வடக்கு, கிழக்கில் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் உதவி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு 647,611 அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக ரூ. 128 மில்லியன்) வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
Mines Advisory Group (MAG) ஊடாக இந்த உதவிகளை வழங்க ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நன்கொடை வழங்கும் திட்டத்துக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்த உடன்படிக்கையில் ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதெகி மற்றும் MAG இன் இலங்கைக்கான பணிப்பாளர் கிறிஸ்டி மெக்லென்னன் ஆகியோர் கைச்சாத்திட்டனர். தற்போதைய கொவிட்-19 பரவலுடனான சூழ்நிலை காரணமாக இந்த கைச்சாத்திடும் நிகழ்வு மெய்நிகர் முறையில் இடம்பெற்றது.
2002 ஆம் ஆண்டில் இலங்கையில் தனது செயற்பாடுகளை MAG ஆரம்பித்திருந்தது. கண்ணி வெடி அகற்றும் பணிகளில் சுமார் 20 சதவீதமானவை ஜப்பானிய உதவியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
2009ஆம் ஆண்டு முதல் தரவுகள் வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து, நாட்டில் 98 km2 கண்ணி வெடி காணப்பட்ட பகுதியை MAG விடுவித்திருந்தது. இந்த நிதியாண்டின் திட்டத்துக்கு, பங்களிப்பு வழங்குவதனூடாக, தற்காலிகமாக இடம்பெயர்ந்து வசிக்கும் சுமார் 7,374 பேரின் காணிகளை விடுவிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகள் இவ்வாறு விடுவிக்கப்படும். 2002ஆம் ஆண்டு முதல் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஜப்பான் பாரியளவு நன்கொடைகளை வழங்கியிருந்தது.
இலங்கையில் தற்போது கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் நான்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஜப்பான் உதவிகளை வழங்குகின்றது. Grant Assistance for Grassroots Human Security Project (GGP) ஊடாக 40.8 மில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டில், இரு நாடுகளுக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 70 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றோம். இலங்கை மற்றும் ஜப்பான் இடையேயான நட்பின் அடையாளமாக இந்த கண்ணி வெடி அகற்றும் திட்டங்கள் அமைந்துள்ளன.
சில ஆண்டுகளினுள் கண்ணி வெடி அற்ற இலங்கையை எய்துவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தினூடாக அனைவருக்கும் பாதுகாப்பான இலங்கையை கொண்டிருப்பதற்கு பங்களிப்பு வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
இந்த நன்கொடை தொடர்பில் கிறிஸ்டி மெக்லென்னன் கருத்துத் தெரிவிக்கையில்,
"ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து இந்த நன்கொடையை பெற்றுக் கொள்வதையிட்டு MAG பெருமை கொள்கின்றது. இலங்கையிலும் உலகளாவிய நாடுகளிலும் மனித நேய கண்ணி வெடி அகற்றும் பணிகளை முன்னெடுப்பதில் தன்னை ஈடுபடுத்தியுள்ள நிறுவனமாக அமைந்துள்ளது.
கடந்த ஏழு வருட காலப்பகுதியில், MAG ஸ்ரீ லங்கா மற்றும் ஜப்பான் அரசாங்கம் ஆகியன இணைந்து 14,000 க்கும் அதிகமான கண்ணி வெடிகளை அகற்றவும் செயலிழக்கச் செய்யவும் பங்களிப்பு வழங்கியுள்ளன.
மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் விடுவிப்பு பணிகளினூடாக பல மக்களுக்கு மீளக்குடியேறவும், தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பவும் உதவியுள்ளது.
ஜப்பானிய மக்களின் நிதி உதவியினூடாக மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பது மாத்திரமன்றி, கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமையான சமூகங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு உதவியாக அமைந்திருக்கும்.
இந்த தொடர்ச்சியான ஜப்பானிய ஆதரவுடன், நாட்டில் அரசாங்கத்தின் நீண்ட கால கண்ணி வெடி அகற்றும் பணிகளின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்திருக்கும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)