வெளிவிவகார அமைச்சர் - பதில் இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு
இலங்கைக்கான பதில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கபிற்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (20) திங்கட்கிழமை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது கொவிட் -19 நோயினை எதிர்கொள்வதற்காக இந்தியா மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கு பதில் உயர் ஸ்தானிகர் விளக்கமளித்தார்.
இதேவேளை உலகளாவிய ரீதியில் பாதிப்பினை ஏற்படுத்திவரும் இந்நோய்க்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர், பதில் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்தார்.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் பதில் உயர் ஸ்தானிகரும் கொவிட் -19 க்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களில் இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாக தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்த அதேநேரம் இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதற்கும் இணங்கியிருந்தனர்.
ஒவ்வொரு நாடும் தமது சொந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இந்நோய்க்கு பின்னரான பொருளாதார மீட்சியானது ஒன்றிணைந்த செயற்பாடுகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மார்ச்சில் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப முடியாமலிருந்த யாத்திரிகர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்காக வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கு நன்றியினை தெரிவித்திருந்த அதேநேரம் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் 13 தொன்களுக்கும் அதிகமான உயிர் காக்கும் மருந்துப்பொருட்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியமைக்கும் அமைச்சர் தனது நன்றியினை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும் இந்தியாவிலிருந்து இலங்கை மாணவர்களை நாட்டுக்கு திரும்ப அழைத்து வருவதற்கான செயற்பாட்டிலும் அவர் இந்தியாவின் ஒத்துழைப்பினை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)