மினா 'பீ வலயத்தில்' தங்க ஹாஜி ஒருவருக்கு 1,195 சவூதி ரியால்

மினா 'பீ வலயத்தில்' தங்க ஹாஜி ஒருவருக்கு 1,195 சவூதி ரியால்

இலங்கையிலிருந்து இந்த வருடம் புனித ஹஜ் கடமையினை மேற்கொள்ளும் ஹாஜிகளுக்காக  மினாவில் ஒதுக்கப்பட்டுள்ள 'பீ வலயத்தில்' ஒரு ஹாஜிக்கு 1,195.45 சவூதி ரியால் செலுத்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

இக்கட்டணம் ஹஜ் முகவர் நிறுவனங்களினால் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் இன்றைய இலங்கைப் பெறுமதி 95,650 ரூபாவாகும். புனித ஹஜ் யாத்திரிகை மேற்கொள்ளும் இலங்கை ஹாஜிகள் சுமார் ஐந்து நாட்கள் மினாவில் தங்குவது வழமையாகும்.

இதேவேளை, புனித ஹஜ் யாத்திரிகையினை மேற்கொள்ளவுள்ள 3,500 இலங்கை ஹாஜிகளுக்கு சவூதி அரேபியாவில் சேவைகளை வழங்குவதற்காக ஜித்தாவிலுள்ள அல் பைத் எனும் நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
 
புத்தசாசன சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், அரச ஹஜ் குழு தலைவர் றியாஸ் மிஹ்லார், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே இந்த நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிறுவனத்தின் ஊடாக மக்கா, மதீனா, அரபா, மினா மற்றும் முஸ்தலிபா போன்ற இடங்களில் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குரவத்து வசதிகள் போன்றன இலங்கை ஹாஜிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
 
குறித்த சேவை நிறுவனத்துடன் அரச ஹஜ் குழுவோ  அல்லது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமோ இதுவரை எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடவில்லை. மாறாக 2025ஆம் வருடத்திற்கு ஹஜ் உரிமம் பெற்ற ஹஜ் முகவர்களே இணைய வழியில் அல் பைத் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வர் என திணைக்களம் தெரிவித்தது.

அதேவேளை, மினாவில் வலயம் பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தினை மாத்திரமே ஹஜ் முகவர் நிறுவனங்கள் திணைக்களத்தின் ஊடாக அல் பைக் நிறுவனத்திற்கு மேற்கொண்டது. ஏனைய அனைத்துக் கொடுப்பனவுகளும், சேவை வழங்கும் நிறுவனத்திற்கு அங்கீகாரம் பெற்ற ஹஜ் முகவர் நிறுவனங்களினால் நேரடியாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால், ஹஜ் முகவர் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் வசதிகளுக்கு ஏற்பட சேவை வழங்கும் நிறுவனத்தின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் அது தொடர்பான தகவல்களை ஹஜ் முகவர் நிறுவனங்களிடமிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு எம்.ஐ. அஹமட் கபீரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு வழங்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.