முஸ்லிம் விவாக சட்டம்: பெண்களின் திருமண வயது முரண்பாடும் எதிர்பார்க்கும் திருத்தங்களும்
ஜீ. புஷ்பராணி சத்யா
இலங்கையில் நடைமுறையில் இருப்பது பொதுச்சட்டம் மற்றும் தனியார் சட்டங்கள் ஆகும். இவற்றுல் தனியார் சட்டங்கள் என்று வரும்போது மிக முக்கியமானவயாக கருத்தப்படுவது தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், முஸ்லிம் சட்டம், நடைமுறையில் இல்லாத போதும் தனியார் சட்டமாக இருக்கும் முக்குவர் சட்டம்.
இவற்றுல் முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக - விவாகரத்து சட்டம் அதிகம் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு சட்டமாக உள்ள நிலையில். அதனை குறித்து பொதுமக்களுக்கு பல கேள்விகளும், முரண்பாடுங்களும் காணப்படுகின்றன.
அதற்கு பிரதான காரணம் இச்சட்டம் குறித்து சில தெளிவின்மைகளும், புரிதல் இல்லாத் தன்மையுமே ஆகும். சமாதான ஊடகவியளின் அடிப்படையில் இச்சட்டத்தில் காணப்படும் முரண்பாடுகள் குறித்தும், குறிப்பாக இச்சட்டதில் பெண்களின் திருமண வயது சார்ந்து இருக்கும் தெளிவின்மை குறித்தும், இஸ்லாமிய அறிஞர்கள், பெண்ணியள்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சட்ட வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள் என்று பலரிடம் கருத்துக்களை கேட்டறிந்து, தற்போதைய சூழ்நிலையில் இச்சட்டத்தில் எவ்வாறான திருத்தங்கள் கொண்டு வந்தால் எதிர்காலத்தில் பெண்களுக்கு பல சிறப்பான சூழல் அமையும் என்ற விடையத்தையும் குறிப்பாக இக்கட்டுரையின் ஊடக முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டத்தின் கீழ் இருக்கின்ற திருமண வயது குறித்து காணப்படும் பிரச்சினை சம்மந்தமாக ஒரு பன்முகப்ப ட்ட கோணத்தில் நோக்கவே முற்படுகின்றோம்.
இலங்கை பாராளுமன்றத்தில் 18ம் நூற்றாண்டில் முஸ்லிம் சட்டம் அறிமுகமானது. 1929ம் ஆண்டு முஸ்லிம் விவாக- விவாகரத்துப் பதிவுகள் சட்டம் 1951ம் ஆண்டின் 13ம் இலக்க முஸ்லிம் விவாக- விவாகரத்து சட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. அதன் பின்னர் 1954/31, 1955/22, 1965/1, 1965/5, 1969/32, 1975ம் ஆண்டின் 41ம் இலக்க சட்டம் என பல தடவைகள் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படுகிறது.
1975ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை அதாவது 46 ஆண்டுகள் வரை எந்தவொரு திருத்தங்களும் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை. பொதுச்சட்டம் மட்டுமல்ல பெரும்பாலான சட்டங்கள் பெண்ணின் திருமண வயது பதினெட்டு என்று கூறும் போது, முஸ்லிம் சமூகம் மட்டும் பருவ வயது அடைந்த பெண் திருமணம் செய்யலாம் எனும் கருத்தில் பலவித கருத்துவேறுபாடு காணப்பட்டாலும், அதில் காணப்படும் நியாயப்பாடு குறித்து தெரிந்து கொள்வதற்காக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு தலைமைத்துவம் வகிக்கும் அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் ஷேக் எம் அர்க்கம் நூரமித் அவர்களை தொடர்புகொண்டு இம் முஸ்லிம் தனியார் விவாக - விவாகரத்து தொடர்பில் காணப்படும் முரண்படுகளையும், அது சார்ந்து பேசப்படும் வாத விவாதம் குறித்து கேட்டோம். அது பற்றிய கருத்துக்களை மிகவும் பொறுமையுடனும், பொறுப்புடனும் பகிர்ந்து கொண்டார்.
எமது முஸ்லிம் தனியார் சட்டம் மிக நீண்ட வரலாற்று பின்னணியை கொண்டது. மார்க்கம், கலாச்சாரம், மத நம்பிக்கையுடன் பின்பற்றி வருகின்றனர். இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரில் தொன்னூற்றுஒன்பது (99%) வீதமானவர்கள் சுன்னி முஸ்லிம்களாகவும் மீதமுள்ளவர்கள் ஷியா அல்லது போரா முஸ்லிம்களாகவும் உள்ளனர். எமக்கு நான்கு மத்ஹாப் (சட்ட வியாக்கியானம்) உள்ளன அவற்றில் சாபி கோட்பாடுகளை தான் நாம் பின்பற்றுகிறோம்.
முஸ்லிம் தனியார் விவாக-விவாகரத்து சட்டம் பிற்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை கலாச்சாரம் என்பவைக்கு அமைவாக ஏற்படுத்தபட்டிருந்த போதிலும், எமக்கும் இதில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை, ஆனால் அவர்கள் முன்வைக்கும் சில விடயங்களில் முரண்படு உள்ளது.
சட்டம் சார்ந்த சில விடயங்களை ஆழமாக பார்த்தோமானால் இச்சட்டத்தில் பெண்களின் திருமண வயது சரியாக குறிப்பிடப்படவில்லை அதற்கு காரணம் உள்ளது நாம் விஞ்ஞான ரீதியாக இத்தனை பார்த்தால் புரியும் ஒரு பெண் பூப்பெய்திய பின்னர் அப்பெண்ணிற்கு உணர்ச்சிகள் மற்றும் உடல் ரீதியான மாற்றங்கள் நிகழ ஆரம்பித்து விடும், அவ்வாறான சந்தர்ப்பம் அவர்களை தவறான விடயங்களுக்கு இட்டுச் சென்று விட கூடாது, பூப்பெய்திய பெண்கள் உள - உடல் ரீதியாக திருமணத்திற்கு தயாராக இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம்.
அத்தனையும் தாண்டி பெண்களின் பாதுகாப்பில் எமது மார்க்கம் அதிக அக்கறை கொண்டுஉள்ளது அதனால் பெண்ணுக்கு ஒரு ஆண்துணை கண்டிப்பாக தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் 2000ஆம் ஆண்டிற்கு பிற்பகுதியில் இருந்து பார்த்தோம் என்றால் சிறு வயது திருமணங்கள் மிகவும் குறைவாகவே பதிவாகி இருப்பது குறிப்பிட்ட தக்க ஒரு மாற்றம் நடைமுறைக்கு வந்திருப்பதை காணலாம்.
அதனை தாண்டி அந்த காலத்தில் கல்வி முறை எவ்வாறு இருந்து இருக்கும் என்று எங்களுக்கு உணர முடியும் அதனால் திருமணத்தின் போது வாய் மொழி மூலமான உடன்படிக்கை நடைமுறை படுத்த பட்டிருக்கும், பெண்ணின் கையொப்பம் குறித்து இருக்கும் முரண்பாட்டுக்கு காரணம் அந்த காலத்தில் பெண்கள் கல்வி குறித்து கேள்வி எழுகிறது, அடுத்து ஒரு குடும்பத்தில் ஆணின் முக்கியத்துவம் அதனால் பெண்கள் ஆணை சார்ந்து வாழ பழகி இருந்தார்கள், இப்போது பெண்கள் தனித்து வாழும் மேற்கேத்தேய நாகரிக பரவல் காரணமாக மாற்றங்கள் குறித்து அதிகம் பேசப்படுகிறது.
இவ்வாறு பல விடயங்களை கூறலாம். எமது திருத்த சட்ட மூலங்களில் கூட நாம் பல திருத்தம் முன் மொழிந்து உள்ளோம், மிக விரைவில் அவை சட்டமாக நடைமுறைக்கு வர வேண்டும் என்பது எமது கருத்துமேயாகும், என தனது கருத்துக்களை முன் வைத்தார்.
இதனை தொடர்ந்து நாம் இக் கட்டுரைக்காக தொடர்பு கொண்டது பிஸிலியா பூட்டோவினை தொடர்புகொண்டோம். இவர் புத்தளம் மாவட்டத்தில் பெண்கள் உரிமை செயற்பாட்டாளராகவும், பெண்ணியவாதியகவும் செயற்பட்டு வருகிறார்.
முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டத்தில் காணப்படும் திருமண வயது குறித்து காணப்படும் முரண்பாட்டை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் என கேட்ட போது, அவர் இவ்வாறு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
2012ஆம் ஆண்டு இலங்கை மக்கள் சனத்தொகை கணக்கெடுப்பின் அறிக்கைப்படி இலங்கையில் இளவயதுத் திருமணம் சிங்கள மக்களிடையேதான் அதிகமாகக் காணப்படுகின்றது. விகிதாசார அடிப்படையில் அந்த அறிக்கையை கொஞ்சம் பார்ப்போமா.....
2012 ம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் அறிக்கைப்படி 3240 திருமணங்கள் 15 வயதிற்குக் குறைந்த இளவயதுத் திருமணங்கள் பதிவாகியுள்ளது. அதில் 2200 திருமணம் சிங்கள சமூகத்திலும், 511 திருமணங்கள் தமிழ் சமூகத்திலும், 471 திருமணங்கள் முஸ்லிம் சமூகத்திலும் பதிவாகியுள்ளது. ஏனையவை எஞ்சியுள்ள மற்றைய சமூகத்திலும் பதிவாகியுள்ளது. இலங்கையில் வெருமனே 9% வீதம்தான் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். இந்த 9% ல் 471 இளவயதுத் திருமணம் என்றால் நிச்சயம் சிந்திக்க வேண்டிய விடயம் தானே?
மேலும் ஆயிஷா நாயகியுடைய திருமண வயதை வைத்துக் கொண்டு பெண்களின் திருமண வயதை கணிப்பவர்கள் எவரும் ஆண்களின் வயதை ஏன் கட்டாயம் 25க்கு மேலாக இருக்க வேண்டும் என்று வாதிடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை!
“சீனா தேசம் சென்றேனும் சீர் கல்வியை கற்றுக் கொள்” என்று இஸ்லாம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. தாம்பத்திய சுகத்திற்காக இருவரின் வாழ்க்கையை அழிப்பதை விட்டு சிறந்த கல்வியை எமது சமூகத்திற்கு வழங்குவதன் மூலம் மாத்திரமே நல்ல இளம் சமூகத்தை உருவாக்க முடியும்.
இலங்கை முஸ்லிம்களின் விவாக விவாகரத்து சட்டத்தில் நாங்கள் எவரும் மாற்றம் ஏற்படுத்தக் கூறவில்லை திருத்தம் செய்யுமாறுதான் போராடி வருகின்றோம். இந்தப் போராட்டத்தை ஜம்மியத்துல் உலமா செய்திருந்தால் எல்லோரும் ஏற்றிருப்பார்கள் என நினைக்கின்றேன் ஏனென்றால் அவர்கள் “ஆண் புத்தி ஜீவிகளாச்சே” அதனை தொடர்ந்து புத்தளம் மாவட்டத்தில் நடந்த இரு வேறு சம்பவகளை எம்மோடு பகிர்ந்து கொண்டார் பிஸிலியா பூட்டோ.
பதின்மூன்று (13) வயதான ஒரு சிறுமியை அவளின் பெற்றோர் முப்பத்திரண்டு (32) வயதுடைய ஒருவருக்கு காதி நீதிபதி அனுமதியுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர் அதனை அறிந்த அயலவர்கள் இது தொடர்பில் அருகில் இருக்கும் பொலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து உள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலீஸார் அந்த திருமணம் செல்லுபடியாகாது, பாலிய விவாகம் என்று கூறி அப்பெண்ணுக்கு பதினெட்டு (18) வயது வரை தன் பெற்றோருடன் தான் இருக்க வேண்டும் என்று கூறியது மட்டுமில்லாது ஒவ்வொரு மாதமும் அப்பெண் தன் கன்னி தன்மையை (virginity test) நிரூபிக்க மருத்துவ அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.
அச்சிறு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று கற்பனை பண்ணியும் பார்க்க முடியாது. அடுத்து இது போல் பதினாறு வயதான ஒரு பெண்ணுக்கு அவள் வாழ்க்கையை மாற்றி போட்ட ஒரு சம்பவம் நடந்தது. அப்பெண்ணின் தந்தை ஒருவரிடம் கடன்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக அந்த கடனை அடைக்க முடியாமல் இருந்து அவருக்கு கடன் கொடுத்தவர் ஒரு ஆலோசனை சொன்னாராம் அது உங்கள் கடனை தர தேவையில்லை அதற்கு பதிலாக உங்கள் மகளை எனக்கு நிக்காஹ் பண்ணி வைங்க என்று சினிமா பாணியில் கேட்டுள்ளார், சாதாரண தரம் கற்றுக்கொண்டு இருந்து அந்த பெண் ஒரு நாள் பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது அவளின் அனுமதி இல்லாமலே திருமணம் நடந்து முடிந்து இருந்தது.
நான் படிக்க வேண்டும் என்று எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்க்க தயாராக இல்லை, சேர்ந்து வாழவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி சம்மதிக்க வைத்துள்ளனர். கொஞ்ச காலத்தில் அப்பெண் கர்பமாகிவுள்ளார் ஆனால் அவள் கணவர் போதைபொருளுக்கு அடிமையாகி இருந்த காரணத்தால் வீட்டில் அடிக்கடி சண்டை வந்த வண்ணம் இருந்து இருக்கிறது ஒருநாள் சண்டை வலு ஆனாதில் அப்பெண்ணின் கரு கலைந்து விட்டது.
அதற்கு மேல் அந்த பெண்ணிற்கு பொறுமை போனது எம்மிடம் வந்துவிட்டாள். ஒரு வருடத்துக்குள் அவள் வாழ்வில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது, படிக்க வேண்டிய பிள்ளையின் வாழ்வை மாற்றியது யாரு? இவ்வாரான சம்பவங்கள் தான் எமக்கு இச்சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று எண்ணத்தை ஆழமாக தோற்றுவிக்கிறது என்று தனது கருத்தையும் ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டார் பிஸிலியா பூட்டோ அவர்கள்.
அதனை தொடர்ந்து முஸ்லிம் தனியார் சட்டம் குறித்து பன்னூல் ஆசிரியரும், இஸ்லாமிய சட்ட அறிஞருமான ஷெய்க் உஸ்தாஸ் மன்சூரினால் 2018ஆம் ஆண்டு இணையதளம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது,
அரசிடம் இரு திருத்த நகல்களை நாம் சில வேறுபடுகளுடன் முன்வைத்துள்ளோம். ஜம்மியத்துல் உலமாவின் தனியார் சட்ட திருத்த நகலும் சரி, சலீம் மர்சூப் தலைமையில் ஆனா குழு சமர்ப்பித்த தனியார் சட்ட திருத்த நகலும் சரி இஸ்லாமிய ஷரீஆவுக்கு உட்பட்டவையேயாகும். ஆகவே எந்த சட்ட திருத்த நகல் ஏற்றுக்கொள்ளபட்டாலும் சரி இதில் பிரச்சினைப்படுவதற்கு எதுவுமே இல்லை என்பது என் வாதம்.
இங்கு ஜம்மியத்துல் உலமாவே மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். அவர்கள் எப்போதும் மாற்றுக் கருத்துக்களை மதிக்கின்ற பண்பாடு உடையவர்கள், இது இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறான கண்ணோடத்திலேயே முஸ்லிம் தனியார் சட்ட திருத்த நகல்கள் இரண்டையும் நாம் நோக்க வேண்டும். என அக்கட்டுரையில் தெரிவித்து இருந்தார்.
அதை போன்று இலங்கையில் தனக்கென ஒரு தனியிடத்தை ஊடகத்துறையில் உருவாக்கிய ஊடகவியலாளர் ரினோசா நவாசதிடம் இவ்விடயம் குறித்து கேட்ட போது அவர் கூறியன ஒரு பெண் வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்து வைப்பது இன்னமும் சில இடங்களில் நடைபெறுகிறது.
இங்கு பெண்களின் எதிர்காலம், கல்வி பாதிக்க படுகிறது, சிறுவயது திருமணம் பலதார திருமணம் என்பன விவாகரத்து வரை கொண்டு விடுகிறது, இவை அனைத்திலும் அதிகமாக பாதிக்க படுவது பெண்களே. அதனால் ஒரு பெண்ணாக இவ்விடயங்களில் நான் முரண்படுகின்றேன்.
இதனை அறிஞர்கள், புத்திஜீவிகள் அறிவுபூர்வமாக சிந்தித்து சில திருத்தங்களை இச்சட்டத்தில் கொண்டு வர வழி சமைத்து கொடுக்க வேண்டும் என்பதும் சட்டத்தில் திருத்தங்கள் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என ரினோசா நவ்சாத் தனது எண்ணத்தை எம்மிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து மனித உரிமை செயற்பாட்டாளர், பெண்ணியவாதியும் ஆனா திருமதி நளினி ரத்னாராஜாவின் கருத்து,
"இலங்கையில் பல வழக்காற்று சட்டங்கள் உள்ளன அதில் ஒன்று முஸ்லிம் விவாக- விவாகரத்து சட்டம். இச்சட்டங்கள் அனைத்திலும் பெண்களின் உரிமையை மருதலிக்கும் அல்லது பாரபட்சம் பார்க்கும் சட்டங்களாக அமைந்து இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த முஸ்லிம் தனியார் சட்டத்தில் நான் காணும் பிரதான குறைபடு தான் பன்னிரெண்டு வயது தாண்டினால் அப்பெண் பிள்ளை திருமணத்திற்கு தயாராக முடியும் திருமணம் செய்யும் வயதெல்லை பன்னிரெண்டாக இருக்கிறது. உலகில் அநேக நாடுகளிலும் இலங்கையிலும் கூட சாரதி அனுமதி பத்திரமாக இருப்பினும், வாக்காளிப்பதாக இருப்பினும் பதினெட்டு வயதை அடைந்து இருக்க வேண்டும்.
ஆனால் இன்னமும் இச்சட்டத்தினால் சிறுவயது திருமணங்கள் நடைபெறுவது வருத்தமளிக்கிறது. பெண்களின் திருமண வயது பதினெட்டாக திருத்தியமைக்கப்பட வேண்டும் என நாம் கோரிக்கைகள் முன்வைத்து உள்ளோம் இத்தனையே நான் பிரதான முரண்பாடாக பார்க்கிறேன் என்று தனது கருத்துக்களை முன் வைத்தார்.
இக்கட்டுரையின் மூலம் நாம் பல விடயங்களையும் கருத்துக்களையும் பார்த்தோம் இதில் பலரின் எதிர்பார்ப்பு மற்றும் நோக்கம் முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரபட்டால் பெண்களின் எதிர்காலம் நன்மை பயக்கும் விதமாய் மாறும் என்பதாக இருந்ததை காணக்கூடிதாக இருந்தது.
சட்டங்கள் மக்களின் நலனில் அதிக பங்கு வகிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அதனால் அவை தொடர்பில் முன்வைக்கபடும் திருத்தங்கள் குறித்து நடுநிலையான முடிவுகள் எதிர்காலத்தில் எடுக்கப்படலாம் எனும் நேர்மறையான எண்ணத்துடனும் இக்கட்டுரைக்காக தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்கிறேன்.
MWRAF நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான சமாதான ஊடகவியல் இருநாள் பயிற்சி நெறியினை தொடர்ந்து சமாதான ஊடகவியலின் அடிப்படைகளை கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.
Comments (0)
Facebook Comments (0)