முஸ்லிம் விவகார திணைக்களத்தின் பணிப்பாளரின் பதவியினை நீடிக்குமாறு முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியில் இப்றாஹீம் அன்சாhரை தொடர்ந்தும் நீடிக்கச் செய்யுமாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கைக் கடிதமொன்று பிரதமர் தினேஷ் குணர்வத்தனவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமத், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தௌபீக், இஷாக் ரஹ்மான், எஸ்.எம்.எம். முஷாரப், அலி சப்ரி றஹீம் மற்றும் மர்ஜான் பழீல் ஆகியோரே இக்கோரிக்கை கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த பதவிக்கு புதியவரை நியமிப்பதற்கான விண்ணப்பம் ஏற்கனவே பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் கோரப்பட்டு சிலரும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியில் இப்றாஹீம் அன்சாhரை தொடர்ந்தும் நீடிக்கச் செய்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அறுபது வயதை பூர்த்தி செய்த அனைவரும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்.
இந்த கொள்கையினை மீறி, இலங்கை சிவில் நிர்வாக சேவையினைச் சேர்ந்த ஒருவருக்கான இப்பதவியில் இலங்கை வெளிநாட்டு சேவையிலிருந்து ஓய்வுபெற்ற இப்றாஹீம் அன்சாரை அமர்த்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசின் அடிப்படையில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஆறு மாத காலப் பகுதிக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக இப்றாஹீம் அன்சார் கடந்த 2021.10.21ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
எனினும், இவருக்கு வழங்கப்பட்ட பதவி நீடிப்பு எதிர்வரும் டிசம்பர் மாத நடுப் பகுதியில் நிறைவடைகின்றது.
Comments (0)
Facebook Comments (0)