பாகிஸ்தான் வெள்ள நிவாரண திட்டம்: பாக். அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டு வெளியீடு
2022 பாகிஸ்தான் வெள்ள நிவாரண திட்டத்தினை (FRP) இன்று பாகிஸ்தான் அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து இஸ்லாமாபாத் மற்றும் ஜெனிவாவில் ஒரே நேரத்தில் ஆரம்பித்து வைத்தன.
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் 33 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த பேரழிவுகரமான மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் பின்னணியில் பாகிஸ்தான் வெள்ள நிவாரண திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
350க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 287,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும் 662,000 பகுதியளவிலும் சேதமடைந்து உள்ளன.
735,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன. 2 மில்லியன் ஏக்கர் பயிர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு உள்கட்டமைப்புக்கு வசதிகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
US$160.3 மில்லியன் பெறுமதியான உயிர்காக்கும் நடவடிக்கைகளான உணவு பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கான உதவிகள், தங்குமிட வசதிகள் மற்றும் உணவு அல்லாத பிற பொருட்கள், ஊட்டச்சத்து திட்டங்கள், ஆரம்ப சுகாதார சேவைகள், பாதுகாப்பு, நீர் மற்றும் சுகாதாரம், பெண்கள் சுகாதாரம் மற்றும் கல்வி ஒத்துழைப்பு, மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கான தங்குமிடம் ஆகிய 5.2 மில்லியன் மக்களின் தேவைகளில் இந்த வெள்ள நிவாரண திட்டம் கவனம் செலுத்துகிறது.
வெள்ள நிவாரண திட்டமானது முதன்மை மனிதாபிமான தேவைகள், முயற்சிகள் மற்றும் ஐ.நா மற்றும் பிற நலன் விரும்பிகளுடன் இணைந்து இந்த சவால்களை கையாள பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்குவதோடு பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நன்கு ஒருங்கிணைந்த செயல் திட்டத்தையும் கொண்டுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயம், சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் உணவு அல்லாத பொருட்கள், தண்ணீர், சுகாதாரம் ஆகிய பல் துறை விடயங்களை வெள்ள நிவாரண திட்டம் கொண்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் தாராள மனப்பான்மையுடன் 3 மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானிய அகதிகளுக்கு ஆதரவளித்தது வருகிறது. மேலும் முந்தைய சந்தர்ப்பங்களைப் போலவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குறைந்தபட்சம் 421,000 அகதிகள் இந்த வெள்ள நிவாரண திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கு முக்கிய உரை ஆற்றிய வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி,
“அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் தேசம் ஆதரவு அளித்து வருகிறது. மக்கள், சிவில் சமூகம் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் தாராள மனப்பான்மையுடன் நிவாரணப் பணிகளை நிறைவு செய்ய பெரிய அளவில் உதவி வருகின்றன.
மேலும், பிரதமர் வெள்ள நிவாரண நிதி 2022 ஆனது, நாடு பூராகவும் , வெளிநாடுகளில் உள்ள மக்கள் வெள்ள நிவாரணப் பணிகளில் பங்களிக்க வசதியாக நிறுவப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த திட்டமானது ஒட்டுமொத்த தேவைகளின் ஒரு பகுதியை மட்டுமே நிவர்த்தி செய்யும் . எனவே, பரந்தளவு உதவிகளும் முயற்சிகளும் எதிர்பார்க்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.
"இச்சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் மக்களுக்கு சர்வதேச சமூகத்தின் முழு ஆதரவும் ஒற்றுமையும் பாகிஸ்தான் மக்களின் துன்பங்களைத் தணிப்பதற்கும் அவர்களின் வாழ்க்கையையும் சமூகங்களையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்கும் மிகவும் அவசியமான சந்தர்ப்பமாகும்" என்றும் வெளியுறவு அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனது வீடியோ செய்தியில்,
"முன்னெப்போதுமில்லாத அளவு பாகிஸ்தான் மக்கள் கனமழை மற்றும் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதற்காக பாகிஸ்தான் அரசு மிகவிரைவாக செயற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசானது உடனடி பண நிவாரணம் உட்பட தேசிய நிதியை வெளியிட்டுமுள்ளது.
ஆனால் தேவைகளின் அளவு வெள்ள நீர் போல் உயர்ந்து வருகிறது. எனவே, உலக நாடுகளின் கூட்டு உதவிகள் விரைவாக தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் திட்டமிடல் அமைச்சர் அஹ்சன் இக்பால், "பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய முதல் பத்து நாடுகளில் பாகிஸ்தானும் உள்ளது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெப்ப அலைகள், காட்டுத் தீ, பல பனிப்பாறை ஏரி வெடிப்பு, வெள்ளம் போன்ற கொடூரமான காலநிலை நிகழ்வுகளால் நாம் பாதிக்கப்பட்டோம். இப்போது இந்த பேரழிவு தரும் பருவமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளோம்." என்று குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் குடியுரிமை மற்றும் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ஜூலியன் ஹார்னிஸ் கருத்துத் தெரிவிக்கையில் "இந்த பாரிய வெள்ள அனர்த்தம் உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது. இதற்கான காரணங்கள் சர்வதேசமயப்பட்டது.
எனவே, இதற்கான தீர்வு சர்வதேச ஒன்றிணைப்பை வேண்டி நிற்கிறது. அவர் மேலும் கூறுகையில், “பாகிஸ்தான் முழுவதும், அரச ஊழியர்கள், சாதாரண மக்கள் மழையில் நனைந்த வண்ணம் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதையும், எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு தங்களிடம் உள்ள சிறிதளவு பொருளையேனும் கொடுப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். சர்வதேச சமூகமாகிய நாம் , பாகிஸ்தான் மக்களுடன் இணைந்து நிற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களை காப்பாற்றவும் அவர்களுக்கு உதவவும் சர்வதேச சமூகத்திடமிருந்து நமக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச அளவு இந்த வேண்டுகோள் ஆகும். பாகிஸ்தான் மக்கள் எங்களின் ஆதரவுக்கு தகுதியானவர்கள்” என்று குறிப்பிட்டார்.
தேசிய பேரிடர் முகாமைத்துவ ஆணையத்தின் (NDMA) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அக்தர் நவாஸ், தற்போதைய மனிதாபிமான சூழ்நிலை மற்றும் மீட்பு , நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பாகிஸ்தானின் சிநேக பூர்வ நாடுகளினதும், பாகிஸ்தான் அரசினதும் முயற்சிகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
செம்பிறை இயக்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு (IFRC) தேசிய சமூக மேம்பாடு மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்புக்கான துணைச் செயலாளர் சேவியர் காஸ்டெல்லானோஸ் மொஸ்குவேரா கருத்துத்தெரிவிக்கையில், “இந்த பாரிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவ சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதிபூண்டுள்ளது. பாகிஸ்தான் செம்பிறை இயக்கத்துடன் இணைந்து, 324,000 பேருக்கு உடல்நலம், பாதுகாப்பான குடிநீர், அவசரகால தங்குமிடம் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றில் உதவி செய்ய ஆரம்ப அவசர வேண்டுகோள் மூலம் நிதி கோருகியுள்ளோம். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது, பாகிஸ்தான் அரசு மற்றும் ஐ.நா. அமைப்புகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படைத் தேவைகளை உறுதி செய்ய முயற்சி எடுத்து வருகிறது.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் திரு. பிலிப்போ கிராண்டி கருத்துத்தெரிவிக்கையில் , "எனது சொந்த நிறுவனம் உட்பட சர்வதேச சமூகம் இன்று பாகிஸ்தான் மக்களுக்கு உதவ வேண்டும். பாகிஸ்தானுக்கான உலகளாவிய ஆதரவு எங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் இஸ்லாமாபாத் மற்றும் ஜெனிவாவில் உள்ள தூதரகப் அதிகாரிகள் , பாகிஸ்தானில் உள்ள ஐ.நா. காரியாலயங்கள் உயர் மட்ட உறுப்பினர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வதேச நிதி நிறுவனங்கள், சிவில் சமூகம் மற்றும் ஊடக நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றோர், விலைமதிப்பற்ற உயிர்கள் இழப்பு மற்றும் உள்கட்டமைப்பு சேதம் ஆகியவற்றிற்கு தமது அனுதாபங்களை வெளிப்படுத்தியதோடு, பாகிஸ்தானின் நிவாரண, மீட்பு, மற்றும் புனரமைப்பு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை உறுதி செய்தனர்.
பாகிஸ்தானானது, மனிதாபிமான அவசரநிலைகளுக்கு முகம் கொடுப்பதில் அனுபவம் கொண்ட நாடு மட்டுமல்லாது நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதில் பெரும் முன்னேற்றமும் கண்ட நாடாகும். எவ்வாறாயினும், தற்போதைய வெள்ளத்தின் அளவு முன்னெப்போதுமில்லாதவாறு மிகவும் கொடூரமானது.
பாகிஸ்தானின் 30 ஆண்டு சராசரி மழை வீழ்ச்சியை விட 2.9 மடங்கு மழை பெய்துள்ளது. இது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட விளைவே ஆகும். சர்வதேச சமூகம் பாகிஸ்தானுடன் ஒன்றிணைந்து தற்போதைய வெள்ளத்தின் நேரடி மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய பாதிப்புகளை நிவர்த்தி செய்வதில் பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு பங்களிப்பு செய்வது மிகவும் முக்கியமாகும்.
Comments (0)
Facebook Comments (0)