ஜனாதிபதியின் கீழ் 31 அரச நிறுவனங்களும் பிரதமரின் கீழ் 88 அரச நிறுவனங்களும்

அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட 31 அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதிய அமைச்சர்களுக்குரிய விடயங்கள், பணிகள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த டிசம்பர் 10ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதற்கமைய பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் 31 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் குறித்த திணைக்கள் வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நிதி, பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சு புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு ஆகியவற்றின் அமைச்சராக செயற்படும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் 88 அரச நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.