சர்ச்சைக்குரிய VFS விசா ஒப்பந்தத்திற்கு எதிராக TISL மனுத் தாக்கல்
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா வழங்குவதற்கான இலத்திரனியல் பயண அனுமதி முறையை (ETA) கையாளுவதற்காக தனியார் நிறுவனங்களைக் ஒப்பந்தம் செய்யும் போது அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் நடைமுறை மீறல்கள் மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்வதற்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை (SC/FR/221/2024) நேற்று (ஜூலை 30) தாக்கல் செய்தது.
சுற்றுலாத் துறை, தேசியப் பொருளாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் முடிவெடுப்பது மற்றும் கொள்முதல் செயல்முறைகளில் வெளிப்படைத் தன்மை இன்மை மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, பொது நலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14A ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள சமத்துவத்திற்கான குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமை பிரதிவாதிகளின் செயல்கள் மற்றும் புறக்கணிப்புகளால் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
இந்த மனுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம், GBS Technology Services & IVS Global-FZCO, VFS VF Worldwide Holdings LTD, அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலைமைக்கு காரணமான சில முதன்மை பிரச்சனைகள் மனுவில்
பட்டியலிடப்பட்டுள்ளன.
1. விசா வழங்கும் நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட முகவர்களாக பணியாற்றுவதற்கு தனியார் நிறுவனங்களின் பொருத்தமற்ற மற்றும் ஒழுங்கற்ற தேர்வு
2. சுற்றுலாத் துறைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கணிசமான நிதி இழப்புகளை
ஏற்படுத்தக்கூடிய தனியார் தரப்பினருடன் ஒப்பந்தங்களைச் செய்தல்
3. 2024 மே மாதம் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் விசா செயலாக்கத்திற்கான வணிக அமைப்புகளின் முறையற்ற நியமனம் வெளிச்சத்திற்கு வந்தது.
4. 2012 ஆம் ஆண்டு முதல், Mobitel (Pvt) Limited உடனான தற்போதைய கூட்டுறவானது, குறிப்பிடத்தக்க செயலிழப்புகள், மோசமான செய்திகள், தரவு மீறல்கள் அல்லது பிற குறைகளை சந்திக்காமல், எந்தவித அசம்பாவிதமும் இன்றி செயல்பட்டு வருகிறது
5. ஆகஸ்ட் 2023 இல் Mobitel (Pvt) Limited, இலத்திரனியல் பயண அங்கீகார (ETA) முறையை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளை அரசாங்கத்திற்கு எந்த விதமான செலவும்
இல்லாதவாறு முன்வைத்தது.
6. Mobitel (Pvt) Limited ஆனது GBS Technology Services &IVS Global-FZCO மற்றும் VFS VF Worldwide Holdings LTD ஆகியவற்றால் வசூலிக்கப்படும் 18.50 அமெரிக்க டொலர்களுக்கு முற்றிலும் மாறாக, ஒரு பயன்பாட்டிற்காக 1 அமெரிக்க டொலருக்கு இலத்திரனியல் பயண அங்கீகார (ETA) முறையின் இயங்குதள சேவைகளை வழங்குவதற்கான திட்டத்தை ஒப்பந்தம் செய்கிறது.
கொள்முதல் செயல்பாட்டின் போது பிரதிவாதிகள் தங்கள் சட்டவிரோத, தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற செயல்கள் அல்லது செயற்பாட்டிலுள்ள குறைபாடுகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் மனு வலியுறுத்துகிறது.
Comments (0)
Facebook Comments (0)