இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விநியோகிக்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் குறித்த நிலவரம்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விநியோகிக்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் குறித்த நிலவரம்

இலங்கையில் திட்டமிட்ட காலப்பகுதிக்கு முன்னரே தடுப்பூசி திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு இந்தியாவின் முதலாவது தொகுதி தடுப்பூசி  ஊடாக சந்தர்ப்பம் கிடைத்திருந்தது என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

இந்திய தயாரிப்பு தடுப்பூசிகளை இலங்கைக்கு விநியோகிப்பது குறித்த தற்போதைய நிலவரம் தொடர்பான ஊடக கேள்விகளுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் வழங்கிய பதிலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட்-19 பெருநோய்க்கு எதிராக ஒன்றிணைந்து போராடும் இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு அமைவாக இருதரப்பு செயற்பாடுகள் ஊடாகவும்  கொவக்ஸ் ஏற்பாட்டின் மூலமாகவும் 2021 ஏப்ரல் 09ஆம் திகதி வரையில் 64.51 மில்லியன் தடுப்பூசி கூறுகளை 85 நாடுகளுக்கு இந்தியா விநியோகித்திருக்கின்றது.

இதற்கு மேலதிகமாக ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார பணியாளர்கள் மற்றும் அமைதிப் படையினருக்கும் அந்த தடுப்பூசி கூறுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஆசியா, பசுபிக் மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த நாடுகளுக்கும் இதுபோன்ற விநியோகங்கள் கடந்த வாரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளன இதுவரையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனக்கா கொவிட்19 தடுப்பூசியின் 1.2 மில்லியன் கூறுகள் அடங்கிய 3 தொகுதிகள் இவ்வருடம் ஜனவரி பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களிலும் இலங்கையை வந்தடைந்துள்ளன.

கடந்த மார்ச் மாதம் கொவக்ஸ் ஏற்பாட்டின் ஊடாக இறுதியாக அனுப்பப்பட்ட தடுப்பூசி தொகுதியும் இலங்கையை வந்தடைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் மிகவும் பெரியதாக இருக்கும் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி ஆளுமையானது உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் உலகளாவிய அவசர தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்தது.

தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவரும் விநியோகமானது தயாரிப்பு மற்றும் உள்நாட்டு தேவை போன்ற பல்வேறு விடயங்களை கவனத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொவிட்-19 நோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டங்களில் இந்தியா தொடர்ந்தும் முன்னிலை வகித்துவரும் அதேவேளை உரிய பங்குதாரர்களுடன் தனது ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளது" என்றார்.