சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரட்ணத்தை நியமிக்க பாராளுமன்ற பேரவை அனுமதி
சட்டமா அதிபரின் ஓய்வைத் தொடர்ந்து புதிய சட்டமா அதிபராக பதில் சொலிசிட்ட ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டிருந்த பரிந்துரைக்கு பாராளுமன்ற பேரவை இணங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (20) நடைபெற்ற பாராளுமன்ற பேரவைக் கூட்டத்திலேயே இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தனவை மத்திய வங்கியின் நாணய சபையின் உறுப்பினராக மீண்டும் நியமிப்பதற்கும் பாராளுமன்ற பேரவை
பரிந்துரைத்துள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் உறுப்பினர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு எச்.ஜயந்த ஷாந்த குமார விக்ரமரட்னவை நியமிப்பதற்கும் குழு பரிந்துரைத்துள்ளது.
இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் உறுப்பினர் பதவிக்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.பீ.பெர்னாந்து அவர்களின் நியமனத்துக்கும் பாராளுமன்ற பேரவை பரிந்துரைத்திருப்பதாக செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)