இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர்: கொம்பனித் தெருவில் இளைஞர் ஒருவர் கைது
காஸாவில் இடம்பெறும் அட்டூழியங்களுக்கு எதிராக கொழும்பு, கொம்பனித் தெருவிலுள்ள சிடி சென்டர் எனும் பிரபல வர்த்தகக் கட்டிடத் தொகுதியின் லொபி பகுதியில் இரு ஸ்டிக்கர்களை ஒட்டியதாகக் கூறப்படும் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெறுப்பூட்டும் விடயங்களை பிரச்சாரம் செய்தமைக்காக குறித்த ஸ்டிக்கரை ஒட்டிய சம்பவத்தினை மையப்படுத்தி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அவரை கைது செய்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
குறித்த இளைஞர், கொம்பனித் தெருவிலுள்ள சிடி சென்டர் வர்த்தக கட்டிடத் தொகுதியிலுள்ள கடையொன்றில் சேவையாற்றும் நிலையிலேயே, பணி நிமித்தம் சென்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கட்டிடத் தொகுதியின் லொபி பகுதியில் 'F... இஸ்ரேல்' எனும் வாசகம் தரித்த ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளதாகவும் காஸாவில் இடம்பெறும் அட்டூழியங்களுக்கு எதிராக அவர் அதனை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய கொம்பனித் தெரு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நன்றி விடிவெள்ளி
Comments (0)
Facebook Comments (0)