'கட்டாய ஜனாஸா எரிப்பு: சன்ன பெரேராவின் நிபுணர் குழுவே நடைமுறைப்படுத்தியது'
-கூட்டு அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம் RTI மூலம் அம்பலம்-
றிப்தி அலி
கொவிட் - 19 தொற்று காலப் பகுதியில் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய ஜனாஸா எரிப்பு, வைத்திய கலாநிதி சன்ன பெரேரா தலைமையில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினாலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது என அரசாங்கம் தெரிவிக்கின்றது.
நியாயமற்றதாகவும் பகுத்தறிவற்ற செயலாகவும் காணப்பட்ட ஜனாஸாக்களை எரிக்கும் கொள்கையினால் இஸ்லாமிய நாடுகளினது அமைப்பிற்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் எமது நாட்டுக்கும் இடையில் காணப்பட்ட உறவில் விரிசல் ஏற்படுத்தப்பட்டமை யாவரும் அறிந்த உண்மையாகும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த பிழையான செயற்பாடு காரணமாக 276 நபர்களை அவர்களது குடும்பத்தினரினது எதிர்ப்பையும் கடந்து கட்டாய தகனத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனால் நாட்டிலுள்ள பல்வேறுபட்ட சமூகத்திற்கு பாதிப்பேற்பட்டதுடன் உள ரீதியான உளைச்சல்களுக்கும் முகம் கொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த பிழையான செயற்பாட்டுக்கு பகிரங்க மன்னிப்புக் கோர முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்தது.
இதற்கமைய கடந்த அரசாங்கத்தின் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகிய மூன்று அமைச்சர்களும் இணைந்து கூட்டு அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்தனர்.
'கொவிட் - 19 தொற்று காலப்பகுதியில் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட கட்டாய உடல் தகன கொள்கை சம்பந்தமாக மன்னிப்புக் கோருதல்' எனும் தலைப்பில் 24/1377/611/024-Iஆம் இலக்க அமைச்சரவைப் பத்திரம் கடந்த ஜுன் 22ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சரவையினால் இந்த கூட்டு அமைச்சரவைப் பத்திரம் பரிசீலனை செய்யப்பட்டு கலந்துரையாடலுக்குப் பின்னர், மூன்று அங்கீகாரம் வழங்குவதற்கு கடந்த ஜுலை 22ஆம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய:
1. அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்படுள்ளவாறு கொவிட் - 19 தொற்று காரணமாக மரணித்தோர் தொடர்பாக பின்பற்றப்பட்ட கட்டாய உடல் தகன கொள்கையினால் பாதிக்கப்பட்ட தரப்பினர்களிடம் மன்னிப்புக் கோரல்
2. இதற்குச் சமனான சந்தர்ப்பங்களில் பின்பற்றப் வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக எதிர்காலத்தில் தீர்மானங்களை எடுக்கும் போது புறக் காரணிகளின் தாக்கமின்றி சுயமாக தீர்மானிக்கும் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமையை உறுதிப்படுத்தி இலங்கை மக்கள் மத்தியில் இது சம்பந்தமாக நிலவும் ஐயத்தினை இல்லாதொழிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுத்தல்
3. மேற்படி இரண்டு தீர்மானங்களையும் பொருத்தமானவாறு இலங்கை மக்களுக்கும் ஏனைய உரிய தரப்பினர்களுக்கும் அறியச் செய்தல்
இதற்மைகய, பலவந்தமாக ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் மன்னிப்புக் கோரியது. அது மாத்திரமல்லாமல், கட்டாய ஜனாஸா எரிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் போது வாக்குறுதி வழங்கியிருந்தார்.
அத்துடன் இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான நிலையில் குறித்த அமைச்சரவைத் தீர்மானம் தொடர்பில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான அமைச்சரவை பத்திரத்தின் பிரதியொன்றினை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக அமைச்சரவை அலுவலகத்திடமிருந்து அண்மையில் பெற்றுக்கொண்டோம்
இதன் ஊடாகவே கட்டாய ஜனாஸா எரிப்பு, வைத்திய கலாநிதி சன்ன பெரேரா தலைமையில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுமத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற விடயம் தெரியவந்தது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு சந்தித்த மிகச் சவாலானதொரு பிரச்சினையாக வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தல் காணப்பட்டது.
சுகாதார அமைச்சினால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட கொரோனா தொற்றுப் பரவலுக்கான சுகாதார முகாமைத்துவ வழிகாட்டல்களின் அத்தியாயம் 7 இன் பிரகாரம், வைரசினால் இறந்தவர்களினது உடல்களை தகனம் செய்வதனை பிரேரித்தது.
வைரசினால் இறந்தவர்களினது உடல்களை நிலத்திலில் புதைப்பதனால் நிலத்தடி நீர் வளங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினாலேயே இம்முறை பரிந்துரை செய்யப்பட்டது என குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயத்தில், பல்வேறு தரப்பிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் காரணமாக மேற்கூறப்பட்ட விதிகளானது 2020 மார்ச் 27ஆம் திகதி 'தகனம் மற்றும் புதைத்தல்' என மாற்றீடு செய்யப்பட்டது.
எவ்வாறாயினும் 2020 மார்ச் 29ஆம் திகதி மீண்டும் குறித்த வழிகாட்டல்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதற்கமைய, முன்னைய பரிந்துரையான கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை கட்டாய தகனத்திற்கு உட்படுத்துவதனை வலியுறுத்தியது.
இம்மாற்றமானது நீர்கொழும்பில் இடம்பெற்ற முதலாவது முஸ்லிம் நபரினது மரணத்தின்போது எவ்விதமான ஆலோசனையும் பெறப்படாமலும் தகுந்த நியாயப்படுத்தல்களும் மேற்கொள்ளாமல் குறித்த மாற்றமானது முன்னெடுக்கப்பட்டது.
இச்சமயத்தில், உலக சுகாதார நிறுவனமானது கொரோனா தொற்றுப்பரவலுக்கான சுகாதார முகாமைத்துவ வழிகாட்டல்களுக்கான அதனது பரிந்துரைகளை வழங்கியது. குறிப்பாக இறுதி கிரியைகளுக்கான வழிமுறைகளாக தகனம் மற்றும் புதைப்பதனை முன்னெடுக்கலாமென கூறியது. சீனாவினைத் தவிர அனைத்து நாடுகளும் குறித்த பரிந்துரைகளை முன்னெடுத்தன.
அதேசமயத்தில் சீன அரசாங்கம் புதைப்பதற்கான தடையினை நீக்கியதுடன் அதனை முன்னெடுப்பதற்கு வழியேற்படுத்திக்கொடுத்தது. எனினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் மாத்திரமே கட்டாய ஜனாஸா எரிப்பு கொள்கையை முன்னெடுத்தது.
இந்த வைரஸினால் இறந்தவர்களினது உடல்களை புதைப்பதனால் நிலத்திற்கு தீங்கு விளைவதற்கான எந்தவிதமான விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாராங்களும் இல்லை என தெரிவித்தது.
பிரசித்தமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிர்ணர்களினால், அதில் இலங்கை மருத்துவ சபை மற்றும் பிரசித்தி பெற்ற வைரஸ் நிபுணரான இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் மலிக் பீரிஸ் அவர்களினாலும் உடல்களை புதைப்பது பரிந்துரை செய்யப்பட்டது.
உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் இஸ்லாமிய நாடுகளினது அமைப்பு போன்றவற்றினால் இக்கொள்கையினை மறுசீரமைப்புச் செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனால் இலங்கை அரசாங்கத்தின் நற்பெயருக்கு எதிர்மறையான எண்ணங்களை விதைக்க காரணமாகியது, விஷேடமாக முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினிடையே இந்தக் கொள்கை பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
இறந்தவர்களினது உடலங்களை புதைப்பது மட்டுமே வழிமுறையாகக் கொண்ட பாரம்பரியத்தினை மிக நீண்ட காலமாக பின்பற்றி வருவதனால் குறித்த விடயமானது பாரதூமான விளைவுகளை ஏற்படுத்தியது.
இதனால் நாட்டிலுள்ள பல்வேறுபட்ட சமூகத்திற்கு பாதிப்பேற்பட்டதுடன் உள ரீதியான உளைச்சல்களுக்கும் முகம் கொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டதுடன் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சுற்றுல்லா பிரயாணிகள் வருகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.
இவ்வாறான நிலையில் பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் இம்ரான் கான், 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டாய ஜனாஸா எரிப்பிற்கு தீர்வு வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்தார்.
இதனையடுத்து உடல்களை வழமையாக அடக்கம் செய்யும் இடங்களில் அல்லாமல் நிபந்தனைகளுடன் ஓட்டமாவடியிலுள்ள மஜ்மா நகரில் மாத்திரம் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
கொவிட் காரணமாக உயிரிழந்த 3,643 பேரில் உடல்கள் இங்கு தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் 2,992 முஸ்லிகளும் 270 இந்துக்களும் 287 பௌத்தர்களும் 85 கத்தோலிக்கர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டு அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2,225 ஆண்களும் 1,409 பெண்களுமாவார்.
வைத்திய கலாநிதி சன்ன பெரேரா தலைமையிலான நிபுணர் குழுவினால் பலவந்த எரிப்பிற்கு தெரிவிக்கப்பட்ட முக்கிய காரணமான "வைரசினால் இறந்தவர்களினது உடல்களை நிலத்திலில் புதைப்பதனால் நிலத்தடி நீர் வளங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும்" என்பது தொடர்பில் நீர் வழங்கல் அமைச்சு ஆய்வுகளை முன்னெடுத்திருந்தது.
ஸ்ரீ ஜயவர்த்தன பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நீர் வழங்கல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வுக் குழுவின் உறுப்பினர்களாக போராசியர் பத்மலால் மானகே, பேராசிரியர் நீலிக மாலவிகே மற்றும் டாக்டர் சந்திம ஜீவாந்தர உட்பட எட்டுப் பேர் செயற்பட்டனர்.
கண்டி மற்றும் கொழும்பு போன்ற இடங்களில் காணப்படுகின்ற நீர் நிலைகள், கழிவுநீர் வெளியேற்றப்படுகின் இடங்கள், தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் பிற முக்கியமான இடங்களில் SARS-CoV-2 என்ற வைரசினது இருப்பினை அறிவதற்கான முயற்சியில் 2021ஆம் ஆண்டு ஜுலையில் ஈடுபட்டது.
குறித்த ஆய்வினது முடிவுகள் யாவும் 11 பக்கங்களைக் கொண்ட அறிக்கையாக கடந்த 2021 டிசம்பரில் வெளியிடப்பட்டது. SARS-CoV-2 என்ற வைரசானது ஒரு சில வீட்டுத்திட்ட வீடுகளினது கழிவுநீரிலும் வைத்தியசாலைக் கழிவுநீரிலும் மட்டுமே காணப்பட்டது தவிர மேற்பரப்பு நீரில் எவ்விதமான வைரசுகளும் காணப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர் நிலைகள், கழிவுநீர் வெளியேற்றப்படுகின்ற இடங்கள், தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் பிற முக்கியமான இடங்களில் இரண்டாவது ஆய்வொன்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற நீர் தொழிநுட்பத்திற்கான சீன - இலங்கை இணைந்த ஆய்வு மற்றும் செயல்விளக்கத்திற்கான நிலையத்தினால் கடந்த மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்டது.
SARS-CoV-2 என்ற வைரசினது பிரதான பரிமாற்றமானது மலம் மற்றும் சிறுநீரின் மூலமாகவே தொற்றுவதுடன் பாதுகாப்பான உடல் புதைப்பின்போது பரவவில்லை என இதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரிவாக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் போன்றவற்றின் மூலமாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களினது உடல்களை புதைப்பதனால் நிலத்தடி நீரானது மாசுபடுகின்றது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும் என குறித்த கூட்டு அமைச்சரவைப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதைப்பதில் பொருத்தமான நடைமுறைகளை மேற்கொள்ளுதல், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றல் மற்றும் உடல்களை முழுவதுமாக மூடப்பட்ட பைகளில் வைத்து ஆழ்ந்த இடத்தில் புதைத்தல் போன்றவற்றின் மூலமாக சுற்றாடல் மாசுபடுவதனை தவிர்க்;க முடியும் எனவும் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான ஆய்வுகளை எல்லாம் மீறியே 'வைரசினால் இறந்தவர்களினது உடல்களை நிலத்திலில் புதைப்பதனால் நிலத்தடி நீர் வளங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும்' என்ற கருத்து சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குறித்த நிபுணர் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமல்லாம், இக்குழுவின் உறுப்பினரான ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மெத்திகா விதானகேயும் மேற்படி விடயத்தினை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.
அத்துடன் உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் இடையீட்டு மனுதாரராக நுழைந்து கட்டாய ஜனாஸா எரிப்பின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தினார்.
குறிப்பிட்ட ஒரு சமூகத்தினை இலக்கு வைத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பட்டினால் எமது நாட்டின் நற்பெயருக்கு சர்வதேச சமூகத்தில் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் குறித்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த விசாரணைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பலந்த ஜனாஸா எரிப்பிற்கு காரணமாவர்கள் தண்டிக்கப்படுவதன் மூலம் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் நிச்சயமாக பாதுகாக்க முடியும்.
Comments (0)
Facebook Comments (0)