தாமரைக் கோபுரம்: சீனா - இலங்கை உறவின் அடையாளம்

தாமரைக் கோபுரம்: சீனா - இலங்கை உறவின் அடையாளம்

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றான சீன மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு 70 வருட பூர்த்தியினை இந்த வருடம் கொண்டாடுகின்றது. இந்த ஏழு தசாப்த காலப் பகுதியில் எமது நாடான இலங்கையுடன் சீன மக்கள் குடியரசு  மிக நெருக்கமான உறவினை கொண்டு செயற்படுகின்றது.

இதற்கமைய நல்ல நண்பர், நல்ல அயலவர் மற்றும் நல்ல பங்காளர் என்ற பல்வேறு வகிபாகங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

"இலங்கையின் சுற்றுலா துறையிலும், வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்வதிலும், நிர்மாணங்களை மேற்கொள்வதிலும், வெளிநாட்டு உதவிகளை வழங்குவதிலும் சீனா முன்னணி வகிப்பதுடன் மிகப் பெரிய பங்காளராகவும் செயற்படுகின்றது' என இலங்கைக்கான சீன தூவர் Cheng Xueyuan, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் இலங்கையின் பல்வேறு செயற்த்திட்டங்களுக்கு சீனா அரசாங்கம் தொடர்ச்சியாக நிதியுவி வழங்கி வருகின்றது. அந்த அடிப்படையில் சீன அரசாங்கத்தின் நீண்ட கால கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்டதே லோட்டர்ஸ் டவர் என்று அழைக்கப்படும் தாமரை கோபுரமாகும்.

உலகின் முக்கிய நாடுகளை இலகுவில் அடையாளப்படுத்துவதற்காக அந்நாடுகளிலுள்ள உயரமான கட்டிடங்கள் மற்றும் கோபுரங்கள் ஆகியவற்றினையே குறிப்பதுண்டு. அந்த வகையிலேயே எமது நாட்டினை உலகளாவிய ரீதியில் அடையாளப்படுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படதே இந்த கோபுரமாகும்.

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி அப்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கொழும்பின் மத்திய பகுதியிலுள்ள டி.ஆர். விஜேயவர்தன மாவத்தையில் பேர வாவி மற்றும் தபால் திணைக்கள தலைமையகம் என்பவற்றிக்கு மிக அண்மையில் அமையப்பெற்றுள்ள இந்த கோபுரம் ஆசியாவில் 11ஆவது உயரமான கோபுரமாகவும், உலகலாவிய ரீதியில் 19ஆவது உயரமான கோபுரமாக திகழ்கின்றது.

சுமார் 356 மீற்றர் உயரம் கொண்ட  இந்த கோபுரம் பாரிஸ் நகரத்தின் பிரசித்தி பெற்ற ஈபிள் கோபுரத்தை விட இந்த கோபுரம் 32 மீற்றர் உயரமானதாகும். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இந்த கோபுரத்தினை அவதானிக்க முடியும். அதே போன்று சீரான காலநிலையின் போது சிவனொளிபாத மலையை இந்தக் கோபுரத்திலிருந்து காணக்கூடியதாகவிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு தொலைதொடர்பு மையத்தினை உருவாக்கல் மற்றும் சுற்றுலா துறையினை மேம்படுத்தல் ஆகியன இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டதன் பிரதான நோக்கமாகும்.

இலங்கையினை பாரிய தொலைத்தொடர்பு வலையமைப்பிற்குள் கொண்டு செல்லும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கோபுரத்தின் ஊடாக எதிர்காலத்தில் நாட்டிலுள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் எதிர்காலத்தில் டிஜிட்டல் மயப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இந்த தாமரை கோபுரத்தின் நிர்மாணத்திற்காக 104.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளது. இதில் 67 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியினை எக்ஸிம் வங்கி என்று அழைக்கப்படும் சீனாவின் மக்கள் குடியரசு வங்கி வழங்கியுள்ளதுடன் மிகுதி தொகையினை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு செலவிட்டுள்ளது.

30,600 சதுரஅடி அடிப்பரப்பினைக் கொண்ட இந்த கோபுரத்தில் சுமார் 200 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பாரம்பரியத்துடன் பின்னிப்பிணைந்த தாமரை மலரை ஒத்ததாக இந்த கோபுரத்தின் வடிவமைப்பு உள்ளது.

இந்த கோபுரத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டடக்  கலைப் பிரிவின் விரிவுரையாளர்களான பேராசிரியர் நிமல் டி சில்வா, பேராசிரியர் சமித்த மானவடு மற்றும் பேராசிரியர் சித்ரா வெட்டிக்கார ஆகியோர் தலைமை தாங்கிய குழுவின் மூலம் உருவாக்கப்பட்டது.

அத்துடன் சீனாவின் தேசிய இலத்திரனியல் ஏற்றுமதி, இறக்குமதி கூட்டமைப்பு மற்றும் ஏரோஸ்ப்பேஸ் லோங் மார்ச் இன்டர்நெஷனல் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இலங்கையின் கட்டடக் கலை வடிவமைப்பாளர்கள் இந்த கோபுரத்தின் அமைப்பை வரைந்து வடிவமைத்துள்ளனர்.

தாமரையின் இதழ்களை ஒத்த அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் அடிப்பகுதி நான்கு மாடிகளைக் கொண்டமைந்துள்ளது. இதில் வரவேற்பு மண்டபம், பார்வையாளர் மையம், கண்காட்சி மண்டபம், நாட்டுப்புற அருங்காட்சியகம், தொலைத்தொடர்பாடல் அருங்காட்சியகம், துணை அறைகள் மற்றம் அலுவலகங்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

தாமரை கோபுரத்தின் தண்டுப்பகுதி 200 மீற்றர் நீளம் கொண்டதாகும். இதில் செங்குத்து சுழற்சிக்கான படிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் அதி வேகமாக உயரும் மின் உயர்த்திகளும் இந்த தண்டுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விசேட மின்னுயர்த்திகள் மூலம் கோபுரத்தின் உச்சிக்கு வெறுமனே 40 செக்கன்களில் பயணிக்க முடியும்.

தாமரை கோபுரத்தின் மொத்த அழகும் சங்கமிக்கும் பகுதி கோபுர வீடாகும். தாமரை மொட்டின் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பகுதி எட்டு மாடிகளைக் கொண்டதாகும். இந்த கட்டமைப்பில் வியக்க வைக்கும் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளன. இந்த கோபுர வீட்டின் முதலாம் மாடி ஒளிபரப்பு அலை அறையாகவும், இரண்டாம் மாடி தொலைக்காட்சி அலைகளை அனுப்பும் அறையாகவும் பயன்படுத்தப்படவுள்ளது.

மூன்றாம் மற்றும் நான்காம் மாடிகள் விழாக்கள் மற்றும் வைபவங்களை நடாத்தும் ஒரே நேரத்தில் சுமார் 700 பார்வையாளர்கள் அமரக்கூடிய பிரதான திருமண வரவேற்பு மண்டபமாகவும், கேட்போர்கூடமாகவும் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் ஐந்தாம் மாடியில் விசேட கட்டடக்கலை அம்சங்களுடன் தன்னியக்கமாக சுழலும் திறன்கொண்ட விசேட உணவகம் அமையப்பெற்றுள்ளது.

ஒரே நேரத்தில் 300 பேர் அமரக்கூடிய வசதியுள்ள இந்த உணவகம் 90 நிமிடத்திற்கு ஒரு சுழற்சி என சுழன்று கொண்டே இருப்பதால் உணவு உட்கொண்ட வண்ணமே முழு கொழும்பு நகரத்தின் அழகையும் ஒரே பார்வையில் இரசிக்கக் கூடிய அரிய வாய்ப்பு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆறாவது மாடியில் விசேட சொகுசு அறைகள் காணப்படுவதுடன் ஏழாவது மாடி வெளிப்புற பார்வைத்தளமாக உள்ளது. இந்தப் பகுதியில் நின்றவாறே கொழும்பு நகரை ரசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கின்றது. கோபுர வீட்டுக்கு மேல் உள்ள பகுதியில் பொதுமக்களுக்கான அனுமதி தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்திலேயே தொலைக்­காட்சி மற்றும் வானொலி பண்பலைகளின் அன்டெனாக்கள் காணப்படுகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள அன்டெனாக்கள் வௌ;வேறு அதிர்வலைகளை துல்லியமாகப் பூர்த்தி செய்யக்கூடிய அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தின் 250 ஆவது மீற்றர் தொடக்கம் கோபுரத்தின் எல்லை வரை இந்த அன்டெனாக்கள் அமையப்பெற்றுள்ளன.

அந்த வகையில் இந்த கோபுரத்தில் 50 தனித்தனி ஒளிபரப்பு சேவைகள் 20 தொலைதொடர்பாடல் சேவைகள், பாது­காப்பு சமிக்ஞைகள், கொழும்பின் கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள எண்ணிலடங்காத தொலைக்காட்சி மற்றும் பண்பலையின் அன்டெனாக்களில் இருந்து வெளிவரும் சக்தி வாய்ந்த அலைகளை நீக்குதல் குறைத்தல் போன்ற வசதிகள் போன்றன அமையப்பெற்றுள்ளன.

இதன் நிர்மாணப் பணிகள் கடந்த 2012 நவம்பர் 12ஆம் ஆரம்பிக்கப்பட்டன. அன்றிலிருந்து சரியாக 912 நாட்களில் அதாவது 2015 மே மாதத்தில் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கமைய  2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோபுரம் 125 மீற்றர் உயரத்திற்கு எழும்பியதுடன் 2015ஆம் ஆண்டு ஜுலையில் 255 மீற்றர் உயரத்தை எட்டியது.

எனினும் குறிக்கப்பட்ட திகதியிலிருந்து நான்கு வருடங்களின் பின்னரே அதாவது கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக இந்த கோபுரம் திறந்துவைக்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த கோபுரத்தினை ஊடகவியலாளர்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்பினை கொழும்பிலுள்ள சீன தூதுவராலயம் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பாடு செய்திருந்தது.

தற்போது படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோபுரம் இதுவரை மக்கள் பாவனைக்காக விடப்படவில்லை என்பதனை குறித்த விஜயத்தின் போது அறிய முடிந்தது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் அதிகாரியொருவரிடம் வினவியதற்கு, "இலங்கை அரசாங்கத்திடமே இது தொடர்பில் கேட்டறிய வேண்டும்" என்றார்.

இது தொடர்பில் அறிய இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிகளில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக அரசாங்கத்திற்கு 5,475 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்கனவே ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கோபுரம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட நிலையில் இன்னும் மக்கள் பாவனைக்கு கையளிக்காமல் இருப்பதன் காரணமாக மேலும் பல மில்லியன் ரூபா நஷ்டம் அரசாங்கத்திற்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கையொன்றினை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.

இது போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் எமது நாட்டில் உரிய வகையில் பயன்படுத்தப்படாது உள்ளன. இதனால் லோட்டஸ் டவர் போன்று கட்டுமாணப் பணிகள் முடிவடைந்தும் மக்கள் பாவனைக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள செயற்திட்டங்களை அரசாங்கம் உடனடியாக இனங்கண்டு அவற்றினை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் ஊடாக அரசாங்கத்தின் வருமானத்தினை அதிகரித்து கடன் சுமையினை குறைக்க முடியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

-றிப்தி அலி-