மார்ச் 31: பலவந்தமாக எரிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான பிரார்த்தனைக்கும் ஆதரவுக்கும் நினைவுபடுத்தலுக்குமான நாள்

மார்ச் 31: பலவந்தமாக எரிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான பிரார்த்தனைக்கும் ஆதரவுக்கும் நினைவுபடுத்தலுக்குமான நாள்

அஷ்ஷெய்க் எம்.எச்.எம். புர்ஹான் (பஹ்ஜி)
தலைமை நிர்வாக அதிகாரி - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா

மார்ச் 31, 2020 அன்று, இலங்கையின் நீர்கொழும்பில் COVID-19 பாதிப்புக்குள்ளான ஒரு முஸ்லிமின் ஜனாசா முதல் தடவையாக பலவந்தமாக எரிக்கப்பட்டது.  இது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சோகமானதும் வேதனையானதுமான  அத்தியாயத்தை  தொடக்கி வைத்தது. 

அதைத் தொடர்ந்து வந்த மாதங்களில், 29 நாள் குழந்தை உட்பட பாதிக்கப்பட்டவர்கள் 278 பேர்  குடும்பங்களின் விருப்பத்திற்கு மாறாக தகனம் செய்யப்பட்டனர். தகனம் செய்யப்படுவோம் என்ற  பயத்தினால்  பல முஸ்லிம்கள்  COVID 19 ஆல் பாதிக்கப்பட்டபோது மருத்துவ உதவியை நாடுவதைத் தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகினர்.

கட்டாய தகனம் தேசிய மற்றும் சர்வதேச சீற்றத்தைத் தூண்டியது, மனித உரிமை அமைப்புகளும்  உலகளாவிய முஸ்லிம் சமூகங்களும்  இந்தக் கொள்கையைக் கண்டித்தன. COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் உடல்களைக் கையாள்வதற்கான  ஒரே வழியாக  தகனம் செய்வதை திணிப்பது மனித உரிமை மீறலுக்கு இணையானது.  

இறந்த உடல்களை அடக்கம் செய்வதனால்  COVID-19 போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம்  அதிகரிக்கும் என்பதற்கு இலங்கையிலோ அல்லது வேறு  நாடுகளிலோ நிறுவப்பட்ட மருத்துவ அல்லது அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை.

இஸ்லாத்தில், தகனம் செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, இறந்தவர்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அடக்கம் செய்வதையே  மார்க்கம்  வலியுறுத்துகிறது. இறந்த பிறகும் மனித உடல் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று இஸ்லாம் கற்பிக்கிறது. உடலை எரிப்பது அதன் புனிதத்தை மீறுவதாகக் கருதப்படுகிறது.

மறுமை  நாளில் உடல் ரீதியான உயிர்த்தெழுதலில் இஸ்லாம் நம்பிக்கை கொண்டுள்ளது. இறைவனால்  எந்த வடிவத்தையும் உயிர்ப்பிக்க முடியும்  என்றாலும், தகனம் என்பது இறந்த உடலைக் கையாள்வதற்கான  இயற்கைக்கு முரணான  வழியாகக் கருதப்படுகிறது என்பதோடு  மறுமை வாழ்க்கை பற்றிய  இஸ்லாமிய நம்பிக்கை மரபுகளுக்கும்  முரணானது. 

குற்றவாளிகள் அல்லது எதிரிகளின் விவகாரங்களில்  கூட, இறந்தவர்களை எரிப்பதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகத் தடுத்த சம்பவங்கள் நிறைய  உள்ளன, நெருப்பை உடல்களை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறையாகப் பயன்படுத்தக்கூடாது என்பதை அவை உறுதிப்படுத்துகின்றன.

இவற்றை வைத்து, தகனம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது (ஹராம்) என்று இஸ்லாமிய அறிஞர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொள்கிறார்கள். கழுவுதல் (குஸ்ல்), கஃபன் (கஃபன்) மற்றும் தொழுகை  (ஜனாசா) உள்ளிட்ட இஸ்லாமிய சடங்குகளைப் பேணி அடக்கம் செய்வதற்கே  முஸ்லிம்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

அடிப்படை உரிமையை மீறி  மேற்கொள்ளப்பட்ட இந்த பலவந்த எரிப்பு  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழமான மன உளைச்சலையும் ஆத்மார்த்தமான   காயங்களையும்  ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அவர்களின் அன்புக்குரியவர்களுக்காக துக்கத்தை வெளிப்படுத்தவும் இறுதி சடங்குகளைச் செய்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

"(பூமியாகிய) அதிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை மீண்டும்  வெளிப்படுத்துவோம்." (குர்ஆன் 20:55) என்ற இறைவனின்  கட்டளைப்படி அடக்கம் செய்வதும் மீண்டும் மண்ணுக்கே சமர்ப்பிப்பதும்  ஒரு சன்மார்க்கக்  கடமை என்று  இஸ்லாம் கற்பிக்கிறது. இதைப் புறக்கணிப்பதன் மூலம்,  மதச்  சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித கண்ணியம் இரண்டுமே மீறப்படுகிறது.

இந்த வேதனையான அநீதியை  ஞாபகப்படுத்தும்  வகையில் வகையில் , மார்ச் 31 ஆம் தேதியை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான  பிரார்த்தனைக்கும் , உணர்வுகளை பிரதிபலிப்பதற்கும்  ஆதரவு வழங்குவதற்குமான  நாளாக அனுஷ்டிப்பதற்கு  அனைத்து சமூகங்களுக்கும்  நாம் அழைப்பு விடுக்கிறோம்,

இந்த நாளில், கண்ணியமாக  அடக்கம் செய்வதற்கு மறுக்கப்பட்டவர்களின் ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களை அணுகி ஆறுதலையும் , ஆதரவையும்  நட்புறவையும் வெளிப்படுத்துங்கள்.

இழப்பிலிருந்தும்   அதன் பாதிப்புக்களில் இருந்தும் வெளியே வருவதற்குப்  போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு  உணர்வு ரீதியான  ஆதரவையும், சட்ட வழிகாட்டல்கள்  மற்றும் சாத்தியமான உதவிகள்  மூலம் அனைத்து வழிகளிலும் உதவி வழங்குங்கள். செய்த தவறுக்கு பரிகாரம் தேடி, அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதன் மூலம் நாங்கள் பிராயச்சித்தம்  தேடுவோம்.

கட்டாய தகனக் கொள்கை பின்னர் மாற்றப்பட்டாலும், துயரங்கள் மாறாமலேயே இருக்கின்றன. ஒரு தேசமாக, இந்த அநீதியை நாம் ஏற்றுக்  கொள்ள வேண்டும், இதுபோன்ற மீறல்கள் மீண்டும் ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் இரக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒன்றாய்  இணைந்து நிற்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரவும், அவர்களது குடும்பங்களுக்கு  துணை நிற்கவும், ஒவ்வொரு தனிநபரினதும்  கண்ணியம் வாழ்விலும் மரணத்திலும் மதிக்கப்படுகின்ற  எதிர்காலத்தை உறுதியளிக்கவும்  நல்லெண்ணம் கொண்ட  அனைத்து மக்களுக்கும்  அழைப்பு விடுக்கிறோம்.

ஒரு தேசமாக நாம் இன, மத மற்றும் மொழிப் பன்மைத்துவத்தைக்   கொண்டாட வேண்டும். ஒவ்வொரு இலங்கையரும் ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்தையும் மத நம்பிக்கைகளையும் பாதுகாக்க உறுதி பூண  வேண்டும்.

ஏப்ரல் 6 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொழும்பு 6 இல் உள்ள மரைன் கிராண்ட் மண்டபத்தில்  பல இனங்களினதும் சங்கமத்துடன்  ஒரு நினைவு நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.