நோன்பு பெருநாளை எளிமையாக கொண்டாடுமாறு ஜய்இய்யதுல் உலமா வேண்டுகோள்
நாட்டின் தற்போதைய நிலமையை கருத்திற் கொண்டு மிகவும் எளிமையாக, வீட்டிலுள்ளவர்களுடன் மாத்திரம் நோன்பு பெருநாள் தினத்தை கழிக்க ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.
"கொவிட் 19 வைரஸின் தாக்கம் தொடர்ந்தும் இருந்துவரும் இந்நிலையில் மக்களின் அத்தியவசிய தேவைகளுக்காகவே நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கு குறித்ததொரு பொறிமுறையினூடாக தளர்த்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் மிகவும் அவதானமாகவும், பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுவது அவசியமாகும். இதன்போது அரசினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி நடக்கும் அதேநேரம் பின்வரும் வழிகாட்டல்களையும் பேணி நடக்குமாறு" அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது.
ஊரடங்கு தளர்த்தப்படல் மற்றும் ரமழானின் எஞ்சிய பகுதி தொடர்பான சில முக்கிய வழிகாட்டல்கள் எனும் தலைப்பில் அகில இலங்கை ஜய்இய்யதுல் உலமா வின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரமழான் மாதம் தொடர்பாக ஏலவே ஜம்இய்யாவினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை முஸ்லிம் சமூகம் பேணி நடந்து கொள்வது சந்தோஷமளிக்கின்ற அதேநேரம் ஜம்இய்யா அனைவரது ஈருலக வெற்றிக்காகவும் பிரார்த்திக்கின்றது. அது போன்று தொடர்ந்தும் அவ்வழிகாட்டல்களை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் தொழுகை, குர்ஆன் திலாவத், துஆ மற்றும் ஏனைய அனைத்து அமல்களிலும் கூடிய அக்கறை காட்டுமாறும் வேண்டிக் கொள்கின்றது.
கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்தும் இருந்து வருவதால் அரசாங்கத்தினால் கட்டம் கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் நாம் மிகவும் அவதானத்துடன் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களைப் பேணி நடந்து கொள்வதானது எம்மையும் எமது குடும்பத்தையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வழிவகுக்கும்.
சமூக இடைவெளியைப் பேணாமல் மக்கள் இரண்டறக் கலந்து இருப்பதானது இவ்வைரஸை பரவச் செய்யும் முக்கிய காரணமாக இருப்பதால் சமூக இடைவெளியைப் பேணும் விடயத்தில் கூடிய கவனம் செலுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் முகக் கவசங்களை (MASK) அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், தேவையின்றி வீட்டை விட்டும் வெளியேறுவதைத் தவிர்த்தல் போன்ற சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களைப் பின்பற்றி நடத்தல் வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களை பின்பற்றுவது இஸ்லாமிய போதனை என்பதால் இவ்விடயத்தில் முஸ்லிம்கள் முன்மாதிரியுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.
நோன்புப் பெருநாளை அண்மித்த காலப் பகுதிகளில் நாம் பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் கூட்டம் கூட்டமாக ஒன்று கூடுவதை முற்றாகத் தவிர்த்துஇ இது தொடர்பில் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றி நடப்பதுடன் முடியுமானளவு வீட்டிற்கு வினியோகம் செய்யும் முறையினூடாக (Home Delivery) தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வது பாதுகாப்பானதாகும்.
நாட்டின் தற்போதைய நிலமையை கருத்திற் கொண்டு மிகவும் எளிமையாக, வீட்டிலுள்ளவர்களுடன் மாத்திரம் பெருநாள் தினத்தை கழிக்க ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். (இன்ஷா அல்லாஹ் நோன்பு பெருநாள் தொடர்பான விரிவான வழிகாட்டல் தேவைக்கேற்ப ஜம்இய்யாவினால் பின்னர் வெளியிடப்படும்.)
நாட்டில் தொடராக பல வாரங்கள் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருப்பதால் நாளாந்தம் தொழில் செய்து வாழ்ந்த பலர் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு இன மத பேதமின்றி உதவுவதற்கு நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். எமது பெருநாள் செலவுகளை இயன்றளவு குறைத்து இது போன்ற நல்ல விடயங்களுக்காக செலவளிப்பது விரும்பத்தக்கதாகும்.
இக்காலப்பகுதியில் அதிகம் அதிகம் தான தர்மங்கள் செய்வதோடு ஸதகதுல் ஃபித்ரையும் உரிய முறைப்படி வழங்கிக் கொள்ள வேண்டும்.
ஏலவே வக்ப் சபையும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் வெளியிட்டுள்ள வழிகாட்டல்களை மஸ்ஜித்கள் தொடர்ந்தும் பின்பற்றி நடத்தல் வேண்டும்.
மஸ்ஜித்களில் தொழுகைகளுக்காகக் கூட ஒன்று கூடுவது தடை செய்திருக்கும் நிலையில் முஸ்லிம்களாகிய நாம் ஆங்காங்கே ஒன்று கூடுவதை முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் நாம் அவதானத்துடன், உரிய வழிகாட்டல்களைப் பேணி நடப்பதானது எம்மையும், சமூகத்தையும் வீண் பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கும். ஏனவேஇ மேற்கூறிய வழிகாட்டல்களை அனைத்து முஸ்லிம்களும் பேணி நடக்குமாறும் இத்தகைய வைரஸின் தாக்கத்திலிருந்து அனைவரும் அவசரமாக இயல்பு வாழ்விற்கு திரும்ப இப்புனித ரமழான் மாதத்தில் பிரார்த்திக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
Comments (0)
Facebook Comments (0)