்மில்
என்.எம். அமீன்
தலைவர் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்
பன்முக ஆளுமைமிகு மூத்த ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் கடந்த 23ஆம் திகதி தனது 74 ஆவது வயதில் கொழும்பில் காலமானார். கொழும்பை சேர்ந்த இவர், கொழும்பு அல்ஹிதாயா கல்லூரியில் கல்வி பயின்ற பின் கணக்காளராக பொது வாழ்வை ஆரம்பித்து, ஊடகத் துறைக்குப் பிரவேசித்தார்.
ஊடகத் துறைக்கு பிரவேசிக்க முன் லேக் ஹவுஸ் மற்றும் வீரகேசரி நிறுவனத்தில் பல படிகளில் பணிபுரிந்துள்ளார். முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் முன்னோடிகளில் ஒருவராக முஸம்மில் திகழ்ந்தார்.
1996ஆம் ஆண்டு நவமணிப் பத்திரிகை ஆரம்பிக்கும் பணியில் மூத்த ஊடகவியலாளர் மர்ஹும் எம்.பி.எம். அஸ்ஹர், எம்.ரீ.எம். றிஸ்வி ஆகியோருடன் இணைந்து இவர் பணியாற்றினார்.
நவமணியின் செயற்பாட்டுப் பணிப்பாளராகவும், வெளிநாட்டு விவகாரச் செய்தியாளராகவும் இவர் பணியாற்றினார். நவமணி ஆரம்பிப்பதற்கு முன் எழுச்சிச் குரல் என்ற வாரப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.
மர்ஹும் எம்.பி. எம். அஸ்ஹரை ஆசிரியராகக் கொண்ட இப்பத்திகையை எம்.ரீ.எம். றிஸ்வியுடன் இணைந்து இவர் வெளியிட்டார். எழுச்சிக் குரல் மற்றும் நவமணிப் பத்திரிகைகளில் அச்சுப் பிரிவுக்கு இவரே பொறுப்பாக இருந்தார்.
1970களில் நாட்டில் சிறப்பாக இயங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் மாணவர் சங்கத்தின் மூலம் பொதுப் பணிக்கு பிரவேசித்தார். சட்டத்தரணி ரீ.கே.அசூர், கணக்காளர் றியாஸ் மிஹ்லார், அமீன் மசூத், எம்.ரீ.எம். றிஸ்வி போன்றவர்களுடன் இணைந்து முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தை அக்காலகட்டத்தில் பலமான அமைப்பாக கட்டியெழுப்ப உதவினார்.
1995 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தை உருவாக்கும் முன்னோடிகளில் ஒருவராக இவர் திகழ்ந்தார். அதன் உப தலைவர், பொதுச் செயலாளர் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்து அந்த அமைப்பினை பலமான அமைப்பாக உருவாக்குவதற்கு முஸம்மில் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நாடளாவிய ரீதியில் நடாத்திய ஊடகக் கருத்தரங்குகளில் முக்கிய வளவாளராக முஸம்மில் பணிபுரிந்தார். அவரது இறுதிக் காலகட்டத்தில் அவர் சுதந்திர ஊடக அமைப்பில் முக்கிய பதவிகளை வகித்து, ஊடக சுதந்திரத்துக்காகவும், மனித உரிமைக்காகவும் பங்களிப்புச் செய்தார்.
இவரது மறைவு குறித்து சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டு இருப்பதாவது, தாஹா முஸம்மில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்காக உறுதியாக போராடிய, வெளிப்படைத் தன்மையும், உள்ளடக்கத் தன்மையும் சமூக அமைப்புகளிலும் நிலைத் தன்மைக்கான முக்கிய காரணிகளை அவர் நம்பினார்.
நீதிக்காகவும், நேர்மைக்காகவும் அவர் எடுத்த அடையாளம் பலருக்கு ஊக்கமளித்தது. சுதந்திர ஊடக அமைப்பு இவரது சேவைக்கு அளித்த அங்கீகாரமாகவே இதனைக் குறிப்பிடுகின்றேன். சுதந்திர ஊடக அமைப்பின் பொருளாளர், தொழிற்சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளை வகித்தார்.
இலங்கையின் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக பல வருடங்களாகப் பணிபுரிந்தார். சப்மா என்ற தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் இலங்கை அலுவலக இணைப்பாளராகப் பணிபுரிந்தார்.
இதன் மூலம் தெற்காசிய நாடுகளின் ஊடகவியலாளர்களுடன் நெருங்கிச் செயற்படும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இதன் மூலம் தெற்காசிய நாடுகளின் தலைநகரங்களில் நடைபெற்ற சகல மாநாடுகளிலும் இலங்கை சார்பில் இவர் பங்குபற்றினார்.
சகோதரர் முஸம்மில், 1979 முதல் ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தீவிர ஆதரவாளராகச் செயற்பட்டார். புரட்சியினை ஆதரித்து தொடராக எழுதி வந்தார். ஈரான் புரட்சியை ஆதரிப்பதனை தவறாகப் புரிந்துகொண்டு, இவரது செயற்பாட்டை விமர்சித்தனர். தலைநகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஜும்ஆப் பிரசங்கம் ஒன்றில் இவரது பெயரை குறித்து விமர்சித்த போது தான் அதே பள்ளிவாசலில் ஜும்ஆவில் கலந்துகொண்டதாக இவர் ஒரு முறை என்னிடம் தெரிவித்தார்.
சிறந்த ஆங்கில அறிவும் கணினி அறிவும் இவரிடம் இருந்ததனால் இவரது சேவை எல்லா அமைப்புகளுக்கும் தேவைப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் சுதந்திர ஊடக அமைப்பு போன்றவற்றில் இவரது பிரசன்னம் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது. இவர் வெளிப்படைத் தன்மை கொண்டவராகவும் செயற்பட்டார். நேர்மையாகச் செயற்படும் அமைதியான போக்குடைய ஒருவராக சகோதரர் முஸம்மிலைக் குறிப்பிடலாம்.
ஆறு பிள்ளைகளின் தந்தையான இவரது மனைவி மூன்று வருடங்களுக்கு முன் இறந்த பின் இவருடைய போக்கில் சற்று தளர்ச்சி காணப்பட்டது. என்றாலும், சிறிது காலத்தில் தனது மனதை தேற்றிக் கொண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இவர் செயற்பட்டார். உலகின் பல நாடுகளுக்கும் சென்று சர்வதேச மாநாடுகளில் இவர் கலந்துகொண்டு இருக்கிறார்.
ஈரான் இஸ்லாமிய குடியரசில் நடைபெற்ற பல மாநாடுகளில் இவர் கலந்துகொண்டுள்ளார். இவருடைய இறுதிக் கிரியைகள் நடைபெற்ற போது, நாட்டின் முக்கிய பல சிங்கள ஊடகவியலாளர்களும் தமிழ் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
இது இவரது சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்படலாம். சுதந்திர ஊடக அமைப்பு மற்றும் தெற்காசிய அமைப்பின் முக்கியஸ்தர்கள் பிரசன்னமாகி, தமது இறுதி மரியாதையை சகோதரர் முஸம்மிலுக்குத் தெரிவித்திருந்தனர்.
முஸம்மில் உண்மையிலேயே ஒரு போராளி. தான் கொண்ட நிலைப்பாட்டில் அசையாது நம்பிக்கை வைத்திருந்தார். எல்லோருடனும் இணங்கிச் செயற்படுகின்ற ஒரு தன்மை அவரிடம் காணப்பட்டது. அந்த வகையில் எங்களுக்குச் சிறந்ததொரு வழிகாட்டியாகவே அவர் இருந்தார்.
அவரது மறைவு எங்களைப் பொறுத்த வரையில் இந்த கட்டத்தில் ஒரு பேரிழப்பாகும். அவர் இந்தப் புனித ரமழானில் எங்களை விட்டு பிரிந்திருக்கின்றார். அவருடைய பாவங்களை மன்னித்து, அவருடைய மறுமை வாழ்வை சிறப்பாக அமைக்க எல்லோரும் பிரார்த்திப்போமாக! ஆமீன்.
Comments (0)
Facebook Comments (0)