குர்ஆன்களை விடுவிப்பதில் ஏன் இந்த இழுபறி?

குர்ஆன்களை விடுவிப்பதில் ஏன் இந்த இழுபறி?

றிப்தி அலி

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பைசல் ஆப்தின் பெயருக்கு மக்காவில் வசிக்கின்ற இலங்கையினைச் சேர்ந்த சாதீக் ஹாஜியாரினால் அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் மற்றும் அதன் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள் விடுவிக்கப்படமால் சுங்கத் திணைக்களத்தில் கடந்த சில மாதங்களாக தேங்கிக் கிடக்கின்ற விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

சாதீக் ஹாஜியாரினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட கொள்கலனிலுள்ள புனித அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் இஸ்லாமிய நூல்களை விடுவிப்பதற்கு திணைக்களத்தின் கீழுள்ள புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழுவினால் இன்று வரை அனுமதி வழங்கப்படாமையே இதற்கான பிரதான காரணமாகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலினை அடுத்து பாதுகாப்பு அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட புனித அல்-குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்கள் மாத்திரமே சுங்கத் திணைக்களத்தினால் நாட்டுக்குள் விடுவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், பேருவளையில் இயங்கிவரும் நபவியா இஸ்லாமிய இளைஞர் அமைப்புக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கட்டாரிலிருந்து அனுப்பப்பட்ட புத்தங்களை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்ட போதும் அப்புத்தகங்களில் நான்கு புத்தகங்கள் சமய நல்லிணக்கத்திற்கு சவால்களை ஏற்படுத்தும் கொள்கைகளை உள்ளடக்கி இருந்தாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.

இதனையடுத்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து இஸ்லாமிய சமய புத்தகங்களும் பாதுகாப்பு அமைச்சினால் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கினால் மாத்திரமே இலங்கை சுங்க திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படும் என்ற இறுக்கமான அறிவித்தல் 2021.03.05ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதனையடுத்து பெருந்தொகையான புனித அல்குர்ஆன்களும் இஸ்லாமிய நூல்களும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடந்ததுடன், நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி வந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில் இஸ்லாமிய அறிஞர்கள் எட்டுப் பேரைக் கொண்ட புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழுவொன்றினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2021.04.19ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

அப்போதைய பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரபினால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு இன்று வரை தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. அஷ்ஷெய்க் கலாநிதி ஏ.எம். அப்வர்தீன், அஷ்ஷெய்க் கலாநிதி அஸ்வர் அஹமத், அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், அஷ்ஷெய்க் ஸகி அஹமட், அஷ்ஷெய்க் முப்தி முஸ்தபா ராசா ஸபர், அஷ்ஷெய்க் ஏ.எச். இஹ்ஸானுத்தீன், அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். ஸில்மி மற்றும் அஷ்ஷெய்க் முர்ஸித் முழப்பர் ஆகியோரே இக்குழுவின் உறுப்பினர்களாவார்.

இஸ்லாமிய சமய புத்தகங்கள் மற்றும் புனித அல்குர்ஆன் ஆகியவற்றினை நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்கு எட்டு அம்சங்களைக் கொண்ட வழிகாட்டியொன்றும் இக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தசாசன, மத மற்றும் கலாலார அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே   இந்த வழிகாட்டி தயாரிக்கப்பட்டதாக திணைக்களம் முன்னர் தெரிவித்திரிந்தது.

இஸ்லாமிய புத்தகங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் இந்த குழுவின் சிபாரிசு புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்படும். பின்னர், பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சுங்கத் திணைக்களத்திற்கு நாட்டுக்குள் விடுவிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.

இந்த அறிஞர்கள் குழுவினால் இறக்குமதிக்கு சிபாரிசு செய்யப்பட்ட எந்தவொரு நூல்களும் அரசாங்கத்தினால் தடை விதிக்கப்படவில்லை என திணைக்களம் முன்னர் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், புனித அல்குர்ஆன் மற்றும் அதன் தமிழ், சிங்கள மொழிபெயர்ப்புக்களை இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழுவின் கூட்டமொன்றினை கடந்த மார்ச் 26ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளரான பைசல் ஆப்தீனின் பெயரில் இறக்குமதி செய்யப்படவுள்ள புனித அல்குர்ஆன், அதன் தமிழ் மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பு, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலுள்ள இரண்டு இஸ்லாமிய நூல்கள் ஆகியன சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதனை மீளாய்வு செய்த புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழு, அரபு மொழியிலுள்ள புனித அல்குர்ஆனினை மாத்திரம் நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், புனித அல்குர்ஆனின் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்களை விடுவிப்பதற்கு அனுமதி புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழுவினால் வழங்கப்படவில்லை.

இக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டியின் சில சரத்துக்களுக்கு குறித்த புனித அல்குர்ஆன் மொழிபெயர்ப்பும், இஸ்லாமிய நூல்களும் உடன்பாடமையே இதற்கான காரணமாகும் என குறித்த கூட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கூட்ட அறிக்கையில் புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழுவின் நான்கு உறுப்பினர்கள், திணைக்களத்தின் இரண்டு உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் திணைக்களத்தின் மூன்று உத்தியோகத்தர்கள் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், மக்காவிலுள்ள ஸாதிக் ஹாஜியாரினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பைசாலின் பெயருக்கு 40 அடி நீளமான ஒரு கொள்கலன் கடந்த மே 16ஆம் திகதி ஜித்தா துறைமுகத்திலிருந்து X-PRESS SALWEEN எனும் கப்பலில் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் சுமார் 20 ஆயிரம் குர்ஆன் பிரதிகளும் சுமார் 15 ஆயிரம் குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளும், இஸ்லாமிய நூல்களும் காணப்படுவதாக ஸாதிக் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த கொள்கலனிலுள்ள புனித அல்குர்ஆன் மொழிபெயர்ப்பும், இஸ்லாமிய நூல்களையும் விடுப்பதற்கான அனுமதி புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழுவினால் வழங்கப்படாமையினால்  குறித்த கொள்கலன் துறைமுகத்தில் சில மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றது.

இதேவேளை, சாதீக் ஹாஜியார் நாட்டு வந்து, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உட்பட இந்த விடயத்துடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்த சந்திப்புக்கள் எதுவும் அவருக்கு வெற்றியளிக்கவில்லை. இவ்வாறான நிலையில் பல குரல் பதிவுகளை வட்ஸ்அபில் அவர் பதிவிட்டுள்ளதை எம்மால் கேட்க முடிந்தது. இதன்போது அவர் குறிப்பிடுகையில்,

"இறைவனின் உதவியானல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒரு கொள்கலன் புனித அல்குர்ஆன்களை இலங்கைக்கு அனுப்பினேன். புத்தசாசன அமைச்சர், ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோரின் உத்தியோகபூர்வமாக அனுமதியினை பெற்றே இக்குர்ஆன்களை அனுப்பினேன்.

எனினும், இந்த குர்ஆன்களுக்கு பிழையான முத்திரை குத்தப்பட்டு  நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. இதனை விடுவிக்க முடியும் என்ற பின்னர் தான் பள்ளிவாசல்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளுக்கு வழங்குவதற்காவே இதனை அனுப்பிவைத்தேன்.

இதே குர்ஆனிற்குத் தான் கடந்த 40 வருடங்களாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அனுமதி  வழங்கியுள்ளது. இன்று மற்றும் ஏன் தடை விதிக்கின்றனர் என்பது தான் தெரியமல் உள்ளது. இக்கொள்கலனினுள்ள அல்குர்ஆன்களை தீ வைப்பதற்கு ஜம்இய்யதுல் உலமா துணை போகின்றது. இதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரும் ஜம்இய்யதுல் உலமாவும் தான் பொறுப்புக்கூற வேண்டும்" என்றார்.

இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமிதினால் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார்.

"இலங்கைக்கு அனுப்பப்பட்ட அல்-குர்ஆன் அரபுப் பிரதிகள் மற்றும் மொழிபெயர்ப்புப் பிரதிகள் சம்பந்தமாக" எனும் தலைப்பில் கடந்த ஜுலை 28 ஆம் திகதி அனுப்பப்பட்ட குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"மேற்படி அல்-குர்ஆன் பிரதிகள் ஸாதிக் ஹாஜியாரினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் அப்பிரதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி கிடைக்கப் பெறாததன் காரணமாக இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. இப்பிரதிகள் அனுப்பப்படமுன் புத்தசாசன, சமய விவகார அமைச்சர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆகியோரிடம் சம்மதம் மற்றும் முறையான அனுமதி பெறப்பட்டே அனுப்பி வைக்கப்பட்டதாக ஸாதிக் ஹாஜியார் கூறியுள்ளார்.

இவ்விவகாரத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றாலும், இந்த அல்-குர்ஆன் தொகைகளை விடுவிக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தான் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரப்பப்படுவதை காணமுடிகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட இஸ்லாமிய மத நூல்களுக்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பான விடயங்களைப் பற்றி கலந்துரையாட கடந்த மே 20ஆம் திகதி  அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உங்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்தது என்பதை தயவுசெய்து நினைவூட்ட விரும்புகிறோம்.

ஆனால் திட்டமிடப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் காரணமாக உங்களால் கலந்துகொள்ள முடியாது என்று உங்கள் தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டது. இந்த விடயத்தை உடனடியாக கவனிக்குமாறு உங்கள் தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விடயத்திற்கு தீர்வுபெற்றுத் தருவதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் என்.எம்.சுஹைர் போன்றோர் உறுதியளித்துள்ளதாக ஸாதிக் ஹாஜியார் கடந்த ஜுலை 28ஆம் திகதி வட்ஸ்அப் மூலம் வெளியிட்ட  குரல் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் உலமா சபை ஊடக அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"2024.07.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு மற்றும் அல்-ஹாஜ் ஸாதிக் ஆகியோரிடையே, அவரினால் நாட்டிற்கு அனுப்பப்பட்டு இதுவரையில் விடுவிக்கப்படாமல் உள்ள அல்-குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிரதிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விஷேட சந்திப்பொன்று முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வியின் தலைமையில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் துறைமுகத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அல்-குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிரதிகளை விடுவிப்பதற்கு ஜம்இய்யாவினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பில் அல்-ஹாஜ் ஸாதிக் அவர்களுக்கு தெளிவுகள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்-குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகளை விடுவிப்பது தொடர்பில் புத்தசாசன அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடுமாறு ஆலோசனை வழங்கியதோடு அவற்றிற்கான அடிக்குறிப்புக்களை இணைத்து விநியோகிப்பதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் ஜம்இய்யா வழங்கும் என்றும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு அதில் அல்-குர்ஆன் முஸ்ஹப் விடயத்தில் எவ்வித தடைகளும் விதிக்கப்படாமையினால் அவற்றையும் விரைவில் விடுவிக்குமாறு புத்தசாசன அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றிடம் ஜம்இய்யா வேண்டிக்கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.