300க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு பேஸ்புகின் அடிப்படைகள் தொடர்பில் பயிற்சியளிக்க தயாராகிறது CIR
பேஸ்புக் ஊடகவியல் திட்டம் மற்றும் இலங்கை புலனாய்வு அறிக்கையிடல் மையம் (CIR) ஆகியன நாடு முழுவதிலும் 300ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களைப் பயிற்றுவிப்பதற்காக கூட்டிணைந்து செயற்படும் திட்டத்தை அறிவித்துள்ளன.
“பேஸ்புக்கின் ஊடகவியலாளர்களுக்கான அடிப்படைகள்” என்ற தலைப்பில் மூன்று வார கால பயிற்சித் திட்டம், வாராந்தம் மூன்று மணிநேர செய்முறையுடனான கலந்துறையாடல் அமர்வாக ஒன்லைனில் நடத்தப்படுகிறது. இந்த அமர்வுகள் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் நடத்தப்படவுள்ளன.
இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்கள் தமக்கான பாதுகாப்பு முறைகளைப் புரிந்துகொள்வதற்கும், பயனுள்ள விதத்தில் தமது ஆக்கங்களை சுவாரசியமாக கூறுவதற்காக பேஸ்புக் தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் தெளிவுபெறும் நோக்கில் இந்த பயிற்சி அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
பேஸ்புக்கில் ஊடகவியாலாளர்களுக்கான சிறந்த நடைமுறைகள், பேஸ்புக் சமூக நியமங்கள், ஊடகவியலாளர்களுக்கான ஒன்லைன் பாதுகாப்பு மற்றும் பேஸ்புக்கில் சமூகங்களை உருவாக்குதல் ஆகிய விடயங்கள் இந்த பயிற்சி நெறியில் உள்ளடங்குகின்றன.
“இலங்கையின் செய்தியாளர் சமூகத்தின் திறன் விருத்திக்கும், செய்திச் சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிப்பதற்கும் CIR உடன் கைகோர்ப்பதில் பெருமிதம் கொள்கிறோம், இதனால் அவர்கள் முக்கியமான பணிகளைத் தொடர முடியும்” என ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பேஸ்புக்கின் செய்திக்கான கூட்டுப் பணிப்பாளர் அஞ்சலி கபூர் தெரிவிக்கின்றார்.
“ஊடகவியலாளர்கள் உட்பட மக்கள் ஒவ்வொரு நாளும் பேஸ்புக்கைப் பயன்படுத்துவதால், அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் சமூக நியமங்கள் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை கற்றுக்கொள்வது முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்.
பேஸ்புக் தளத்தில் ஈடுபாடு கொள்பவர்களாக, ஊடகவியலாளர்கள் குறைந்த பட்சம் ஒன்லைன் பாதுகாப்பு பற்றிய பொதுவான புரிதல் மற்றும் வெறுப்பு பேச்சுகளுக்கு பதிலளித்தல், போலித் தகவல்கள் மற்றும் கேள்விக்குரிய உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் பொறிமுறைகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்தும் அறிந்திருக்க வேண்டும்” என்று புலனாய்வு அறிக்கையிடல் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டில்ருக்ஷி ஹந்துன்னெத்தி கூறினார்.
பேஸ்புக் ஊடகவியல் திட்டமானது உலகெங்கிலும் உள்ள வெளியீட்டாளர்களுடன் இணைந்து ஊடகவியலாளர்களுக்கும், அவர்கள் சேவை புரியும் சமூகங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துகிறது.
CIR, இலங்கையில் புலனாய்வு ஊடகவியல் திறன்களை சிறப்பான முறையில் ஊக்குவிக்கும் செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் முதலாவது மையமாக திகழ்கின்றது. அத்துடன் தெற்காசிய பிராந்தியத்திலும் புலனாய்வு ஊடகத்துறையை ஊககுவிக்கின்றது.
திறன்களை மேம்படுத்தல், புலனாய்வுச் செய்திகளுக்கான உள்ளடக்கங்களை உருவாக்கும் எண்ணக்கருக்களை விருத்தி செய்தல் ஆகிய இரண்டு முக்கிய விடயங்கள் மீதும் இந்த மையம் கவனம் செலுத்துகின்றது.
இந்த பயிற்சி நெறியில் கலந்துகொள்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் ஒன்லைன் படிவத்தை பூர்த்தி செய்வதன் ஊடாக விண்ணப்பிக்க முடியும்;
Comments (0)
Facebook Comments (0)