காஸா மீதான UNGA தீர்மானம் தொடர்பில் இந்தியாவின் கணிப்பீடு தவறு
P. K .பாலச்சந்திரன்
காஸாவில் போரை மனிதாபிமான அடிப்படையில் நிறுத்துவதற்காக அழைப்பு விடுத்த ஜோர்தான் தீர்மானத்தின் மீதான ஐ.நா. பொதுச் சபையின் (UNGA) கடந்த மாத வாக்கெடுப்பிலிருந்து விலகிய இந்தியாவின் முடிவு, இந்தியாவின் முக்கிய தொகுதிகளாகக் கருதப்படும் உலகளாவிய தெற்கு மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே ஒரு மோசமான நிலையை உருவாக்கியுள்ளது.
தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட புதுடில்லி வாக்கெடுப்பின் ஐந்து நாட்களுக்குப் பின்னராக ஒரு துணை அறிக்கையை வெளியிட்டு, அதில் பலஸ்தீனிய அரசு “பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் அருகருகாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கு" வழிவகுக்கும் பேச்சுவார்த்தைகளைக் காண விரும்புவதாகக் தெரிவிக்கின்றது.
ஆனால் திருத்தப்பட்ட அறிக்கை தடைபட்டதுடன் சேதமும் ஏற்பட்டுவிட்டது. ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் செய்ததை விட பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கின்ற, காஸா மீதான இஸ்ரேலின் தினசரி குண்டுவீச்சு மூலம் நடாத்தப்படுகின்ற உண்மையான இனப்படுகொலைக்கு புதுடெல்லி கண்மூடித்தனமாக இருப்பதானது, கடந்த காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டின் மிகவும் இயல்பற்ற தன்மையைக் காட்டுகிறது.
இதற்கு நேர்மாறாக, உலகளாவிய தெற்கு மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளின் பார்வையில், ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பிரதிபலிப்பு மிகவும் மோசமாக இருந்தது.
இந்தியா - அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், உக்ரைன் மற்றும் இங்கிலாந்து ஆகிய 45 நாடுகளின் குழுவில், "பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்" என்ற தலைப்பில் ஜோர்தானிய தீர்மானத்தை புறக்கணித்தது.
சுவாரஸ்யமானதென்னவென்றால், குறித்த தீர்மானம் பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைத்தீவு மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றால் இணை அனுசரணை செய்யப்பட்டது. அவற்றில் மூன்று இந்தியாவின் அண்டை நாடுகளாகும். தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் காலனித்துவம் மற்றும் இன சகிப்பின்மைக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் தோழர்களாக உள்ளன.
ஜோர்தானியத் தீர்மானம் 120 நாடுகளில் இருந்து ஆதரவைப் பெற்றது, பிரதானமாக ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க - இந்தப் பகுதிகள் பொதுவாக "உலகளாவிய தெற்கு" என்று குறிப்பிடப்படுகின்றன, இதில் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது.
இந்தியாவுடன் சிறப்பான உறவைக் கொண்ட சிறிய பூட்டான் உட்பட இந்தியாவின் அண்டை நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. பாகிஸ்தான், இலங்கை, மியன்மார், சீனா ஆகியவை இதில் அடங்கும்.
இந்தியாவின் சாக்குப்போக்கு
ஜோர்தானியத் தீர்மானம், உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் போது, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற இஸ்ரேல் மீதான அதன் ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸ் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதே வாக்களிக்காமல் இருப்பதற்கான இந்தியாவின் சாக்காக அமைகிறது. 200க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளும் கைது செய்யப்பட்டனர்.
கனேடிய திருத்தத்திற்கு இந்தியா வாக்களித்தது, இது மனிதாபிமான இடைநிறுத்தம் மற்றும் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கும் அதே வேளையில், ஒக்டோபர் 7 அன்று ஹமாஸின் பயங்கரவாதச் செயல்களை கடுமையாகக் கண்டித்தது. ஆனால் இந்த திருத்தம் சிறியளவான ஆதரவை பெற்றது.
இந்தியாவின் அறிக்கை
இந்தியாவின் நிலைமையைக் கூறி, அதன் பிரதிநிதி யோஜ்னா படேல் தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்டார். “ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், கண்டனத்துக்கு உரியதாகவும் இருந்தது.
எங்கள் எண்ணங்களும் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களின் வசமே உள்ளன. அவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பயங்கரவாதம் ஒரு கொடியது என்பதுடன் அது எல்லைகள், தேசியம் அல்லது இனத்தை அறியாது. பயங்கரவாதச் செயல்களின் எந்தவொரு நியாயத்தையும் உலகம் ஏற்கக் கூடாது. வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றுபடுவோம் என்பதோடு பயங்கரவாதத்தின் மீது சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்போம்.
மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தின் விரிவாக்க முயற்சிகளையும், காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த முயற்சிக்கு இந்தியாவும் பங்களித்துள்ளது.
தரப்புகள் தீவிரமடைவதற்கும், வன்முறையைத் தவிர்ப்பதற்கும், நேரடியான சமாதானப் பேச்சுவார்த்தைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இச்சபையின் விவாதங்கள், பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான தெளிவான செய்தியை அனுப்பும் என்றும், நம்மை எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, இராஜதந்திரம் மற்றும் உரையாடலுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டது.
ஹமாஸ் விவகாரத்தில் ஜோர்தானிய வரைவுக்கான அதன் ஆட்சேபனை நியாயமானது என்றாலும், இந்தியாவின் அறிக்கை ஒரு பெரும் விடுபாடாகவே அமைகிறது:
இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் காஸாவை இனரீதியாக சுத்திகரிப்பதற்கான அதன் முயற்சிகளை அது குறிப்பிடவில்லை.
ஜோர்தானிய தீர்மானம்
ஜோர்தானிய தீர்மானமானது, குறிப்பாக பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் பொருட்களின் பாதுகாப்பு அத்துடன் மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் காஸா பகுதியில் அவசியமாயிருக்கின்ற அனைத்து பொதுமக்களையும் சென்றடையும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான மனிதாபிமான அணுகலை இலகுவாக்கின்ற சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள தங்கள் கடமைகளுக்கு “அனைத்து தரப்பினரும் உடனடியாகவும் முழுமையாகவும்" இணங்க வேண்டும் என்று கோரியது.
பலஸ்தீனிய குடிமக்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் பணியாளர்களுக்காகவும் அத்துடன் மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்காகவும் காஸா முனைக்கு வடக்கே உள்ள காஸா பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளையும் வெளியேற்றம் செய்து தெற்கு காஸாவிற்கு இடம்பெயருமாறும் ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலின் உத்தரவை ரத்து செய்யுமாறும் அது அழைப்பு விடுத்துள்ளது.
தீர்மானமானமானது ஹமாஸை மறைமுகமாக குறித்துக் காட்டினாலும் அதன் பெயர் குறிப்பிடப்படாதிருந்தது. “சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்ட அனைத்து பொதுமக்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க" அது அழைப்பு விடுத்ததுடன் அது அவர்களின் “பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் சர்வதேச சட்டத்திற்கு இணங்க மனிதாபிமான நடத்துகை" ஆகியவற்றையும் கோரியது.
“அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் உட்பட பலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய குடிமக்களை இலக்காகக் கொண்ட அனைத்து வன்முறைச் செயல்களையும் கண்டித்தல்" எனும் ஒரு பத்தியும் ஜோர்தானிய தீர்மானத்தில் காணப்பட்டது.
இந்து பத்திரிகையின் ஆசிரியர் பகுதியில் இந்தியா அந்தப் பத்தியைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு (ஹமாஸ் என்று பெயரிடப்படவில்லை என்றாலும்) பிரேரணைக்கு வாக்களித்திருக்கலாம் என்று சுட்டிக் காட்டியதுடன் வாக்கு தொடர்பான விளக்கத்தில் ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடாத்திய தாக்குதல்கள் குறித்த எந்தவொரு விசேட குறிப்பினையும் தவிர்த்தமைக்கு தனது வருத்தத்தை பதிவு செய்தது.
இந்த விடயத்தில் இந்தியா பிரான்ஸைப் பின்பற்றியிருக்கலாம் என்று இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. “இந்தியாவின் வாக்கெடுப்பு, இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் நடக்கும் வன்முறையில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்குப் பதிலாக, பாதுகாப்பான நிலையைத் தேடுகின்ற, மோடி அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.
இது அந்த நேரத்தில் காஸா மீதான பதிலடித் தாக்குதல்களில் இஸ்ரேல் “அதிகப்படியான சக்தியை" நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த UNGA 2018 இல் இந்தியாவின் வாக்கெடுப்பிலிருந்து விலகுவதாகும்" என்று இந்து பத்திரிகை கூறியுள்ளது.
"ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தைத் தவிர்ப்பது, உலகளாவிய தெற்கின் குரலாக இருக்க வேண்டும் அல்லது உலகளாவிய உயர் நிலையில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் ஒத்திசைக்கவில்லை" என்று அது மேலும் கூறியது.
பூகோள அரசியல் பரிசீலனைகள்
பலஸ்தீனப் பிரச்சினையில் இந்தியா தனது பாரம்பரிய நிலைப்பாட்டில் இருந்து விலகுவதற்கு ஒரு முக்கிய காரணம், அதன் எல்லைகள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவுக்கு எதிராக அதன் பாதுகாப்பிற்காக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்து இருப்பதுதாக அமைகிறது.
2022ல் மாத்திரம் இந்தியா இஸ்ரேலிடம் இருந்து 327.83 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ உபகரணங்களை வாங்கியது. 1971 மற்றும் 1999 இல் நடந்த இந்திய - பாகிஸ்தான் போர்களின் போது இஸ்ரேலிடமிருந்து பெறுமதிமிக்க உளவுத்துறையையும் பெற்றிருந்தது.
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி ஓய்வுபெற்ற எட்டு இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு கட்டார் நீதிமன்றம் சமீபத்தில் மரண தண்டனை விதித்ததும் புதுடில்லியில் ஹமாஸ் எதிர்ப்பு உணர்வுக்கு பங்களித்திருக்கலாம். கட்டாரை இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பார்க்கின்றன.
தேர்தல் கணிப்பீடுகள்
இங்கே தேர்தல் கணிப்பீடொன்றும் உள்ளது. நரேந்திர மோடியின் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வட இந்தியப் பகுதியில் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவு உள்ளது, இது பயங்கரவாத எதிர்ப்பு மட்டுமல்ல, முஸ்லீம் எதிர்ப்பாகவும் அமைகிறது.
எனவே, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய வட இந்திய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் மற்றும் மே 2024 இல் நடைபெறவுள்ள தேசியத் தேர்தல்களின் பின்னணியில் இந்து தேசியவாத விடயத்திற்கு பங்காற்றுவது பாஜக (BJP) அரசாங்கத்திற்கு பொருத்தமாகின்றது.
பாஜக (BJP) அரசின் நிலைப்பாடு இந்திய முஸ்லிம்களை நிச்சயமாக அந்நியப்படுத்தும், ஆனால் பெரும்பான்மை இந்து சமூகத்தின் வாக்குகளை திரட்ட முடிந்தால் அது கவலையளிப்பதாக அமையாது.
முஸ்லிம் உலகம்
சர்வதேச அளவில், இந்தியாவின் நிலைப்பாடு அரபு மற்றும் முஸ்லீம் உலகங்களிலிருந்து அதை அந்நியப்படுத்தக்கூடும், அங்கு மில்லியன் கணக்கான இந்தியர்கள் வேலை செய்து பில்லியன் கணக்கான டொலர்களையும் பணமாக அனுப்புகிறார்கள்.
பொருளாதார நலன்களுக்காக மோடி அரசாங்கம் நெருங்கிய உறவை வளர்த்து வரும் ஈரான் மற்றும் மத்திய ஆசிய குடியரசுகள் போன்ற பிற முஸ்லீம் நாடுகள், இந்தியாவுடன் சகோதர உறவுகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல் போகலாம்.
கடற்படை அதிகாரிகளின் பிரச்சினை
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஓய்வுபெற்ற 8 இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய கட்டார் அதிகாரிகளை வற்புறுத்த புது டில்லி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும், மில்லியன் டொலர் கேள்வியாக இருப்பது: UNGA இல் காஸா பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்காக கத்தாரிகள் இந்தியாவின் மீது வெறுப்பை வைத்திருப்பார்களா அத்தோடு கண்டனம் செய்யப்பட்ட இந்திய குடிமக்களைக் காப்பாற்ற தலையிட மறுப்பார்களா?"
P.K. பாலச்சந்திரன் கொழும்பில் உள்ள ஒரு சுயாதீன ஊடகவியலாளரென்பதுடன் பல ஆண்டுகளாக பல்வேறு செய்தி இணையதளங்கள் மற்றும் நாளிதழ்களில் தெற்காசிய விவகாரங்கள் குறித்து எழுதுகிறார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் எக்னாமிஸ்ட் ஆகியவற்றிற்கு கொழும்பு மற்றும் சென்னையில் இருந்து அறிக்கை அளித்துள்ளார். இலங்கையில் டெய்லி மிரர் மற்றும் சிலோன் டுடே ஆகிய பத்திரிக்கைகளில் வாராந்த பத்தி ஒன்றை எழுதுகின்றார்.
Comments (0)
Facebook Comments (0)