பனிப்போரில் பௌத்தம்
சாந்தனி கிரிண்டே
பனிப்போரின் போது தென் கிழக்கு ஆசியாவில் ஒரு "பௌத்த கொள்கையை" முன்வைக்க அமெரிக்க அரசாங்கத்தை எது தூண்டியது மற்றும் கம்யூனிசத்தின் பரவலை எதிர்ப்பதற்கு பிராந்தியத்தின் முக்கியமான மதத்தைப் பயன்படுத்துவதில் இந்த இரகசிய முயற்சிகள் எந்தளவு வெற்றிகரமாக இருந்தன? மற்றும் பனிப்போரின் போது பௌத்தர்களை ஓர் கம்யூனிச எதிர்ப்பு வேலைத்திட்டமாக இணைப்பதற்கான அமெரிக்காவின் கொள்கையை வடிவமைப்பதில் இலங்கை பங்கு வகித்ததா?
யேல் பல்கலைக்கழக வரலாற்றாசிரியரான யூஜின் ஃபோர்டு, "பனிப்போர் துறவிகள்: பௌத்தம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் இரகசிய வியூகம்" என்ற புத்தகத்தில் எழுப்பிய கேள்விகள் இவையாகும்.
பதிலைக் கண்டுபிடிப்பதற்காக, ஆசிரியர் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆவணக் காப்பகப் பொருட்களைப் பயன்படுத்தி முழுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டதுடன், அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட “பௌத்த கொள்கையின்” அதிகம் அறியப்படாத அம்சத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார், இதனை வடிவமைப்பதில் இலங்கையும் (அப்போது சிலோன்) அறியாமல் கூட பங்கு வகித்தது இருக்கலாம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகள் உறைநிலையாக மாற்றமடைந்ததுடன், ஜெர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராகப் போராடுவதற்கான பொதுவான முன்னணி பனிப்போருக்கு வழிவகுத்தது.
இரண்டு வல்லரசுகளும், போருக்குப் பிறகு ஐரோப்பாவின் சில பகுதிகளைத் தமக்காக வளைத்துக்கொண்டதால், ஆசியாவிலும் தங்கள் செல்வாக்கு மண்டலங்கள் வலுவாக இருப்பதை உறுதிசெய்ய ஆர்வமாக இருந்தன.
தென் கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் கம்யூனிசத்தின் செல்வாக்கு காலூன்றுவதால், சோவியத் யூனியன் மற்றும் சீனாவின் செல்வாக்கைத் தடுக்க ஒரு புதிய மூலோபாயத்தைக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா கடுமையாக அழுத்தம் கொடுத்தது.
பிராந்தியத்தில் பல நாடுகளில் பௌத்தம் ஆதிக்கம் செலுத்தும் மதமாக இருப்பதால், "பௌத்த கொள்கை" பௌத்தர்களை ஓர் கம்யூனிச எதிர்ப்பு வேலைத்திட்டத்தில் இணைப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் மத்திய புலனாய்வு அமைப்பால் (CIA) இரகசியமாக ஆதரிக்கப்படும் ஒரு அமைப்பான ஆசிய அறக்கட்டளை மூலம் செயற்படுத்தப்பட இருந்தது.
தாய்லாந்து, மியான்மர் (பர்மா) மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஆசியா அறக்கட்டளையின் வகிபாகம் ஃபோர்டு புத்தகத்தின் மையமாக இருக்கும் அதே வேளையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பௌத்தர்களின் உலகளாவிய கூட்டுறவு பற்றிய யோசனையை முன்வைத்த இலங்கை, தான் அறியாமலேயே, முதல் "உண்மையான சர்வதேச" பௌத்த அமைப்பான அகில இலங்கை பௌத்த காங்கிரஸில் (ACBC) இருந்து தோற்றம் பெற்ற பௌத்தர்களின் உலகளாவிய கூட்டுறவின் (WFB) ஸ்தாபிப்புடன் அமெரிக்க மூலோபாயத்திற்கு உதவியது.
1947 டிசம்பரில், ACBC இன் கூட்டத்தில், புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவற்றின் 2500 வது ஆண்டு நிறைவை (புத்த ஜெயந்தி) கொண்டாடுவதற்கான தயார்படுத்தலுக்காக இலங்கையில் நடைபெறும் மாநாட்டிற்கு உலகம் முழுவதிலுமிருந்து பௌத்த பிரதிநிதிகளை அழைப்பதற்கு ஒரு வரலாற்றுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அந்த சகாப்த நிகழ்வு 1956-57 இல் அனைத்து பௌத்த நாடுகளிலும் ஒரே நேரத்தில் கொண்டாடப்பட வேண்டும். அக் கொண்டாட்டங்களுக்குத் தயாராக WFB 1950 இல் நிறுவப்பட்டது.
எவ்வாறாயினும், 1947 தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறியளவான முன்னேற்றமே ஏற்பட்டதுடன், அது நிறுத்தப்பட்டிருக்கலாம் "ஆனால் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாளி அறிஞரும் ஒரு முக்கிய காங்கிரஸ் உறுப்பினருமான டாக்டர் ஜி. பி. மலலசேகரவின் விடாமுயற்சிக்காகவே" ஏற்பட்டது.
“1949 ஆம் ஆண்டு டாக்டர் மலலசேகர தத்துவறிஞர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹொனலுலுவிற்கு வந்திருந்தார். மாநாட்டிற்குப் பிறகு அமெரிக்காவின் பிரதான இடங்கள் மற்றும் இங்கிலாந்துக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன், மேற்கு நாடுகளில் பௌத்தம் பரவ வாய்ப்புள்ளதாக டாக்டர் மலலசேகர கருதினார்.
1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் நாடு திரும்பிய பின்னர் அவர் இலங்கைப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கையில், “மேற்கத்திய மக்களுக்கு பௌத்தமதம் ஒரு புதிய வாழ்க்கை முறையை வழங்குகிறது, அதைத்தான் அவர்கள் இப்போது மிகவும் விரும்பினார்கள், மேலும் இந்த தத்துவத்தை அதன் தூய்மையான வடிவத்தில் தக்கவைத்துக்கொள்ளும் ஒரே நாடு இலங்கைதான்," என ஃபோர்டு எழுதுகிறார்.
அவர் மீளத் திரும்பிய பின்னர், டாக்டர் மலலசேகரவின் தலைமையில் 1950 மாநாட்டிற்கான திட்டங்கள் புத்துயிர் பெற்றதுடன், பௌத்த பெரும்பான்மையான நாடுகளுக்கு அதில் கலந்து கொள்ளுமாறு அனுப்பப்பட்ட அழைப்புகள் பெரும் நேர்மறையான பதிலளிப்பைப் பெற்றன.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், "உலக பௌத்தர்களுக்கான அழைப்புக்கு டாக்டர் மலலசேகர எதிர்பார்த்ததை விட உற்சாகமாக பதிலளித்தது" என்று இப் புத்தகம் கூறுகிறது.
இவ்வாறு, 1950 மே 25 இல் இலங்கையில் முதல் சர்வதேச பௌத்த மாநாடு, தலதா மாளிகையில் (புனித தந்ததாது ஆலயம்) ஆரம்ப மத நிகழ்வுடன் கூடியது, அதைத் தொடர்ந்து கொழும்பு ஓட்டப்பந்தய மைதானத்தில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியவர்களில் பிரதம மந்திரி டி.எஸ்.சேனாநாயக்கவும் ஒருவராவார்.
மாநாட்டின் வெற்றியால் உற்சாகமடைந்த கலாநிதி மலலசேகர, "பௌத்த வரலாற்றில் இது மிகப்பெரிய விடயம்" என்று நிகழ்வைப் பற்றி அறிக்கையிடுவதற்கு அனுப்பப்பட்ட அமெரிக்க அதிகாரியிடம் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வைப் பற்றி உத்தியோகத்தர் அறிக்கையிடுகையில்: "மாநாட்டின் மொத்த அபிப்பிராயம் நிச்சயமாக தீய நோக்கங்கள் அல்ல, ஆனால் மாறாக, நல்லதோ கெட்டதோ, உலகளாவிய தொடர்புகளைக் கொண்ட ஒரு புதிய அரசியல் - மத அமைப்பு என்பதையும் தென்கிழக்கு ஆசியாவின் வெகுஜனங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த வேண்டுகோள் என்பதையும் உணர வேண்டும்.
WFB நிச்சயமாக ஒரு புதிய போருக்குப் பிந்தைய உலகளாவிய பௌத்த ஒற்றுமையின் மிக முக்கியமான நிறுவன வெளிப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் கொழும்பு, காத்மாண்டு, ரங்கூன் (யாங்கூன்) மற்றும் புனோம் பென் ஆகிய இடங்களில் பௌத்த உலகில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாநாடுகளின் மூலம் சர்வதேச பௌத்த உறவுகளுக்கான வழக்கமான மன்றத்தை வழங்கும் என்று ஃபோர்டு எழுதுகிறார்.
டாக்டர் மலலசேகர WFB இன் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இந்த நிலையில், அவர் வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு 1951 இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
வியட்நாமில் இருந்தபோது மே 27, 1951 அன்று ஹனோய் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் துறவிகளிடம் உரையாற்றினார், அங்கு அவர் இன்னும் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் உள்ள வியட்நாமிய கேட்போருக்கு வெளிப்படையான கரிசனையான விடயமான காலனித்துவ நீக்கம் பற்றி பேசினார். அவர் பெளத்தமதத்தின் உலகளாவிய வளர்ச்சியை உணர்ந்து கொண்டார்.
"மோதல்களைப் பாதுகாப்பதில் பௌத்தத்தின் தடுப்பு நடவடிக்கைகளை வலியுறுத்துவதன் மூலம், WFB பிளவுபடுத்தும் மதச்சார்பற்ற அரசியலுக்கான தளத்தினை உருவாக்கியதுடன், பெரும்பாலும் பனிப்போர் மேலோட்டத்துடன், அதன் மாநாட்டு விவாதங்களில் ஊடுருவியது," என்று ஃபோர்டு குறிப்பிடுகிறார்.
ஜூலை 1951 இல் ரங்கூனில் (யாங்கூன்) இருந்தான ஒரு அமெரிக்க தூதரக குறிப்பு அந்த நேரத்தில் பர்மாவில் உள்ள பௌத்தர்களுடன் தீவிரமான இரகசிய ஈடுபாட்டின் கொள்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது என்பதைக் குறிக்கிறது.
ஹனோயில் டாக்டர் மலலசேகரவின் மே 1951 உரை அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை துரிதப்படுத்துவதில் ஒரு பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்று காலம் வெளிப்படுத்துகின்றது.
"உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையில், ஜூலை 1951 முன்மொழிவுக்கும் பர்மாவில் புதிய ஆசிய அறக்கட்டளை திட்டத்தின் ஆரம்பத்திற்கும் இடையிலான உறவை மட்டுமே நாம் ஊகிக்க முடியும். ஒரு சாதாரண இணைப்பு சாத்தியமாகத் தெரிகிறது, ஆனால் உறுதிப்படுத்த முடியாது,” என்று புத்தகம் கூறுகிறது.
பர்மாவில் 1952 முதல் செயற்பட்டு வந்த சுதந்திர ஆசியக் குழுவிற்குப் பதிலாக 1954 செப்ரெம்பரில் நடைமுறைக்கு வந்த ஆசியா அறக்கட்டளை மூலம் அமெரிக்க பௌத்தக் கொள்கை இரகசியமாக செயற்படுத்தப்பட இருந்தது.
இது CIA ஆல் இரகசியமாக நிதியளிக்கப்பட்டதுடன் 2500 புத்த ஜெயந்தி கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களில் பர்மாவிற்கு உதவுவதில் ஈடுபட்டது. அது பர்மா (மியான்மர்) செயற்பாட்டை ஆரம்பித்த பிறகு, அறக்கட்டளை அதன் புதிய பெயரில் ஒவ்வொரு பிரதான தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மற்றும் இலங்கையிலும் அலுவலகங்களை உருவாக்கியது.
ஜனவரி 1957 அளவில், பௌத்தத்திற்கான பொதுவான கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டு ஒருங்கிணைப்பு சபை (OCB) திட்டத்தை செயற்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய உறுதியான நடவடிக்கைகள் குறித்த வரைவைத் தயாரித்தது.
அதே ஆண்டு பெப்ரவரி பிற்பகுதியில், திட்டத்தின் பிரதிகள் அரச திணைக்களம் மற்றும் சிலோன், பர்மா, தாய்லாந்து, லாவோஸ் மற்றும் கம்போடியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்குள் விநியோகிக்கப்பட்டன.
அதற்குள் 1956 இல் இலங்கையில் நடைபெற்ற ஓர் பிரதான தேர்தல், பௌத்த பிக்குகள் அரசியலில் செல்வாக்கு மிக்க தரப்பினராக உருவெடுத்ததுடன், இந்த வளர்ச்சி அமெரிக்காவால் அவதானிக்கப்பட்டது.
CIA பிரதிநிதி ஒருவர் உத்தியோகத்தர்களின் மாநாட்டின் போது "இலங்கையில் தேர்தலில் மதப் பிரச்சினை கணிசமான பங்கைக் கொண்டிருந்தது" என்று வலியுறுத்தினார்.
பௌத்த கொள்கைகள் அரசியல் ஈடுபாடின்மைக்கு அழைப்பு விடுப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நன்கு அறிந்திருந்தனர் என்று ஃபோர்டு கூறுகிறார். ஆயினும்கூட, இரகசியக் கொள்கையானது...
பௌத்த செல்வாக்கை கம்யூனிச எதிர்ப்பு வளமாக பயன்படுத்துதல் அல்லது பௌத்தர்களை அரசியல் வகிபாகத்தில் உள்ளீர்ப்பதாகும். இந்த முயற்சி உணர்திறன் வாய்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எனவே பௌத்த மதகுருமார்களை இலக்கு வைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை புத்திசாலித்தனமாகவும் இரகசியமாகவும் நடத்த வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.
அமெரிக்க முயற்சிகள் இருந்தபோதிலும், தென்கிழக்கு நாடுகள் விரைவில் கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளாகப் பிரிக்கப்பட்டன, ஆனால் "பௌத்த கொள்கைக்காக" இல்லை, தாய்லாந்து மற்றும் பர்மா போன்ற நாடுகளும் கம்யூனிசத்தின் செல்வாக்கின் கீழ் வந்திருக்கலாம் மற்றும் பனிப்போரின் பிரச்சினைகளும் வித்தியாசமாக மாற்றமடைந்திருக்கலாம்.
சாந்தனி கிரிந்தே ஒரு மூத்த அரசியல் மற்றும் வரலாற்று கட்டுரையாளர் என்பதுடன் இலங்கையில் நீண்ட காலமாக பாராளுமன்ற நிருபராக பணியாற்றுகின்றார். அவரை chandani.kirinde2016@gmail.com எனும் மின்னஞ்சலூடாக அணுகலாம்.
Factum என்பது ஆசியாவை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.
இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
Comments (0)
Facebook Comments (0)