இலங்கையின் காலநிலைப் பிரச்சினைக்கு காலநிலை பல்கலையின் ஊடாக தீர்வு கிட்டுமா?
றிப்தி அலி
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டினை மீட்டெப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்களுக்கு அதிக முக்கியத்தும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆலோசகர்களை ஜனாதிபதி நியமித்துள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்தில் தனியானதொரு பிரிவு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தலைமையில் செயற்படுகின்றது.
கடந்த வருடம் எகிப்தில் நடைபெற்ற COP27 மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றினை இலங்கை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இப்பல்கலைக்கழகம் ஸ்தாபிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப்பல்கலைக்கழகம் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச காலநிலை மாநாட்டில் அறிவித்தார்.
இதற்காக கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச ரீதியில் காலநிலை மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் நிறுவப்படவுள்ள இந்த சர்வதேச பல்கலைக்கழகம், இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாக அல்லாமல் சர்வதேச பங்குதாரர்களின் பல்கலைக்கழகமாகவும் செயற்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.
தன்னிறைவான பசுமை வலுசக்தியை கொண்டுள்ள இலங்கை, சூரிய சக்தி தொடர்பில் மாத்திரமின்றி காற்றின் சக்தி மற்றும் ஹைட்ரஜன் சக்தி தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பிலும் இப்பல்கலைக்கழகம் கவனம் செலுத்தும் என அவர் இந்த மாநாட்டில் குறிப்பிட்டார்.
இதேவேளை, இப்பல்கலைக்கழக நிர்மாணம் தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டதுடன் இதற்கு தேவையான ஒரு தொகுதி நிதியும் இதில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த செயற்திட்டத்திற்கு உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் பாரிய வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த காலநிலை பல்கலைக்கழகத்தின் மூலம் இலங்கை எதிர்நோக்கும் காலநிலை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டம் நம்பிக்கை வெளியிட்டது.
இப்பல்கலைக்கழகத்தினை நிறுவவுவது தொடர்பில் ஜனாதிபதி மிகவும் பிடிவாதமாக இருப்பதாகவும், அதற்கு தேவையான நிதியினை சர்வதேச அமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றேன் என ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், தமிழன் வார வெளியீட்டுக்கு அண்மையில் வழங்கிய விசேட நேர்காணலொன்றின் போது குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழக திட்டத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான டுபாயில் கடந்த வாரம் ஆரம்பமான COP28 மாநாட்டில் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
பாரிஸ் உடன்படிக்கையின் இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில் காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான தீர்மானமிக்க முயற்சிகளுக்குப் பங்களிப்பதற்குத் தேவையான திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்காகவே இப்பல்கலைக்கழகத்தை நிறுவுவ பரிந்துரைத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பங்களாதேஷ், சீஷெல்ஸ் மற்றும் மோல்டோவா போன்ற நாடுகள் ஏற்கனவே இந்தப் பணிக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் ஒரு தேசத்தின் பொறுப்பல்ல எனவும் முழு உலகமும் அதனுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
COP28 மாநாட்டிற்கு இணையாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, இலங்கையில் காலநிலை தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒன்றுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.
இப்பல்கலைக்கழகத்திற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் இணைத் தலைவர் பில் கேட்ஸிடமும் ஜனாதிபதி கோரினார்.
இதேவேளை, பொருளாதார நெருடிக்கடியினை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்கு மேலும் சுமையினை வழங்காத வகையிலேயே இந்தப் பல்கலைகத்தினை நிர்மாணிக்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் ஒப்பந்த்திற்கமைய அபிவிருத்தி அடைந்த நாடுகள் இதற்கு உதவி செய்யும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
முதற் கட்டமாக இப்பல்கலைக்கழகத்தின் செயலகமொன்றினை அடுத்த வருட நடுப் பகுதியில் கொழும்பில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் சூற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் பசுமைச் சூழல் நிதி தொடர்பான ஆலோசகர் கலாநிதி ஆனந்த மல்லவதந்திரி கூறினார்.
"இதுவொரு பாரம்பரிய பல்கலைக்கழகமாக செயற்படாது. இதனால், இப்பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் காணப்படாது.
உயர் கல்வி அமைச்சு தலைமை தாங்க நடத்தவுள்ள இப்பல்கலைக்கழகம், வெளிவிவகார அமைச்சு, நிதி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்று இணைந்து செயற்படும்" என அவர் குறிப்பிட்டார்.
பாரியதொரு திட்டமான இப்பல்கலைக்கழக விடயத்தினை தனியார் துறையினருடன் இணைந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கலாநிதி ஆனந்த மல்லவதந்திரி, இப்பல்கலைக்கழகத்தின் ஊடாக காலநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள், ஆய்வுகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் எனப் பல முக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்ப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் உலளாவிய ரீதியில் கடுமையாக பாதிக்கப்படுகின்ற முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை காணப்படுகின்றது. இதனால், இலங்கைக்கு மிகவும் அத்தியவசியமாகவுள்ள இந்த செயற்த்திட்டம் யாராலும் நிராகரிக்கப்படமாட்டது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது - இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், இந்த காலநிலை பல்கலைக்கழக செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் சூழலியல் நிபுணர்கள் உள்ளனர்.
அது மாத்திரமல்லாமல், உலகளாவிய ரீதியில் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள், நிதி நிறுவனங்கள் எனப் பல அமைப்புக்களுடன் இணைந்து செயற்படவும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதேவேளை, காலநிலை மாற்றம் தொடர்பில் சிறந்த முறையில் முன்னெடுக்கக்கூடிய வியாபார முயற்சிகள் தொடர்பிலும் இப்பல்கலைக்கழகத்தின் ஊடாக கவனம் செலுத்தப்படும் என கலாநிதி ஆனந்த மல்லவதந்திரி கூறினார்.
சூரிய சக்தி, காற்றின் சக்தி மற்றும் ஹைட்ரஜன் சக்தி போன்ற எமது நாட்டிலுள்ள நிலையில் நாம் இன்னும் நீர் மற்றும் நிலக்கரி ஊடான மின்சாரத்திலேயே தங்கியுள்ளோம்.
இதனால் பாரிய சுற்றாடல் மாற்றங்கள் எமது நாட்டில் ஏற்பட்டு வருகின்றது. இதனால், 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் மின்சாரத்தினை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பான ஆய்வுகளையும் இப்பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த பல்கலைக்கழகத்தின் பெறுபேறுகளை 2025ஆம் ஆண்டின் இறுதியில் பெற முடியும் என ஜனாதிபதியின் காலநிலை மாற்ற ஆலோசகர் நம்பிக்கை வெளியிட்டார்.
இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இப்பல்கலைக்கழ நிர்மாணத்திற்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், மீண்டுமொரு தவறினை இழைக்காத வகையில், இந்த பல்கலைக்கழக செயற்த்திடடம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இலங்கை மக்களின் எதிர்பார்ப்பாகும்.
Comments (0)
Facebook Comments (0)