உள்நாட்டு மீன்பிடியை வலுப்படுத்த ஜப்பான் ஆதரவு
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமானது, ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் இலங்கையின் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) ஆகியவற்றுடன் இணைந்து, மேம்படுத்தப்பட்ட மீன் குஞ்சு பொரிப்பகம் மற்றும் மூன்று உயிர் விரலி மீன் குஞ்சு வினியோக பவுசர்களை அம்பாறை இங்கினியாகலவிலுள்ள NAQDA மீன்வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா ஆகியோரின் பங்குற்றுதலுடன், உள்நாட்டு மீன்பிடி உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், கிராமப்புற மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இரு அரசாங்கங்களின் அர்ப்பணிப்பை வெளிக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
புதிதாக மேம்படுத்தப்பட்ட மீன் குஞ்சு பொரிப்பகம் மற்றும் உயிர் விரலி மீன் குஞ்சு வினியோக பவுசர்கள், மீன்களின் இனப்பெருக்கம், வளர்ப்பு மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளுக்கு தரமான மீன் குஞ்சுகளின் விநியோகத்தை மேம்படுத்தும். இது உள்நாட்டு மீன்பிடி உற்பத்தியை அதிகரிப்பதோடு, நிலையான ஊட்டச்சத்து கிடைப்பதையும் உறுதிசெய்யும்.
அத்தோடு, உள்ளூர் மீனவ சமூகங்களின் வருமானத்தை அதிகரிக்கும். இந்த முயற்சியானது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தால் செயற்படுத்தப்பட்டு ஜப்பான் அரசால் நன்கொடையாக வழங்கப்படும் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.
இது, இலங்கையில் உள்நாட்டு மீன்பிடியை வலுப்படுத்தவும், நிலையான மீன் வளர்ப்பை மேம்படுத்தவும் NAQDA உடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டமானது இங்கினியாகல நீரியல் வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்தை மேம்படுத்துவதுடன் மேலும் மூன்று NAQDA நீரியல் வளர்ப்பு அபிவிருத்தி நிலையங்களை மேம்படுத்துகின்றது.
மற்றும் கிராமப்புற மீனவ சமூகத்தால் இயக்கப்படும் சிறிய மீன் குஞ்சு பொரிப்பகத்தையும் பலப்படுத்துகின்றது. அத்தோடு, மட்டக்களப்பு, அநுராதபுரம் மற்றும் மொனறாகலை ஆகிய இடங்களில் கிராமப்புற மீனவ சமூகத்தால் இயக்கப்படும் மூண்று புதிய சிறிய மீன் குஞ்சு பொரிப்பகங்களையும் நிறுவி வருகின்றது.
இந்நிகழ்வில் பேசிய தூதர் ISOMATA, மக்கள் மீதான ஜப்பானின் முதலீட்டு உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார், "ஜப்பான் மனித திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறது. மக்களின் உடனடி மீன் தேவைகளை பூர்த்தி செய்ய மீன்களை வழங்குவதற்குப் பதிலாக, மீன் வளர்ப்பு மற்றும் நிலைபேறான முகாமைத்துவ அறிவு மற்றும் திறன்களை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்த அணுகுமுறையின் மூலம், இலங்கை தன்னிறைவு பெற்ற வளர்ச்சியை அடையவும், வலுவானதும், நிலைபேறானதுமான எதிர்காலத்தை உருவாக்கவும் வலுவூட்ட முடியும் என்று நம்புகிறோம்".
இந்நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கையின் மீன்பிடித் துறையை முன்னேற்றுவதில் மூலோபாய பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒத்துழைப்பின் சக்திக்கு இந்தத் திட்டம் ஒரு சான்றாகும். மீன் குஞ்சு பொரிப்பக செயற்பாடுகளை வலுப்படுத்துவதன் மூலமும், உயிர் மீன் குஞ்சு வினியோகத்தை மேம்படுத்துவதன் மூலமும், அதிக உற்பத்தி மற்றும் நிலையான உள்நாட்டு மீன்பிடித் துறையை நாம் உறுதிப்படுத்துகின்றோம். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் பயன்பெறும்” என்றார்.
இந்த முயற்சியானது சுமார் 3,000 உள்நாட்டு மீனவர்கள், மீன் குஞ்சு பொரிப்பக உரிமையாளர்கள் மற்றும் மீன் தீவன உற்பத்தியாளர்கள் நேரடியாக பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது, பரந்த உணவு பாதுகாப்பு மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கும் பங்களிக்கும்.
இதற்கு மேலதிகமாக, மேம்படுத்தப்பட்ட மீன் குஞ்சு பொரிக்கும் மேம்பாடு, உள்நாட்டு மீன்பிடியில் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்பு அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவை இந்த பரந்த திட்டத்தின் முக்கிய பகுதிகளாகும்.
இலங்கையின் உள்நாட்டு மீன்பிடித் துறையின் மீட்சியை மேம்படுத்துவதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் அர்ப்பணிப்பை, குறித்த அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி விம்லேந்திர ஷரன் சுட்டிக்காட்டினார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இந்த முயற்சியின் மூலம், மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், உள்நாட்டு மீன்பிடியை நீண்டகாலத்திற்கு நடத்திச்செல்லும் வகையில் நிலைபேறுமிக்கதாக மாற்றுவதோடு, தேவையான வளங்களையும் அறிவையும் சமூகங்களுக்கு வழங்குகின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமானது, இலங்கை அரசு மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, நீடித்த மாற்றத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)