நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்; உயர் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மாற்று வழிமுறைகள்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்
பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவின் பிரகாரம், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் 18-09-2023 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், 2023-10-03 அன்று, முதல் வாசிப்புக்காக இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டமூலமானது நிகழ்நிலை அமைப்புகளின் பாதுகாப்பிற்கான ஆணைக்குழுவை நிறுவுதல், சில நிகழ்நிலை தகவல்தொடர்பாடல்களைத் தடை செய்தல் மற்றும் போலி நிகழ்நிலை கணக்குகளைத் தடை செய்தல் போன்றவற்றை திட்டமிடுகிறது.
சமூக ஊடக ஆர்வலர்கள், ஊடக நிறுவனங்கள், சட்டத்தரணிகள் அமைப்புகள் மற்றும் சிவில் ஆர்வலர்கள் ஆகியோர் இந்த சட்டமூலம் குறித்து கடுமையான கரிசனைகளை எழுப்பினர்.
குறிப்பாக இந்த சட்டமூலத்தின் ஏற்பாடுகள் மூலமாக பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தை விமர்சிக்கும் சமூக ஊடக ஆர்வலர்கள் இந்த சட்டத்தின் ஏற்பாடுகளால் இலக்கு வைக்கப்படலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு
இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இந்த சட்டமூலத்தின் அரசியலமைப்புக்கு அமைவான தன்மையை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் 51 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை 3 உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை செய்து, அரசியலமைப்பின் 120வது உறுப்புரையின் பிரகாரம், தீர்மானம் சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டது.
07-11-2023 அன்று பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் இந்த தீர்ப்பினை அறிவித்தார். அந்த தீர்ப்பின்படி, பிரிவுகள் 3, 5, 7, 9, 11, 12, 13,14, 15,16,17,18,19, 20, 21, 22, 23, 24, 25, 26,27,28, 29, 30,31, 32, 36, 37, 42, 45, 53 மற்றும் 56 ஆகியன அரசியலமைப்பின் பிரிவு 84(2) இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் பாராளுமன்றத்தில் இல்லாத உறுப்பினர்களையும் சேர்த்து மூன்றில் இரண்டு பங்கு அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படியே அங்கீகரிக்கப்படலாம்.
உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் முன்மொழிந்த திருத்தங்களின் பிரகாரம், கூறப்பட்ட உறுப்புரைகள் குழுநிலையில் திருத்தப்பட்டால், இந்த சட்டமூலத்தை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும். சட்டமூலத்தின் மற்றைய ஏற்பாடுகள் அரசியலமைப்புடன் ஒத்துப்போகின்றன என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
சட்டமூலத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழிமுறை தொடர்பான மாற்றீட்டு நிகழ்வுகள்
அதன்படி, சட்டமூலம் தொடர்பாக அரசாங்கத்தின் முன்பாக பல தெரிவுகள் உள்ளன. அவையாவன,
1. சட்டமூலத்தை மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றுதல்
2. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை குழுநிலையில் உள்ளடக்கி, எளிய பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்றுதல்
3. குழு நிலையில் ஊடக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கி சட்டமூலத்தில் திருத்தம் செய்தல்.
4. இரண்டாவது வாசிப்புக்கு செல்லாமல் சட்டமூலத்தை மீளப்பெறல்
இதில், குழுநிலையில் உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை இணைத்து, எளிய பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கே அதிகமான வாய்ப்புள்ளது.
குழுநிலை விவாதத்தில் திருத்தங்களைச் சேர்ப்பதற்கான மட்டுப்பாடுகள்
குழுநிலையில் சட்டமூலத்தை திருத்தும்போது பாராளுமன்றம் கருத்திற் கொள்ள வேண்டிய இரண்டு விடயங்கள் உள்ளன.
1. உயர் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை உள்ளடக்குதல். இந்தப் பரிந்துரைகள் உள்ளடக்கப்படாவிட்டால் சட்டமூலம் மூன்றில் இரண்டு பங்கு அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
2. உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படாத சட்ட உறுப்புரைகளைத் திருத்தும்போது, அரசியலமைப்பின் 78(3) வது உறுப்புரை நிர்ணயித்த மட்டுப்பாடுகளுக்குள் செயற்படுவதற்கான சட்டப்பூர்வ கடப்பாடு பாராளுமன்றத்துக்கு உண்டு. அந்தக் மட்டுப்பாடுகளாவன, பாராளுமன்றத்தில் ஒரு சட்டமூலத்தில் செய்யப்படும் எந்தவொரு திருத்தமும் அந்த சட்டமூலத்தின் சாராம்சம் மற்றும் கொள்கைகளுக்குப் புறம்பாக இருக்கக் கூடாது என்பதாகும்.
உயர் நீதிமன்றத்தால் திருத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்ட உறுப்புரைகள்
இந்த சட்டமூலத்தை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற 56 உறுப்புரைகளில் 31இனை திருத்துவதற்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. குழுநிலையில் அந்த உறுப்புரைகளைத் திருத்தும்போது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து பாராளுமன்றம் விலகக் கூடாது.
ஆனால் அரசியலமைப்பின் உறுப்புரை 78(3)ன் மட்டுப்பாடுகளுக்குள் பாராளுமன்றம் குழுநிலையில் மற்றைய உறுப்புரைகளை திருத்தலாம். விமர்சகர்கள் ஆணைக்குழுவின் சுதந்திரம், குற்றங்களின் விரிவான விளக்கங்கள், ஆணைக்குழுவின் அதிகாரங்கள், சட்டமூலத்தில் செயற்பாட்டிலுள்ள ஏற்பாடுகள் போன்றவற்றை வலியுறுத்தினர்.
இந்தச் சட்ட உறுப்புரைகள் அனைத்தையும் திருத்துவதற்கு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. மற்றைய உறுப்புரைகள் பொதுவான நடைமுறை விடயங்களுடன் தொடர்புடையவை என்பதுடன் அந்த உறுப்புரைகளை திருத்துவது இந்த சட்டத்தின் தாக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தாது.
இப்போது சிவில் சமூகம் என்ன செய்ய முடியும்?
1. சட்டமூலத்தை மீளப்பெற்று, விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு மீள வரைவு செய்யுமாறு கோருதல்
2. சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தல்
3. சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் விதிகளை உருவாக்குவதில் தலையிடுதல்
புதிய சட்டமூலத்தை உருவாக்குவதன் முக்கியத்துவம்
தற்போதைய சட்டமூலம் எந்தவொரு பங்குதாரர்களுடனும் கலந்தாலோசிக்காமல் வரைபாக்கப்பட்டதுடன், இந்த சட்டமூலத்திற்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் அதிகமான எதிர்ப்புகள் இருந்தன.
இந்த சட்டமூலத்தை, தொடர்புடைய அமைச்சர் மீளப் பெறுவார் என்று உத்தியோகபூர்வமற்ற தகவலும் கூட பரவியது. மேலும், மேலே கலந்துரையாடப்பட்டபடி, வரைவின் 56 உறுப்புரைகளில் 31 இனை திருத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
எனவே, புதிய வரைவைத் தயாரிக்கும் திட்டத்துடன் இந்த சட்டமூலத்தை திரும்பப் பெறுவதே அரசுக்கு சிறந்த வழிமுறையாகும். இதனை தொடர்புடைய பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதே சிறந்த நடைமுறையாகும்.
அத்தகைய செயற்பாட்டின் மூலம், அரசாங்கமும் குடிமக்களும் அந்தச் சட்டத்தின் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்தும் அதே வேளையில் மிகவும் சாதகமான சட்டத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அத்துடன் சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
ஜகத் லியான் ஆராச்சி,
சட்டத்தரணி
Comments (0)
Facebook Comments (0)