நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிக்க இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கு வரிச் சலுகை

நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிக்க இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கு வரிச் சலுகை

நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கு 199 ரூபாவினை வரிச் சலுகையாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் இந்த வரிச் சலுகை தொடர்பான கட்டளை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த திங்கட்கிழமை (27) வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அரசாங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நலன்விரும்பிகளிடமிருந்து அன்னியச் செலாவணி தொடர்புபடமால் நன்கொடை அல்லது அன்பளிப்பு என்ற அடிப்படையில் இறக்கமதி செய்யப்படுகின்ற பேரீச்சம் பழங்களுக்கே இந்த வரிச் சலுகை பொருந்தும்.

ஜனவரி 28ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு மாத்திரமே இந்த வரிச் சலுகை செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'ரமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிக்க இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குதல்' என்ற தலைப்பில் சமர்பிக்கப்பட்ட 24/2293/822/004 ஆம் இலக்க அமைச்சரவை பத்திரத்திற்கு கடந்த டிசம்பர் 30ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இதற்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் பேரில், 2024 டிசம்பர் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட 2417/20ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மூலம் 0804.10.10 மற்றும் 0804.10.20 ஆகிய எச்எஸ் குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பேரீத்தம் பழங்களை இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகை வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிலோ கிராம் ஒன்றிற்கு 200 ரூபாய் என விதிக்கப்பட்ட விசேட வியாபாரப் பண்ட அறவீட்டிலிருந்து கிலோ கிராம் ஒன்றிற்கு 1 ரூபாவினை அறவிட்டதன் பின்னரான மீதித் தொகையினை தள்ளுபடிசெய்யுமாறும் குறித்த கட்டளையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு கிலோவிற்கு 200 ரூபா என்ற அடிப்படையில் சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களிற்கு வரி செலுத்தப்பட்டிருந்தது.

பாரிய வரித் தொகையினை செலுத்தி இறக்குமதி செய்யப்பட்ட இந்த பேரீச்சம் பழத்திற்கும் சலுகை வழங்கப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.