யுனிசெப்பின் 264,000 அஸ்ரஸெனெக்கா தடுப்பூசிகள் ஞாயிறன்று கொழும்பை வந்தடையும்
கொரோனா வைரஸ் பரவலை இலங்கையில் கட்டுப்படுத்தும் நோக்கில் யுனிசெப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட 264,000 அஸ்ரஸெனெக்கா தடுப்பூசிகள் எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடையவுள்ளன.
கொவிட்-19 இனால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கே இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
கொவெக்ஸ் செயற்திட்டத்தின் கீழ் 1.44 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இதன் முதற் தொகுதியே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
சுகாதார அமைச்சின் தேசிய வரிசைப்படுத்தல் மற்றும் தடுப்பூசி திட்டத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கை சனத்தொகையில் 20 சதவீதத்தினருக்கு யுனிசெப் தலைமையிலான கொவெக்ஸ் செயற்திட்டத்தினால் இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் கொவெக்ஸ் செயற்திட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைப்பதற்கும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரகால பயன்பாட்டு பட்டியலின் அங்கீகாரத்திற்கும் உட்பட்டும் 1.44 மில்லியன் தடுப்பூசி அளவுகள் யுனிசெப்பினால் எதிர்வரும் மே மாதம் வரை கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளது.
கொவெக்ஸ் செயற்திட்ட விநியோக நடவடிக்கையானது, உலகம் முழுவதிலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் 92 நாடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய உலகளாவிய கொவிட்-19 தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
உலகின் மிகப்பெரிய ஒற்றை தடுப்பூசி வாங்குபவர் என்ற வகையில், யுனிசெப் தற்போது 2021ஆம் ஆண்டில் உலகளவில் இரண்டு பில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுனிசெப்பின் மனிதாபிமான விமானப் பயண முன்முயற்சியின் கீழ் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பத்து முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ வழியாக இந்த 264,000 கொவாக்ஸ் தடுப்பூசிகள் கொண்டு வரப்படுகின்றன.
யுனிசெப் உடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்த விமான நிறுவனங்கள் கொவிட்-19 தடுப்பூசிகள், அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பிற முக்கியமான பொருட்களை தொற்றுநோய்க்கு பதிலளிப்பதற்கும் வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு, தேவையேற்படின் அதிகரித்த சரக்கு போன்ற நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும் முன்னுரிமை அளிப்பதில் உறுதியாக உள்ளன.
இதற்கு மேலதிகமாக, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்) ஆனது இலங்கையின் சுகாதார அமைச்சுடன் இணைந்து தடுப்பூசி வழங்கலுக்கான தயார்படுத்தல், தடுப்பூசி வழங்கலை அமுலாக்குதல் மற்றும் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்திற்கு அமைவாக வழங்கல்கள், விநியோக நிர்வாகம், அபாய நிலைமைகள் தொடர்பான தொடர்பாடல், தடுப்பூசிக்கான கேள்வியை அதிகரித்தல் என்பவற்றிற்கான ஆதரவினையும் வழங்குகின்றது.
இவற்றுள் தடுப்பூசிக்கான குளிரூட்டல் தொடரின் மேலான்மை, குளிரூட்டல் உபகரணம் ஆகியவற்றின் தயார் நிலைமையை உறுதிப்படுத்தல், சமூகங்களுடனான தொடர்பாடல் உத்திகள் என்பவையும் அடங்கும்.
கொவெக்ஸ் வசதி என்பது உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி கிடைக்கும் சமமான வாய்ப்பை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான உலகளாவிய ஒத்துழைப்பாகும்.
பரந்த அளவிலான கொவிட்-19 தடுப்பூசிகளின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தி, விலை பேச்சுவார்த்தை மற்றும் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் சமமான வாய்ப்பை இந்த வசதி ஆதரிக்கிறது.
கொவெக்ஸ் வசதி Gavi, தடுப்பூசி கூட்டணி, தொற்றுநோய்களுக்கான தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி (CEPI) மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், கொள்முதல், ஒழுங்குபடுத்தல் வசதிகள் மற்றும் உலகளவில் சேமித்தல் என்பவற்றினை யுனிசெப் முன்னெடுக்கின்றது.
Comments (0)
Facebook Comments (0)