INS வேலா கொழும்புக்கு விஜயம்
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலான INS வேலா மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பை வந்தடைந்துள்ளது. இலங்கை கடற்படையின் இசைக் குழுவினராலும் அணிவகுப்பு அதிகாரிகளாலும் இந்நீர்மூழ்கிக் கப்பலுக்கு சம்பிரதாய பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.
சுதேசிய தயாரிப்பான கல்வாரி வகையினைச் சேர்ந்த டீசல் இலத்திரனியல் வகையிலான இந்த நீர்மூழ்கிக் கப்பல் 2021 நவம்பர் 25 ஆம் திகதி இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டிருந்தது.
இவ்விஜயத்தின் அங்கமாக இக்கப்பலின் கட்டளை அதிகாரி கபில் குமாரிஸ் அவர்கள் இலங்கை கடற்படையின் மேற்கு பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் WDCU குமாரசிங்கே மேற்கு கடற் பிராந்திய தலைமையகத்தில் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் இலங்கை கடற்படை மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குறித்த நீர்மூழ்கிக் கப்பலுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும் வெலிசர இலங்கை கடற்படை முகாமில் குறித்த நீர்மூழ்கி கப்பலின் சிப்பந்திகள் மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது.
கப்பல்களுக்கான செயற்பாட்டு நடவடிக்கைகளின் அங்கமாக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இக்கப்பலை சேர்ந்த சிப்பந்திகள் கொழும்பைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். 2024 நவம்பர் 13 ஆம் திகதி இக்கப்பல் இலங்கையிலிருந்து புறப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியக் கடற்படை மற்றும் கரையோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் இலங்கையிலுள்ள துறைமுகங்களுக்கு வருகை தருவது வழமையான செயற்பாடாகும்.
இந்திய பிரதமரது நோக்கான பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் வளர்ச்சியும் பாதுகாப்பும் என்ற சாகர் கோட்பாடு மற்றும் அயலுறவுக்கு முதலிடம் என்ற இந்தியக் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் இரு அயல் நாடுகளிடையிலுமான தோழைமை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை இந்த விஜயம் மேலும் வலுவாக்குகின்றது.
Comments (0)
Facebook Comments (0)