சேதனப் பசளை தொடர்பான தீர்மானத்தில் இருந்து பின்வாங்கமாட்டேன்: ஜனாதிபதி

சேதனப் பசளை தொடர்பான தீர்மானத்தில்  இருந்து பின்வாங்கமாட்டேன்: ஜனாதிபதி

ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை நோக்கமாகக் கொண்டு, சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்  உள்ளிட்ட மகா சங்கத்தினரிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, விவசாயிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரசாயனப் பசளை பயன்பாட்டின் காரணமாக, நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிறுநீரக நோய் உள்ளிட்ட பல தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் ஏராளமானவையாகும்.

இரசாயன உர இறக்குமதிக்காக வருடாந்தம் 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிக தொகையை அரசாங்கம் செலவிடுகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்லும் அப்பணத்தை நாட்டின் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, சேதனப் பசளை பயன்பாட்டின் மூலம் முடியுமாக இருக்குமென்று ஜனாதிபதி, மகா சங்கத்தினரிடம் சுட்டிக்காட்டினார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை இன்று (27) சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டுக்கு முன்னர், அரச அதிகாரிகள் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பின்நிற்காத காரணத்தினால், குறுகிய காலத்தில் நாட்டில் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும் கடந்த அரசாங்க காலத்தில் அதிகாரிகள் போலியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைப்படுத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது எதிர்காலத்தில் தண்டனை பெற வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரிகள் தயங்குவதாகவும் குறிப்பிட்டார்.

எனவே நாட்டில் பெருமளவு வேலைத்திட்டங்கள் முடங்கிய நிலையில் இருப்பது கவலைக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொவிட் நோய்த் தொற்று நிலைமைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து, நாட்டை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரர் பாராட்டுத் தெரிவித்தார்.