8 மாதங்களில் 2,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

8 மாதங்களில் 2,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

றிப்தி அலி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 2 ஆயிரம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியரொருவர் உயர் கல்வியினை மேற்கொள்வதற்காகவே அல்லது தொழிலில் ஈடுபடுவதற்காகவோ வெளிநாடு செல்வதென்றால் இலங்கை மருத்துவ சபையின் நற்தரச் சான்றிதழை (Good Standing Certificate) பெற வேண்டும் என சிரேஷ்ட மருத்த நிர்வாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதற்கமைய, கடந்த ஓகஸ்ட மாதம் வரையான காலப் பகுதியில் 2 ஆயிரத்து இருநூற்று ஆறு வைத்தியர்கள் இந்த சான்றிதழை பெற்றுள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்தது.
 

கடந்த நான்கு வருடங்களில் இந்த வருடமே அதிகூடிய நற்தரச் சான்றிதழ் இலங்கை மருத்துவ சபையினால் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடயம் தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரிய வந்தது.

இதேவேளை, கடந்த நான்கு வருட காலப் பகுதியில் கடந்த ஜுன் மாதமே அதிகளாவிளான 433 வைத்தியர்கள் இந்த சான்றிதழைப் பெற்றுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் பதிவாளர் வைத்தியர் ஆனந்த ஹபுகொட தெரிவித்தார்.

அத்துடன், 2019ஆம் ஆண்டில் ஆயிரத்து இருநூற்று 18 வைத்தியர்களும், 2020 இல் ஆயிரத்து எண்பத்தொரு வைத்தியர்களும், 2021 இல் ஆயிரத்து முன்னூற்று 50 வைத்தியர்களும் இந்த நற்தரச் சான்றிதழை பெற்றுள்ளனர் என இலங்கை மருத்துவ சபை தெரிவிக்கின்றது.

இவ்வாறன நிலையில், 2019 இல் ஐநூற்று 33 வைத்தியர்களும், 2020 இல் ஆயிரத்து அறுநூற்று 59 வைத்தியர்களும், 2021 இல் ஆயிரத்து அறுநூற்று 23 வைத்தியர்களும் இந்த வருடந்தின் ஓகஸ்ட் மாதம் வரையான காலப் பகுதியில் முன்னூற்று 28 வைத்தியர்களும் பதிவுசெய்துள்ளதாக தகவல் அறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் இலங்கை மருத்துவ சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய கடந்த நான்கு வருடங்களில் 4 ஆயிரத்து நூற்று 43 வைத்தியர்கள் பதிவுசெய்துள்ள நிலையில் ஐயாயிரத்து எட்டு நூற்று 55 வைத்தியர்கள் இந்த நற்தரச் சான்றிதழை பெற்றுக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்தவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும். எனினும், அவர்களின் பயன்பாட்டுக்கான காரணத்தினை வெளியிட முடியாது என மருத்துவ சபை குறிப்பிட்டது.    

மருத்துவருக்கு எதிராக எந்தவித ஒழுக்காற்று விசாணைகளும் இல்லை என்பதனை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நற்தரச் சான்றிதழ் வழங்கப்படுகின்றது என இலங்கை மருத்துவ சபை மேலும் தெரிவித்தது.