தகவலறியும் விண்ணப்பத்தினை அடுத்து பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்ட நீதிச்சேவை ஆணைக்குழு
ரிஹ்மி ஹக்கீம்
தகவலறியும் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு நீதிச்சேவை ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
குறித்த பரீட்சையானது கொழும்பில் மாத்திரமே நடைபெற்றது. 2021இல் நாட்டின் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருக்கும் போது நடைபெற்ற இப்பரீட்சையில் வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மாகாணங்கள் உட்பட பல பிரதேசங்களில் இருந்தும் பரீட்சார்த்திகள் தோற்றினார்கள்.
எனினும் நீண்ட நாட்களாக பெறுபேறுகள் வெளிவராததால் 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பரீட்ச்சாத்திகள் நீதிச்சேவை ஆணைக்குழுவை தொடர்பு கொண்ட போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் 2023ஆம் வருடம் ஆரம்பமானதை தொடர்ந்தும் பெறுபேறுகள் வெளியாகவில்லை என்பதால் பெறுபேறுகள் எப்போது வெளிவரும், தாமதத்திற்கான காரணம் என்ன என்று வினவிய போது தெளிவான பதில் பரீட்ச்சாத்திகளுக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து, இச்செய்தியை எழுதும் ஊடகவியலாளரினால் கடந்த ஜூன் 21 ஆம் திகதி நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு தகவலறியும் விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு பதில் எதுவும் கிடைக்காமையினால் ஜூலை 31ஆம் திகதி நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரிக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து குறித்த தகவலறியும் விண்ணப்பம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஆகஸ்ட் 03ஆம் திகதி மின்னஞ்சல் மூலம் குறித்த ஊடகவியலாளருக்கு அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் செப்டம்பர் 21ஆம் திகதி வியாழக்கிழமை முதல் குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சார்த்திகளுக்கு தபால் மூலம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சுமார் இரு வருடங்களுக்கு முன்பு நடாத்தப்பட்ட நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
Comments (0)
Facebook Comments (0)