இம்ரானின் 24 மணி நேர விசிட்; ஜனாஸா விவகாரம் success

இம்ரானின் 24 மணி நேர விசிட்;  ஜனாஸா விவகாரம் success

றிப்தி அலி

இலங்கையின் தேசிய அரசியலிலும் ஆசியப் பிராந்தியத்திலும் இந்த வாரம் அதிக கவனயீப்பைப் பெற்ற விவகாரமே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயமாகும்.

சீனாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள பாகிஸ்தானின் தலைவர், அதே சீனாவுடன் அண்மைக் காலங்களில் நெருக்கத்தினை வளர்த்து வரும் இலங்கைக்கு விஜயம் செய்வதானது இலங்கையினதும், பாகிஸ்தானினதும் அயல் நாடான இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இம்ரான் கான் இலங்கைக்கும் பாகிஸ்தானிக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை முன்னேற்றுவதை இலக்காக் கொண்டே இந்த விஜயத்தினை மேற்கொண்டிருந்த போதிலும் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மத்தியில் அவரது விஜயம் வேறொரு நோக்கத்தில் எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்தது.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக தனகம் செய்வது இதில் முதன்மையானதாகும்.

இம்ரான் கானின் விஜயத்தின் ஊடாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மேலேங்கியிருந்தது.  

இதே காலப் பகுதியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பிலும் குறிப்பாக ஜனாஸாக்களை எரிக்கும் தீர்மானத்திற்கு எதிராகவும் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே ஓ.ஐ.சீ என்று அழைக்கப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் உறுப்பு நாடாக செயற்படுகின்ற, தெற்காசிய பிராந்தியத்தின் வலுவான ஒரு முஸ்லிம் நாடாகவுள்ள பாகிஸதானின் பிரதமர் இம்ரான் கானின் இலங்கைக்கான விஜயம் முக்கியத்துவமுடையதாக நோக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவலிற்கு பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட உலக தலைவர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் என்பதானால் இம்ரான் கானின் விஜயம் கொவிட் - 19 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய பலத்த கட்டுப்பாடுகளுடன் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகளை அறிக்கையிட்ட ஊடகவியலாளர்கள் கூட பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

அதேநேரம் சில சக்திகள் இந்த விஜயத்தை தவறான கண்கொண்டு நோக்கின. குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) சிலரது பங்கேற்புடன் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இம்ரான் கானின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

அதேபோன்று ஏலவே திட்டமிடப்பட்டிருந்த இம்ரான் கானின் பாராளுமன்ற உரையும் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது. முன்னர் மூன்று நாட்கள் என திட்டமிடப்பட்டிருந்த இம்ரான் கானின் இலங்கைகான விஜயம் பின்னர் இரண்டு சுருக்கப்பட்டது. எனினும் அவர் மொத்தமாக 24 மணி நேரம் மாத்திரமே இலங்கையில் தங்கியிருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (23) கட்டுநாயக்க விமான நிலையத்தினை பி.ப 4.05 மணியளவில் வந்தடைந்த இம்ரான் கானை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  உத்தியோகபூர்வமாக விமான நிலையத்தில் வரவேற்றார்.

அத்துடன் 19 துப்பாக்கி வேட்டுகள் முழங்கப்பட்டு, இராணுவ மரியாதை அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. பிரதமர் இம்ரான் கானுடன்  பாகிஸ்தான் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர் உட்பட தொழிலதிபர்களை உள்ளிட்ட பாரிய தூதுக்குழுவொன்றும் இலங்கைக்கு வருகை தந்தது.

இந்த விஜயத்தின் முதற்கட்டமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இம்ரான் கானிற்கும் இடையிலான இராஜதந்திர சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது, பாதுகாப்பு கடனாக 50 மில்லியன் அமெரிக்க டொலரினையும், விளையாட்டுத் துறையின் அபிவிருத்திக்காக 52 மில்லியன் பாகிஸ்தான் ரூபாவினை வழங்கவுள்ளதாக இதன்போது இம்ரான் கான் அறிவித்தார்

மேலும் இரு நாடுகளுக்கும் இடையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.  சுற்றுலா ஒத்துழைப்பு, முதலீட்டு சபைகளுக்கு இடையிலான ஒப்பந்தம், இலங்கை தொழில்துறை தொழிநுட்பம் மற்றும் பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழகம் இடையிலான ஒப்பந்தம், கொழும்பு தொழில்துறை தொழிநுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தானின் லாகூர் பொருளாதார கல்லூரி ஆகியவற்று இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியனவே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டன.

மறுநாள் காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. முதலில் இரு நாட்டு தலைவர்கள் தனியாக சினேநகபூர்வ கலந்துரையடலொன்றை மேற்கொண்டதனைத் தொடர்ந்தே  இராஜதந்திர மட்டத்திலான சந்திப்பினை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் தங்கியிருந்த சங்கரிலா ஹோட்டேலில் இடம்பெற்ற வர்த்தக மாநாட்டில் சிறப்புரையாற்றினார். இலங்கை விஜயத்தின் போது சீனாவைப் பற்றி இம்ரான் கான் அதிகம் புகழ்ந்து பேசியமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை பாகிஸ்தானுக்கு வருமாறு இம்ரான் கான் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தார்.

அத்துடன் கடந்த காலங்களைப் போன்றே எதிர்காலத்தில்  இலங்கைக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்க ஒருபோதும் தயங்கமாட்டாது என்றும் பிரதமர் இம்ரான் கான் இந்த விஜயத்தில் குறிப்பிட்டார். பாகிஸ்தான் பௌத்த மத புராதன சின்னங்களை பாதுகாப்பதற்கு வழங்கியுள்ள முக்கியத்துவம் குறித்து தனது உரைகளில் இம்ரான் கான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தினார்.

இலங்கை மக்களுக்கு பௌத்த மத சுற்றுலாவுக்கு முக்கிய தளமாக பாகிஸ்தான் உள்ளதாக குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் வளமான புத்த பாரம்பரியத்தை பற்றியும் அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

பிராந்திய சூழலில், அமைதி, அபிவிருத்தி மற்றும் நாடுகளுக்கு இடையே உள்ள தொடர்புகள் பற்றிய தனது பார்வை அவர் தெளிவுபடுத்தியதுடன், சார்க் அமைப்பின்  மூலம் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும், சி.பி.இ.சி (CBIC) மூலம் பிராந்திய அபிவிருத்திக்கான வாய்ப்புக்களையும் வலியுறுத்தினார்.

சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தில் பாகிஸ்தானும் இலங்கையும் முக்கிய கேந்திர ஸ்தானங்கள் என்பதையும் அவர் தனது உரையில் நினைவுபடுத்தினார். தனது விஜயத்தின் போது தான் கிரிக்கெட் வீரராக இருந்த காலத்தில் இலங்கையுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இந்த விஜயத்தின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தனவும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும இணைந்து வழங்கிய பகல்போசண விருந்துபசாரத்திலும் அவர் பங்கேற்றார்.

இந்நிகழ்வுக்கு இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது இலங்கையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள உயர் தர விளையாட்டு கட்டிடத் தொகுதி தொடர்பான திட்ட வரைபும் இம்ரான் கானிடம் கையளிக்கப்பட்டது. இந்த கட்டிடம் அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட பிறகு இதற்கு இம்ரான் கானின் பெயர் சூட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்கவும் கலந்துகொண்டார். தனது உரையில் அர்ஜுனவின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறிய இம்ரான் கான், தனது அரசியல் வாழ்க்கையில் அர்ஜுனவுக்கும் படிப்பினைகள் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் அதன் தலைவராக நிமால் சிறிபால டி சில்வாவும் செயலாளராக றிசாத் பதியுதீனும், பிரதித் தலைவராக ரவூப் ஹக்கீமும் தெரிவுசெய்யப்பட்டனர்.  

மேலும், இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைள் தொடர்பில் பிரதமர் இம்ரான் கானுடன் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தறுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் ஆகியோர் தனித் தனியாக இலங்கைக்கான பாகிஸ்தானின் பிரதி உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமடினை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

அது மாத்திரமல்லாமல், 15 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கையொழுத்திட்டு இம்ரான் கானை சந்திப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருமாறு உயர் ஸ்தானிகராலயத்திடம் கோரிக்கை முன்வைத்தனர்.

எனினும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனிடையே இம்ரான் கான் கொழும்பை வந்தடைவதற்கு முன்னர் அவர் தங்கியிருந்த ஹோட்டேலிற்கு அருகிலுள்ள ஜனாதிபதி செயலகத்தினை அண்மித்த காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

கட்டாய தகனத்திற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். இவ்வாறான நிலையில், கடந்த புதன்கிழமை (24) காலை யாரும் எதிர்பாராத நிலையில் தீடீரென முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இம்ரான் கான் சந்திப்பதற்கான ஏற்பாடொன்றை செய்துள்ளதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்தது.

இதற்கமைய, சங்கரில்லா ஹோட்டேலில் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்ந சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. "கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சு நடத்தியுள்ளேன். விரைவில் சாதகமான பதில் கிடைக்கும்" என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முஸ்லிம் எம்.பிக்களிடம் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்கள் மற்றும் உலக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக இக்கூட்டத்தில்  கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்தினரை தூண்டும் விதமாக நடந்துகொள்ளாது அவர்களுடன் ஒற்றுமையாக வாழுமாறு பாகிஸ்தான் பிரதமர் இதன்போது முஸ்லிம் எம்.பிக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து பேச்சு நடத்தினார். இம்ரான் கானின் இந்த விஜயத்தினை தொடர்ந்து கட்டாய ஜனாஸா எரிப்பு விடயத்தில் இலங்கை அரசாங்கம், சாதகமான தீர்வொன்றினை முஸ்லிம்களுக்கு வழங்கும் என்று முழு உலகமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றது.

இம்ரான் கானும், அந்த உறுதிமொழியை அளித்துள்ளார். இலங்கை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே நேற்று வியாழக்கிழமை (25) இரவு நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இம்ரான் கானின் விஜயம் நிறைவு பெற்று 36 மணித்தியாலயத்திற்குள் இந்த அறிவிப்பு வெளியாகியமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான முறைகளை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட வேண்டும்.

அதன் பின்னரே முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும். குறித்த சுற்றறிக்கை எப்போது வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...