தீவிரவாத சக்திகளுடன் தொடர்பிலிருக்கவில்லை: சட்டத்தரணி ஹிஜாஸின் குடும்பத்தினர் அறிக்கை

தீவிரவாத சக்திகளுடன் தொடர்பிலிருக்கவில்லை: சட்டத்தரணி ஹிஜாஸின் குடும்பத்தினர் அறிக்கை

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தீவிரவாத சக்திகளுடன் தொடர்புகளைப் பேணிய ஒருவரில்லை எனத் தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், அவரது கைதானது சட்டவிரோதமானதும் தன்னிச்சையானதுமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்டத்தரணி ஹிஜாஸ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களால் நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் முழு விபரம் வருமாறு :

"சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், 14.04.2020 அன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சி.ஐ.டி.யினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ், தனது தொழில்சார் பணிகள் நிமித்தம் பல்வேறு தரப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பாராளுமன்ற கலைப்பு, கோல்டன் கீ வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை அவர் கையாண்டுள்ளார்.

இவற்றின்போது தொழில்சார் சட்டத்தரணியாகவும் ஒரு பிரஜையாகவும் அவர் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களின் தீர்மானங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

தான் எந்தவித தீவிரவாதிகளுடனோ அல்லது தீவிரவாத செயற்பாடுகளுடனோ தொடர்பிலிருக்கவில்லை என அவர் உறுதிபடக் கூறுகிறார். தனது செயற்பாடுகள் ஊடாக அவர் ஒருபோதும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியளிக்கவில்லை.

சட்டத்தரணி ஹிஜாஸ், எப்போதுமே சகலவிதமான இனவாதம், தீவிரவாதம் மற்றும் அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுத்து வந்துள்ளார். அத்துடன் இன, மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பாடுபட்டு வந்துள்ளார்.

அவர் இலங்கை மக்களின் முன்னேற்றத்துக்காக செயற்படும் பல்வேறு நிறுவனங்களின் செயற்பாடுகளில் பங்குபற்றியுள்ளார். சட்டத்தரணி ஹிஜாஸின் கைதானது சட்டவிரோதமானதும் தன்னிச்சையானதும் கருத்து வேறுபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். எமது அறிவுக்குட்பட்ட வகையில், அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது அவரை குற்றவாளியாக காணும் எந்தவிதமான பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. 

அவர் விசாரணையாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதுடன் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து தெளிவுபடுத்த முடியும் என்றும் நம்புகிறார். இன்று (நேற்று) அவரது சட்டத்தரணி அவரை அணுகுவதற்கு அனுமதி கோரி சி.ஐ.டி.யினரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இது அவரது உரிமைகளை உறுதிப்படுத்த அவசியமானதாகும். எந்தவொரு விசாரணையும் சுயாதீனமானதாகவும் பக்கச்சார்பற்றதாகவும் அமைய வேண்டியது அவசியமாகும். உண்மை என்றும் வெல்லும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.