'இலங்கையிலிருந்து தமிழ் நாட்டுக்கு மின்சாரத்தினை விநியோகிக்க முடியும்'
நேர்காணல்: றிப்தி அலி
இலங்கையிலிருந்து இந்தியாவின் தமிழ் நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தினை விநியோகம் செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.
"மின்சார உற்பத்தியில் பாரியளவில் இலங்கை வளர்ச்சியடையுமாயின் இது சாத்தியப்படும். இதற்கு தேவையான புதுப்பிக்கத்த வளங்கள் அனைத்தும் இலங்கையில் காணப்படுகின்றன. இதன் ஊடாக இலங்கைக்கு வெளிநாட்டு அந்நியச் செலாவணியும் கிடைக்கும்" என அவர் குறிப்பிட்டார்.
தமிழ் நாட்டு அரசாங்கத்துடன் எனக்குள்ள நெருக்கமான தொடர்பினை பயன்படுத்தி இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் கூறினார்.
நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அந்நாட்டின் காலநிலை மற்றும் சுற்றாடல் அமைச்சராக 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை செயற்பட்டார்.
இதன் பின்னர், ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை செயற்பட்டார்.
இவ்வாறான நிலையில் கடந்த வருடம் ஓக்டோபர் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அவருடைய சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டார். இதற்கு மேலதிகமாக காலநிலை மாற்றத்திற்கான தமிழ் நாட்டு அரச சபையின் உறுப்பினராகவும் இவர் செயற்படுகின்றார்.
இவ்வாறான நிலையில் இந்த வாரம் இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொண்டு பல்வேறு சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார். இந்நிலையில் தமிழன் வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய விசேட நேர்காணலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குறித்த நேர்காணலின் முழுமை:
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரான உங்களின் பணி எவ்வாறு காணப்படுகின்றது?
கடந்த வருடம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றார்.
இதன் ஊடாக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து பல்வேறு நிதியுதவிகளை பெற்று நாட்டினை கட்டியொழுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
இதனை வினைத்திறனாக மேற்கொள்வதற்காவே ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையிலான நிறைய வளங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.
அது போன்று சூரிய சக்தி மற்றும் காற்றலை ஆகியவற்றின் ஊடாக மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு தேவையான வளங்களும் இலங்கையில் போதியளவில் காணப்படுகின்றன.
இதனை வினைத்திறனாக பயன்படுத்தினால் மின்சாரத் துறையில் பாரிய மறுமலர்ச்சியினை இலங்கையில் ஏற்படுத்த முடியும். இதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு கொண்டு வருவதே எனது பிரதான நோக்கமாகும்.
உலகளாவிய ரீதியில் பல காலநிலை ஆலோசகர்கள் காணப்படுகின்ற நிலையில் இந்த முக்கிய பதவிக்கு நீங்கள் நியமிக்கப்பட்டமைக்கான காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள்?
இலங்கை ஜனாதிபதி என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். காலநிலை தொடர்பில் எனக்கு விரிந்தளவில் சர்வதேச தொடர்புகள் காணப்படுகின்றன.
குறிப்பாக ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக செயற்பட்ட காலப் பகுதியில் பல்வேறு சர்வதேச நிறுவனங்ளுடன் இணைந்து பணியாற்றினேன்.
எனது கடந்த கால அனுபவங்களை வைத்து என்னிடமிருந்து பல ஆலோசனைகளை பெற முடியும் என்ற நம்பிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்னை இப்பதவிக்கு நியமித்திருப்பார் என நான் நம்புகின்றேன்.
அவரின் நம்பிக்கையினை உறுதிப்படுத்தும் வகையில் பல ஆலோசனைகளை தொடர்;ச்சியாக வழங்கிக் வருகின்றேன். காலநிலை விடயத்தில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அதிகளவில் தற்போது முன்னேறி வருகின்றன.
குறித்த இரண்டு நாடுகளிலும் எனக்குள்ள தொடர்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளேன்.
உங்களினால் முன்வைக்கப்படும் ஆலோசனைகளுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு எவ்வாறு உள்ளது?
இப்பதவிக்கு நியமிக்கப்பட்டது முதல் இன்று வரை எதிர்;க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா உட்பட மஹிந்த ராஜபக்ஷ முதல் தமிழ் கட்சித் தலைவர்கள் வரை பலரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளேன்.
குறிப்பாக இந்த முறை நான் இலங்கை வந்த போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களை சந்தித்து காலநிலை மாற்றம் மற்றும் தேசிய நல்லிணம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினேன். அவர்கள் அனைவரும் எனது காலநிலை தொடர்பான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் காலநிலை மாற்றத்தினை முன்னெடுப்பார்கள் என நினைக்கின்றீர்களா?
இலங்கையில் ஆட்சி மாறினாலும், காலநிலை மாற்றம் என்பது மிக முக்கியமானதொன்றாகும். இங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் காலநிலை மாற்றத் திட்டத்தினை முன்னெடுப்பர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
ஆட்சிக்கு வருகின்ற புதிய அரசாங்கங்கள் காலநிலை மாற்றத்திற்கு முக்கியத்தும் வழங்காவிட்டால் குறித்த வாய்ப்பினை பயன்படுத்த பல உலக நாடுகள் தயாராக இருக்கின்ற விடயத்தினை நான் இவ்விடத்தில் கூற விரும்புகின்றேன்.
காலநிலை பல்கலைக்கழகமொன்றினை நிறுவவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது இலங்கைக்கு வெற்றியளிக்குமா?
இந்த நாட்டின் முதலாவது காலநிலை பல்கலைகலைக்கழத்தினை நிறுவதில் ஜனாதிபதி மிகவும் பிடிவாதமாக உள்ளார். இது தற்காலத்திற்கு ஏற்ற முக்கியமான விடயமொன்றாகும்.
எனினும், வெளிநாட்டு மாணவர்களை கவரக்கூடிய வகையில் அங்கு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பிலான சர்வதேச வளவாளர்களை அழைத்து வந்து விரிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
இலங்கை எதிர்நோக்கும் காலநிலை பிரச்சினைகளுக்கு இந்த பல்கலைகத்தின் ஊடாக பல தீர்வுகளைப் பெற முடியும். இந்த பல்கலைக்கழத்தின் ஊடாக இலங்கைக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருதில்லை.
இம்மாத இறுதியில் டுபாயில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டின் ஊடாக இலங்கைக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா?
சர்வதேச ரீதியாக சுழலியல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான நிபுணர்கள், முதலீட்டாளர்கள் எனப் பல்துறை சார்ந்தவர்கள் இந்த மாநாட்டில் ஒன்றுகூடவுள்ளனர்.
இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு இந்த மாநாட்டில் நிச்சயமாக நன்மை கிடைக்கும். இலங்கை ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதுடன், இதில் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள வெப்ப மண்டல மாநாட்டினை ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
இதன் ஊடாக காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ரீதியான பிரபல்யம் பெற்ற முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களை ஜனாதிபதி நேரடியாக சந்தித்து இலங்கைக்கு பல முதலீடுகளை கொண்டு வர முடியும்.
புதுப்பிக்கத்த வளங்களைக் கொண்டு மின்சார உற்பத்தி செய்வதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
இந்த விடயத்தில் போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படவில்லை. இதனாலேயே மக்களின் எதிர்ப்புக்கள் ஏற்படுகின்றன.
விவசாய நிலங்களில் விவசாயம் செய்துகொள்கின்ற சமயத்தில் புதுப்பிக்கத்த சக்தியின் ஊடாக மின்சாரத்தினை உற்பத்தி செய்ய முடியும். இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நான் மன்னாருக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு மக்களை சந்தித்தேன். அந்த மக்கள் கூறுவதில் சில உண்மைகளும் உள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும். இதன் ஊடாக நிச்சயமாக அப்பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வினை வழங்க முடியும்.
அத்துடன், அதானி போன்ற வெளிநாட்டு நிறுவனங்களினால் புதுப்பிக்கத்த வளங்களைக் கொண்டு மின்சார உற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது அப்பிரதேச மக்களின் பொருளாதாரத்தினை கட்டியொழுப்புவதறகு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இதன் ஊடாக குறித்த பிரதேசங்களில் பொருளாதார மறுமலர்ச்சியினை ஏற்படுத்த முடியும்.
இலங்கை மின்சார சட்டத்தில் பரளவிலான மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது இலங்கைக்கு எவ்வாறு வெற்றியளிக்கும்?
மின்சார துறையில் இலங்கை துரித கதியில் வளர்ச்சி அடைய வேண்டுமாயின் மின்சார சட்டத்தில் திருத்தம் அவசியமாகும். இதற்கு ஒரு பொறிமுறை அவசியமாகும்.
அத்துடன் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு மின்சாரத்தினை விற்பனை செய்து வெளிநாட்டு நாணயத்திலேயே பணத்தினை பெற முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். அதற்கு தேவையான அனுமதி இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வந்து துரித கதியில் முதலீட்டினை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை இந்த சட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றீர்களா?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் நிச்சயமாக தீர்வு கிடைக்கும். எனினும், மக்கள் மத்தியில் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் அவசியமாகும்.
இன மத வேறுபாடுகளுக்கு மத்தியில் நாம் அனைவரும் இலங்கையர் என்று செயற்பட வேண்டும். இது இலங்கையின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமாகும்.
Comments (0)
Facebook Comments (0)