காலநிலை மாற்றத்தில் சிக்கித் தவிக்கும் வட மாகாணம்

காலநிலை மாற்றத்தில் சிக்கித் தவிக்கும் வட மாகாணம்

றிப்தி அலி

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக வட மாகாணத்தின் யாழ். மாவட்டம் தற்போது கடுமையான சவால்களை எதிநோக்கியுள்ளதாக துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சவால்களிலிருந்து யாழ். மாவட்டத்தினை பாதுகாப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும் என அவர் குறிப்பிட்டனர்.

காலநிலை மாற்றம் காரணமாக யாழ். மாவட்டம் தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் அண்மையில் யாழ். நகரில் விசேட ஊடக மாநாடொன்று இடம்பெற்றது.

வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எம். ஜெகு, வவுனியா பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் சூழலியலாளருமான கலாநிதி எஸ். விஜயமோகன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட பிரதிப் பணிப்பாளர் என். சூரியராஜா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

இதன்போது, காலநிலை மாற்றம் காரணமாக வட மாகாணம் தற்போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் இவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எம். ஜெகு

வட மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடைகள் மற்றும் சூழலியல் அமைச்சின் கீழ் மாகாண விவசாய திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண கால்நடை உற்பத்தித் திணைக்களம் மற்றும் மாகாண நன்னீர் மீன்பிடி அலகு  ஆகிய நான்கு திணைக்களங்கள் காணப்படுகின்றன.

மாகாணத்தின் சுற்றுச்சூழல் எங்கள் அமைச்சின் விடயமாகக் காணப்பட்டாலும் அதற்கான தனி அலகொன்றில்லை. எனினும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் பாரிய விழிப்புணர்வுகளை மாகாண ரீதியாக மேற்கொண்டு வருகின்றோம்.

எமது மாகாணத்தில் 22 வானிலை அவதான நிலையங்கள் காணப்படுகின்றன. எமது அமைச்சின் கீழுள்ள விவசாயம் மற்றும்  நீர்ப்பாசனம் ஆகிய திணைக்களங்கள் நேரடியாக காலநிலை மாற்றத்துடன் தொடர்புபடுகின்றன.

சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சக் கூடிய குளங்கள் மாத்திரமே நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் காணப்படுகின்றன. இதற்கமைய வடக்கில் 54 நீர்ப்பாசனக் குளங்கள் காணப்படுகின்றன.

இன்று யாழ். மாவட்டத்தில் குறைந்த நேரத்தில் அதிக மழை மற்றும் நீண்ட நேரத்திற்கு கடுமையான வெப்பம் ஆகியன பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றன. எமது மாகாணத்தின் அனைத்துப் பிரசேங்களும் இதனால் பாதிக்கப்படுள்ளன. இப்பிரச்சினை காரணமாக குளங்களை நிர்வகிப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றோம்.
 
எமக்கு தண்ணீர் தேவை. அது போன்று அனர்த்ததிலிருந்து அனைத்து தரப்பையும் பாதுகாக்க வேண்டும். எமக்கு முக்கியமான குறித்த இரண்டு விடயங்களையும் மிகவும் சிரமத்துடன் முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளது.

மழை பெய்வதற்கு முன்னர் குளத்திலுள்ள தண்ணீரை வெளியேற்றவும் முடியாது தண்ணீர் நிறைந்தவுடன் உடனடியாக அணையினை திறக்கவும் முடியாது. குறிப்பாக நீர் வடிந்து செல்லக்கூடிய நிலையினை ஆராய்ந்தே அணைகளை திறக்க முடியும்.

வட மாகாணத்தின் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்ட காலத்தில் தீர்வு காண்பதற்காக  உள்நாட்டு மற்றும்  வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காலநிலை மாற்றத்தினால் வட மாகாண விவாசயிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த வருடம் வேளான்மையில் புதிய வகை நோயொன்று வந்தது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பாரம்பரியமாக மேற்கொள்ளப்படுகின்ற விவசாய நடவடிக்கைகளில் புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்தி உற்பத்தியினை அதிகரிக்க வேண்டியுள்ளது. பாரம்பரியத்துடன் புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்தும் போது எமது மாகாணத்தின் விவசாயத் துறையில் நிச்சயமாக மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

கொவிட் - 19 நோய் பரவலின் பின்னர் பல கோழிப் பண்ணைகள் எமது மாகாணத்தில் மூடப்பட்டுள்ளன. இதனால் எமது மாகாண பாரிய சவால்களை சந்தித்து வருகின்றது.

சுற்றாடல் தொடர்பில் எமது அமைச்சினால் பல விழிப்புணர்வு நிகழ்;ச்சிகளை ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்கின்றோம். எமது அமைச்சில் சூற்றுச்சூழல் தொடர்பில் தனியான பிரிவொன்று இல்லாத போதிலும் ஒரேயொரு உத்தியோகத்தரை வைத்துக்கொண்டு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த விடயம் எமது மாகாணத்திற்கு முக்கிய என்பதனாலேயே இதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். வட மாகாணம் இந்த விடயம் தொடர்பில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் குரங்கு மற்றும் மயில்களின் சனத்தொகை அதிகரித்துள்ளன. இதுவுமொரு பாரிய சவாலாகும். இந்த அதிகரிப்புக் காரணமாக சில மாங்காய் மற்றும் முருங்கை வகைகள் தற்போது இல்லாதொழிந்துள்ளன.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட பிரதிப் பணிப்பாளர் என். சூரியராஜா

2005ஆம் ஆண்டின் 13 இலக்க சட்டத்தின் பிரகாரம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்திற்கு எவ்வளவு பங்களிப்புச் செய்கின்றோமோ இல்லையோ, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை இலங்கை நிச்சயமாக உணர்ந்து கொண்டிருக்கின்றது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை, பயிற்சி,   விழிப்புணர்வு, முன்னாயத்தங்கள்,  திட்டமிடல் மற்றும் அனர்த்தக் குறைப்பு போன்ற செயற்பாடுகளை எமது நிலையம் மேற்கொண்டு வருகின்றது.

கிராம மட்டத்திலிருந்து மாவட்ட மட்டம் வரை பயிற்சிகளை வழங்குகின்றோம். இதற்கமைய யாழ். மாவட்டத்தில் 435 கிராம அலுவலகர் பிரிவுகளிலும் அனர்த்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தங்களுடைய பாதிப்பின் தன்மையினை குறைப்பது தான் இக்குழுக்களின் பிரதான நோக்கமாகும். இதற்கு மேலதிகமாக முன்னெச்சரிக்கை மற்றும் உதவிகள் வழங்கல், முதலுதவி, முகாம் அமைத்தல் போன்ற செயற்பாடுகளும் இக்குழுக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வுகளை உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாகவும் மேற்கொண்டு வருகின்றோம். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தங்களை குறைக்க மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகவுள்ளது.

இதனால் மக்களுடன் சேர்ந்தே இது தொடர்பான திட்டங்களை தயாரிக்க வேண்டியுள்ளது. அதேவேளை, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அசாதாரன நிலைமைகளின் போது அனர்த்தக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்வதாலும் கடல் மட்டம் திடீரென அதிகரிப்பதனாலும் வெள்ள ஒட்டத்தினை விரைவுபடுத்த முடியாதுள்ளது. இதன் காரணமாக குளங்களிலுள்ள தண்ணீரை திடீரென வெளியேற்றவும் முடியாது.

எமது அனர்த்த நிலையச் சட்டத்தின் ஊடாக எல்லாத் திணைக்களையும் இணைக்கும் அதிகாரம் எங்களது நிலையத்திற்கு காணப்படுகின்றது. இதனால், அனர்த்தங்களை குறைப்பதற்காக வானிலை அவதான நிலையம், தேசிய கட்டி ஆய்வு நிறுவனம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் போன்ற பல நிறுவனங்களுடன் எமது நிலையம் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றன.

எமது நிலையத்தின் செயற்பாடுகள் தேசிய ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் 24 மணித்தியாலங்களும் இடம்பெற்று வருகின்றன. அனர்த்தங்களை அறிவிப்பதற்காக தற்போது நவீன வழிகளையும் எமது நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

வவுனியா பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் சூழலியலாளருமான கலாநிதி எஸ். விஜயமோகன்

யாழ். மாவட்டம் தற்போது சுற்றுச்சூழல் தொடர்பில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. இங்குள்ள மக்கள் இலகு வழிகளை நோக்கிச் செல்கின்றமையே இதற்கான பிரதான காரணமாகும்.

எமது நாட்டில் பச்சை அதிகம் கூடிய நகராக யாழ். நகரமே காணப்படுகின்றது. இதனால் இங்குள்ள சூழல் பாதுகாக்கப்படுகின்றது. யாழ். குடா நாட்டில் தற்போதைய காலப் பகுதியில் மோட்டர் சைக்கிள்களின் பாவனை கடுமையாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இப்பிரதேசத்தின் சுற்றுச்சூழலில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் மண்டதீவு, வேலணை போன்ற பிரதேசங்களில் கண்டல் தாவரங்கள் நடப்பட்டுள்ளன.

இது பிழையான விடயமாகும். அதாவது, கண்டல் தாவரம் இயற்கையாக இல்லாத இடத்திலேயே தற்போது கண்டல் தாவரங்கள் நடப்பட்டுள்ளன. புவி  சூடாவதை தவிர்க்கவே கண்டல் தாவரங்கள் நடப்படுகின்றன.

எனினும், மண்டதீவு, வேலணை பிரதேசங்களில் நடப்பட்டுள்ள கண்டல் தாவரங்களினால் வெளிநாட்டு பறவைகளின் வருகை தடுக்கப்படுகின்றன. இதுவொரு சிறிய விடயமாக இருந்தாலும் பெரிய தாக்கத்தினை உண்டாக்கின்றது.

இயற்கையாகவே இப்பிரதேசங்களில் கண்டல் தாவரங்கள் இல்லாததற்கு பல காரணங்கள் உள்ளன. அவ்வாறான சமயத்தில் கண்டல் தாவரங்களை நடுவது பிழையானதாகும். சூழலுக்கு பொருத்தமில்லாத விடயங்களை புதிதாக செய்தன் ஊடாகவும் சூழல் மாசடைகின்றது.

மரம் நடப்பட்டு அழிக்கப்பட்டிருந்தால் மீண்டும் அங்கு மரத்தினை நடலாம். ஆனால் இயற்கையின் தீர்மானம் மரம் நட முடியாதாகும். அவ்வாறான இடத்தில் எப்படி மரம் நட முடியும். காற்றலை மூலம் இயற்கை அழிவு ஏற்படுவதாக பேசும் நாம் இந்த மரங்களினால் ஏற்படும் சுழல் அழிவினைப் பற்றி பேச மறந்துவிட்டோம்.