உலகளாவிய புலனாய்வு ஊடகவியல் மாநாடு

உலகளாவிய புலனாய்வு ஊடகவியல் மாநாடு

சுவீடனின் கோதன்பர்கிலிருந்து றிப்தி அலி

சர்வதேச ரீதியில் அதிக ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடும் மாநாடாக உலகளாவிய புலனாய்வு ஊடகவியல் மாநாடு காணப்படுகின்றது.

இதன் 13ஆவது மாநாடு கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை சுவீடனின் வரலாற்று நகரான கோதன்பர்கில் இடம்பெற்றது.

உலகளாவிய புலனாய்வு ஊடகவியலாளர் வலையமைப்பு, போஜோ மீடியா நிறுவனம் மற்றும் சுவீடனின் புலனாய்வு ஊடகவியலாளர் அமைப்பு ஆகியன இணைந்து இந்த வருட மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தது.  

இந்த மாநாட்டில் ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு என 132 நாடுகளைச் சேர்ந்த 2,138 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். இதில், இலங்கையினைச் சேர்ந்த நான்கு பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, தெற்காசிய பிராந்தியத்தினைச் சேர்ந்த சுமார் 70 ஊடகவியலாளர்களும் இம்மாநாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தனர்.

புலனாய்வு ஊடகவியல், தரவு ஊடகவியல், தகலறியும் உரிமை, ஊழல் ஒழிப்பு, சூழலியல் ஊடகவியல், தகவல் தொழிநுட்பம், வலையமைப்புக்களை உருவாக்கல் என 75க்கு மேற்பட்ட தலைப்புக்களிலான கலந்துரையாடல்கள் இந்த மாநாட்டில் இடம்பெற்றன.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

இதேவேளை, கடந்த 11 வருடங்களாக உலகளாவிய புலனாய்வு ஊடகவியலாளர் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராக செயற்பட்ட டேவிட் கப்லான், இந்த வருட மாநாட்டினை அடுத்து ஓய்வுபெற்றார்.

இதனையடுத்து குறித்த பதவிக்கு எமிலியா டியாஸ் ஸ்ட்ரக் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளமை இந்த மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

உலகளாவிய புலனாய்வு ஊடகவியலின் முதலாவது மாநாடு 2001ஆம் ஆண்டு டென்மார்கின் தலைநகரான கோபன்ஹேகனில் நடைபெற்;றது. அதனைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை தொடர்ச்சியாக இந்த மாநாடு இடம்பெற்று வருகின்றது.

எனினும், கொவிட் - 19 பரவல் காரணமாக 2021ஆம் ஆண்டு இணைய வழியின் ஊடாகவே இந்த மாநாடு இடம்பெற்றது. இதுவரை சுமார் 135 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து மேற்பட்ட ஊடகவியலாளர்களை உலகளாவிய புலனாய்வு ஊடகவியல் மாநாடு ஒன்றிiணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.