தேர்தல் சட்ட மறுசீரமைப்புக்கான தெரிவுக்குழுவினால் பொதுமக்களின் முன்மொழிவுகளைக் கோரல்
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த யோசனைகள், முன்மொழிவுகளை எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூலம் அனுப்பிவைக்குமாறு பாராளுமன்ற விசேட குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழு அதன் தலைவரும் சபை முதல்வரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி கூடியபோது பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த குழுவில் யோசனைகளை முன்வைப்பதற்கு எதிர்பார்க்கும் பொதுமக்கள் மற்றும் ஏனைய ஆர்வமுள்ள அமைப்புக்கள் தமது முன்மொழிவுகளை தபால் மூலம் அல்லது sec.pscelectionreforms2021@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக அனுப்பிவைக்க முடியும் என இந்த விசேட பாராளுமன்ற குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை அனுப்பிவைக்க விரும்புவோர் செயலாளர்,
பாராளுமன்ற விசேட குழு, இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
பிரதிநிதித்துவங்களை வழங்குபவர்களிடமிருந்து வாய்மொழிமூல சான்றுகளைப் பெற்றுக்கொள்ள குழு விரும்பினால் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நேரத்தில் குழுவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்படுவர் என்றும் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)