இலங்கைக்கு இம்முறை 35 பேசா விசாக்கள் மாத்திரம்
புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக இலங்கைக்கு இம்முறை 35 பேசா விசாக்கள் மாத்திரமே வழங்கப்படும் என சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு அறிவித்துள்ளது.
Free Moment Pass என்று அழைக்கப்படும் பேசா விசா, சவூதி அரேபியாவினால் இலவசமாக வழங்கப்படுவது வழமையாகும். இதற்கமைய, 2022ஆம் ஆண்டில் 68 பேசா விசாவும், 2023 ஆண்டில் 150 பேசா விசாக்களும் வழங்கப்பட்டன.
எனினும், பேசா விசாப் பங்கீட்டில் அரசியல் தலையீடுகள் காணப்படுகின்ற விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக வெளிக்கொணரப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே, சவூதி அரேபியாவினால் இந்த வருடம் இலங்கை 35 பேசா விசாக்கள் மாத்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால், அரச ஹஜ் தூதுக்குழு மற்றும் அரச ஹஜ் குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிநிதிகள், யாத்திரீகர்களுக்கான மருத்துவ குழு, புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சரினால் சிபாரிசு செய்யப்படுவோர் ஆகியோருக்கு மாத்திரமே இந்த 35 பேசா விசாக்களையும் பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஹஜ் குழுவின் உறுப்பினரொருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
"முன்னர் வழங்கப்படுவது போன்று இந்த வருடம் ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு பேசா விசாக்கள் வழங்கப்படாது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையிலிருந்து இந்த வருடம் ஹஜ் யாத்திரீகையினை மேற்கொள்ள 3,500 பேருக்கு சவூதி அரேபியாவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இடம்பெற்றது.
புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் கலாநிதி தௌபீக் பின் பௌஸான் அல் ராபியா ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
Comments (0)
Facebook Comments (0)