கட்டுநாயக்க விமான நிலையத்தின் தொழுகை இடம் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுமா?

கட்டுநாயக்க விமான நிலையத்தின் தொழுகை இடம் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுமா?

Claim: கட்டுநாயக்க விமான நிலையத்தின் தொழுகை இடம் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவலொன்று பரப்பப்பட்டு வருகின்றது.

Fact: முஸ்லிம் சமூகத்தினருக்கு தொழுகைக்காக அமைக்கப்பட்டுள்ள அறைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழுகைக்காக அமைக்கப்பட்டுள்ள இடங்களை முஸ்லிம் சகோதர சகோதரிகள் பயன்படுத்தாவிட்டால் இந்த இடங்கள் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளதாக பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை அவதானிக்க முடிந்தது.

அவ்வாறு பகிரப்பட்ட பதிவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :

“கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழுகைக்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் சிறிது நேரம் செலவிடுமாறு அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளையும் விமான நிலைய ஆணையம் கேட்டுக்கொள்கிறது.

விமான நிலையத்தில் உள்ள இடத்தில் யாரும் தொழுகை நடத்தாததால் இந்த இடங்கள் பயன்படுத்தப்படாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களை முஸ்லிம்கள் தொழுகைக்காக பயன்படுத்தாவிட்டால், இந்த இடங்கள் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

எனவே உங்கள் பயணம் வெற்றியடையவும், இந்த இடங்களும் தொலைந்து போகாமல் இருக்கவும் உங்கள் சகோதர, சகோதரிகள், உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் விமான நிலையங்களில் 5 முதல் 10 நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இந்த செய்தியை மற்ற குழுக்களுக்கும் பரப்புங்கள், உங்கள் முயற்சிகளுக்கு அல்லாஹ் உங்களுக்கு வெகுமதி அளிப்பான்”.

இப்பதிவானது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் இது குறித்து ஆராய்ந்தோம். இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்புகள் அல்லது செய்திகள் வெளியாகியுள்ளதா என ஆராய்ந்தபோது, அவ்வாறான அறிவிப்புகள் அல்லது செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இது குறித்து மேலும் ஆராய்ந்ததில், 2021ஆம் ஆண்டிலும் இதே வசனங்களுடன் கூடிய பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

மேலும், இது தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் வினவிய போது, "முஸ்லிம் சமூகத்தினருக்கு தொழுகைக்காக அமைக்கப்பட்டுள்ள அறைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ரீதியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இந்த அறைகள் அகற்றப்படமாட்டாது" எனத் தெரிவித்தார்.

Conclusion

எனவே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழுகைக்காக அமைக்கப்பட்டுள்ள இடங்களை முஸ்லிம் சமூகத்தினர் பயன்படுத்தாவிட்டால் இந்த இடங்கள் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் போலியானவை என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.

Results: False

நன்றி: FactSeeker